ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 2 (Post No.13,097)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.097

Date uploaded in London – — 16 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 2

ச.நாகராஜன் 

பிர்லாவின் வணிக சாம்ராஜ்யம்

சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என ஒவ்வொன்றாக அவர் தொழில் சாம்ராஜ்யம் விரிவை அடைந்தது.

1925இல் பல தொழிலதிபர்களை இணைத்து இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸை அமைத்தார்.

சிமெண்ட், அலுமினியம், கெமிக்கல்கள், ரேயான், இரும்பு பைப்கள், டெலிகாம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொன்றாக ஆரம்பித்தார்.

1940களில் அவர் கவனம் கார் தயாரிப்பில் திரும்பியது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கார்களை உற்பத்தி செய்ய ஆர்மபித்தார்.

ஹிந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார். பிர்லா குழுமத்தில் மூன்று லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர் என்றும் 2,50000 பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறதென்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்த பின்னர் அவருக்கு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே யுனைடெட் கமர்ஷியல் வங்கியை 1942ல் அவர் ஆரம்பித்தார். (பின்னால் இது யூகோ வங்கி என்று ஆனது)

கல்வித் துறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர் பிலானியில் பிர்லா எஞ்ஜினியரிங் காலேஜ் என்று பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். இன்று பிட்ஸ் பிலானி (Birla Institute of Technology and Science)s என்று அனைவராலும் வியந்து அழைக்கப்படும் பெரிய கல்வி நிறுவனத்தை அவர் வளர்த்ததோடு, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பலவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்ந்தார்.

பிர்லா நாட்டிற்காகச் செய்த சேவையை கௌரவிக்க 1957இல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தபால்தலையும் வெளியிடப்பட்டது.

குடும்பமும் வணிகமும்

துர்கா தேவி என்ற முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகனும் இரண்டாம் மனைவி  மஹாதேவி  மூலம் இரு மகன்களும் அவருக்கு உண்டு. மஹாதேவி மறைந்தவுடன் தனது மகன்களை கூட்டுக் குடும்பத்தின் பரிபாலிப்பில் அவர் விட்டார். தனது மகன்களை தனது சமூகத்தில் உள்ள இதர நல்ல வணிகர்களிடம் அனுப்பி வணிக முறைகளைக் கற்றுக் கொள்ளச் சொன்னார்.

அவர் வணிகத்தை நடத்திய விதமே தனி.’ நான் ஒரு பிஸினஸ்மேன் இல்லை’ என்று அவர் ஒரு முறை கூறிய போது அனைவரும் வியந்தனர்.

‘ஆம், எனது வணிகம், தொழில்கள் தானியங்கி பைலட்டாக செயல்படும், முக்கியமான பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் தான் என்னை அழைப்பார்கள்’ என்றார் அவர். அப்படி ஒரு நிர்வாகத் திறமை அவருக்கு இருந்தது.

பம்பாய் அலுவலகத்தில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலுமுள்ள அவரது நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட விவரங்கள் காலையில் அவருக்கு வந்து குவியும். அதில் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி, க்ராஸ் X குறி போடப்பட்டு உரியவர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும். தனது மேலாளர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கறாராகவே இருந்தார்.

காந்திஜி நினைவு இல்லம்

புது டில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சலவைக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோவில்களை பிர்லா குடும்பத்தினர் கட்டியுள்ளனர்.

 காந்திஜி தங்கி இருந்த பிர்லா மாளிகையை அரசு தன் கைவசத்தில் 1971ஆம் ஆண்டு எடுத்தது, அதை பொதுமக்களின் பார்வைக்காக காந்திஜியின் நினைவு இல்லமாகத் திறந்து வைத்தது.

 மறைவு

இந்தியாவின் பொருளாதாரத்தையும் கல்வித் துறையையும் தொழில் துறையையும் பெரிதும் மேம்படுத்திய ஜி.டி.பிர்லா 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் நாள் தனது 89ம் வயதில் மறைந்தார்.

 சம்பாதித்ததை சந்தோஷமாக அறவழியில் நன்கொடையாக அளி என்பது அவர் காட்டிய வழி!

உலகில் உள்ள எல்லா பொக்கிஷமும் மதிப்பே இல்லாதவையாகி விடும், அவற்றை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனில்! (All the treasure in the world is worthless, unless you have someone to share it with.) என்பது அவரது பொன்மொழி!

 ஆகவே கோடி கோடியாக அவர் நன்கொடையை தகுதி உள்ளோருக்குத் தந்து வந்தார். அவரது வழி வந்த அவரது குடும்பத்தினர் தவறாது அவர் வழியை இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆதித்ய பிர்லா குழுமம் கடந்த ஆண்டுகளில் 50 கோடி, 276 கோடி, 400 கோடி என்று அளித்து வரும்  நன்கொடை விவரங்களை அவ்வப்பொழுது செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.

அனைவருடனும் ஒத்து வாழ் என்பதே அவர் அனைவருக்கும் கூறிய அன்புரை.

‘அழகிய ரோஜா மலரும் வலியைத் தரும் முள்ளும் இணைந்து ஒன்றோடொன்று ஒத்துழைத்து இருப்பதைப் பார்த்தால்   நம்மால் அப்படி இருக்க முடியாதா என்ன?’ என்றார் அவர். (Rose- beauty, pricks- painful both cooperate with each other then why can’t we? )

இந்தியாவை சுதந்திரத்துடன் பொருளாதாரத்தில் வலிமை உள்ள நாடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவரது தாரக மந்திரம் : அனைவருக்கும் உதவுங்கள் என்பதே!

***

Leave a comment

Leave a comment