Date uploaded in London – – 17 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு பற்றி சங்கப் புலவர்களும் காளிதாசனும் செப்பியது என்ன ?
காளிதாசன் உலக மஹா கவிஞன் ; ஏழே நூல்கள் மூலம் புகழ்க் கொடி நாட்டியவன் ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விக்ரமாதித்யன் சபையை அலங்கரித்தவன். அவன் புகழுக்கு முக்கியக் காரணம் அவனுடைய 1500 உவமைகளாகும் ; அத்தனையும் பொருத்தமானவை மட்டுமல்ல; புராண இதிஹாச உவமைகள் முதல் இயற்கையில் காணும் அதிசயக் காட்சிகள் வரை அவன் பயன்படுத்தியுள்ளான். ( இது பற்றி இதே பிளாக்கில் நிறைய கட்டுரைகள் உள்ளன.)
2500 சங்கப்பாடல்களை இயற்றிய 450 புலவர்களில் ஒரு சிலரே சந்தன மரத்தில் தொங்கும் பாம்பு பற்றி பாடியுள்ளனர் ஆனால் ஏழே நூல்களை சம்ஸ்க்ருத மொழியில் நமக்கு விட்டுச் சென்ற உலகம் புகழும் காளிதாசனோ நிறைய இடங்களில் அதை உவமையாக பயன்படுத்தியுள்ளான். அவைகளை நேரில் கண்டுதான் அவன் பாடியிருக்கிறான் என்பதை மேலும் பல சந்தன மர உவமைகள் மூலம் அறிய முடிகிறது.
சுமார் 12 உவமைகளில் பாம்பு வசிக்கும் சந்தன மரங்கள், செஞ்சந்தனம், முலைகளில் சந்தனம் பூசுதல், சந்தன மரம் வேறு இடஙகளில் வளராது, மலய மலையில் மட்டுமே வளரும், பெரியோர்கள் இறந்தால் சந்தனக் கட்டைகளை அடுக்கி சிதைத் தீயில் எரித்தல் என்றெல்லாம் அவன் பாடியதைப் பார்க்கையில் அவனுக்கு தாவரவியல், பூகோள/ புவியியல் எல்லாம் தெரிந்ததையும் அறிகிறோம்.
முதலில் சங்கப் புலவர்கள் பாடியதைக் காண்போம்
இது கபிலரின் அருமையான உவமை ; நற்றிணையில் முதல் பாடலாக உள்ளது ; நற்றிணை நானூறு என்பது எட்டுத் தொகை நூல்களில் ஒன்று . சங்க இலக்கிய புலவர்களில் அதிகப் பாடல்களை யாத்த புலனழுக்கற்ற அந்தணன் அவன் . இதோ பாடல் :-
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!— (நற்றிணை 1;
எழுதியவர்: கபிலர்.)
பொருள்:- என் காதலர் சொன்ன சொல் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றும் என் தோள்களைப் பிரியாதவர்;குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி, உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் (தேனீக்கள்) சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்;
xxxx
பாம்பு பற்றி,
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே-
(-நற்றிணை 261; சேந்தன் பூதனார் பாடல்)
பொருள்:-
வானம் மின்னுகிறது. இருள் மண்டிக் கிடக்கிறது. வானில் இடி முழங்குகிறது. காய்ந்து கிடந்த காட்டை மறைத்துக்கொண்டு மேகங்கள் உயர்ந்த மலைக் குன்றுகளைத் தழுவிக்கொண்டு மழையாகப் பொழிகின்றது. நள்ளிரவு வேளை இது. பெருஞ்சினம் கொண்ட மலைப்பாம்பு மரத்தைப் பற்றிக்கொண்டு, யானையை இரையாக்கிக்கொள்ள வளைத்து இறுக்கும் வழி அது.எருவைப் பூவோடு சந்தனமும் மணக்கும் சிறிய மலைவழி அது.
xxxx
இத்துடன் சில காளிதாசன் பாடல்களை ஒப்பிட்டுக் காண்போம் :
भोगिवेष्टनमार्गेषु चन्दनानां समर्पितम्|
नास्रसत्करिणां ग्रैवं त्रिपदीच्छेदिनामपि॥ 4-48
bhogiveShTanamaargeShu candanaanaa.n samarpitam |
naasrasatkariNaa.n graiva.n tripadiicChedinaamapi || ரகுவம்சம் 4-48
சந்தன மரங்களில் பாம்புகள் சுற்றியதால் உண்டான தடங்களில், கால் சங்கிலிகளை அறுக்கும் தன்மை கொண்ட யானைகள் கட்டப்பட்டுள்ளன யானைகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறும் நழுவவில்லை. ரகுவம்சம் 4-48
********
स्रष्टुर्वरातिसर्गात्तु मया तस्य दुरात्मनः।
अत्यारूढम् रिपोः सोढम् चन्दनेनेव भोगिनः॥ 10-42
பொருள்
கொடிய விஷமுள்ள பாம்பு தன் மேல் ஏறுவதை சந்தன மரம் பொறுத்துக் கொள்ளுவது போல ராவணனுடைய அடாத செயல்களை நானும் பொறுத்தேன்; இதற்குக் காரணம் அவனுக்குப் பிரம்மதேவன் கொடுத்த வரமே 10-42 ரகுவம்சம்.
******
पित्र्यमंशमुपवीतलक्षणम्
मातृकम् च धनुरूर्जितम् दधत्।
यः ससोम इव घर्मदीधितिः
सद्विजिह्व इव चन्दनद्रुमः॥ 11-64
பரசுராமர் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர் ; தந்தை ஜமதக்கினி ஒரு பிராமண ரிஷி; தாயார் ரேணுகா , ஒரு அரசனின் மகள் ; அதாவது க்ஷத்ரியப் பெண் ; ஆகவே பரசுராமரிடம் பிராமண குணமான சாந்தியும் க்ஷத்ரிய குணமான வீரமும் காணப்பட்டன. இது உஷ்ணமான கிரணங்களுடைய சூரியனும், குளிர்ச்சியான கிரணங்களுடைய சந்திரனும் சேர்ந்து இருப்பது போல இருந்தது. குளிர்ச்சி தரும் சந்தன மரத்தில் விஷப் பாம்பு இருந்தது போல் காணப்பட்டது.
xxxx
சாகுந்தலம் என்ற நாடகத்தை முதலில் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்ததால் காளிதாசன் புகழ் பரவியது . அதிலும் பாம்பு- சந்தன மரம் உவமை வருகிறது :
உயிரினங்கள் இடத்தில் நல்ல மனிதன் பின்பற்றும் குணங்களை நீ மீறுவது ஏன் ? நல்ல சந்தன மணம் கமழும் மரங்கள் இருக்கும் காடுகளில் ஒரு குட்டிக் கரும் பாம்பு இருப்பதால் காட்டின் பெயரே கெடுவது போல அல்லவா இது இருக்கிறது — சாகுந்தலம் 7-18
to be continued…………………………………………..
TAGS– சந்தன மரப் பாம்பு , சங்கப் புலவர், காளிதாசன், சாகுந்தலம், ரகுவம்சம்