WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.128
Date uploaded in London – — 11 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்; முன்னேறுங்கள்! -2
ச.நாகராஜன்
முடா, முரா, முரி
இதற்காக தவிர்க்க வேண்டியவை மூன்று. முடா, முரா, முரி.
அது என்ன முடா, முரா, முரி? ஜப்பானிய வார்த்தைகளான இவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.
இந்த மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன?
முடா – கழிவு;, முரா – சமமற்ற தன்மை அல்லது உரிய தரத்துடன் இல்லாமலிருப்பது, ; முரி – அதிகச் சுமை – இது தான் இவற்றிற்கான அர்த்தம்.
இந்த மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.
முடா
ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா தான்! பொருளுக்கான தேவை சந்தையில் இல்லை என்றால் அதை உற்பத்தி செய்து என்ன பிரயோஜனம்? மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்வது தேவையற்ற ஒன்று. பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து உரிய முறைப்படி இருக்கிறதா?
இவை எல்லாம் முடா – தவிர்க்கப்பட வேண்டியவை.
முரா
அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!
தயாரிப்பு சரியான தரத்துடன் இருக்கிறதா? எப்படியாவது விற்பனை செய்வது என்பதல்ல நோக்கம். வாடிக்கையாளர் தாமே முன் வந்து வாங்க வேண்டும். ஆகவே சமமற்ற தன்மை எனப்படும் முராவும் தவிர்க்கப்பட வேண்டும்.
முரி
அடுத்து முரி எனப்படும் அதிகச் சுமை! சிக்கலாக உள்ளவற்றை எல்லாம் தொழிலாளர் மீது ஏற்றி அவர்களைச் சிரமப்படுத்துவது முரி.
அவர்களுக்குத் தேவை நல்ல பயிற்சி; அருமையான கருவிகள், சுத்தியலோ, ஸ்க்ரூ டிரைவரோ அற்புதமாக வேலை செய்ய வேண்டும்.
ஆக மிகக் கடுமையான தர நிர்ணயித்துடன் தயாரிக்கப்பட்ட டொயோடா வழி முறையிலான கார்கள் உலகெங்கும் ஓட ஆரம்பித்தன; அனைவரையும் பிரமிக்க வைத்தன!
ஓய்வும் மறைவும்
1950-ம் ஆண்டு 13 ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற டொயோடா ஒகோமோடோ என்ற இடத்தில் தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வு பெற வந்தார். ஆனால் அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தனக்கென ஒரு லாபரட்டரியை அங்கு உருவாக்கினார். ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.
ஆனால் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஒரு நாள் கிழே விழ அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் அவர் தனது 57-ம் வயதில் மரணமடைந்தார்.
‘’ஜப்பானிய தாமஸ் எடிஸன்’’ என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு அனைவரும் வருந்தினர்.
இன்றைய வளர்ச்சி
இன்று டொயோடா என்றால் நம்பிக்கைக்குரிய திறனுள்ள வாகனம் என்று உலக அளவில் பெயர் எடுத்துள்ளது. 20 வருட காலம் நீடித்து உழைக்கும் என்று வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
என்ன தான் கார் தயாரிப்பில் உலக அளவில் பெயரைப் பெற்று முன்னனியில் இருந்தாலும் டொயோடோ என்னும் தனது ஆரம்ப கால நெசவுத் தொழிலையோ தானியங்கித் தறிகள் தயாரிப்பையோ இன்னும் விடவில்லை. மின்னியங்கி தையல் மெஷின்களை அது தயாரித்து இப்போது உலகெங்கும் விநியோகித்து வருகிறது.
2023-ல் டொயோடாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 3,75,275,
2022-ல் டொயோடாவின் உற்பத்தி எண்ணிக்கை 10.61 மில்லியன் (106.1 லட்சம்) என்ற பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையாகும்.
வெற்றிக்குக் காரணம்!
டொயோடாவின் வெற்றிக்குக் காரணம் தொடர்ந்து புதிய உத்திகளை அவர் கையாண்டது தான்!
தொடர்ந்து முன்னேற்றங்களை – மேம்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கும் ஜப்பானிய உத்திக்குப் பெயர் கைஸன். இதை அவர் கையாண்டார்; வெற்றி பெற்றார்.
ஒரு முறை அவர் கூறினார் இப்படி:
“திருடர்கள் எங்களது வடிவமைப்புகளையும் திட்டங்களையும் பின்பற்றி தறிகளை அமைக்கலாம். அனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிமுறைகளைக் கையாண்டு எங்கள் தறிகளை புது மாதிரியாக மாற்றி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் எங்களது ஒரிஜினலில் நாங்கள் பட்ட தோல்விகளைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எங்களுக்குக் கவலையே இல்லை. நாங்கள் முன்னேற்றங்களை உருவாக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்.”
***