Post No. 13.150
Date uploaded in London – — 18 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முருகன் மீது விநாயகனின் புகார்!
ச.நாகராஜன்
விநாயருக்கு ஒரு புகார்.
யார் மீது?
முருகன் மீது!
நேராக தந்தையான சிவபிரானிடம் வந்தார்.
“ஐயனே! எனது காதை ஆறுமுகன் கிள்ளினான்” என்று புகார் செய்தார்.
சிவபிரான் விநாயகர் சிணுங்குவதைப் பார்த்து, முருகனிடம், “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்.
முருகனோ, ”அண்ணன் என் கண்களை எண்ணி கணக்கிட்டுப் பார்க்கிறான்.” என்று பதில் கூறினார்.
சிவபிரான் விநாயகரை நோக்கி, “இப்படி நீ ஏன் விகடம் பண்ணியாய்?” என்று கேட்டார்.
அதற்கு விநாயகர், “தம்பி என் துதிக்கையை முழம் போட்டான், அதனால் தான்!” என்றார்.
முருகன் சிரித்தவாறு நின்றார்.
சிவபிரான் பார்வதியை நோக்கி, “உன் பிள்ளைகளைப் பாராய்” என்று கூறினார்.
உடனே பல அண்டங்களை கர்ப்பமாய் பெற்ற உமா தேவி கணபதியை அருகிலே அழைத்தாள். மனமகிழ்ச்சி கொண்டாள்.
இப்படிப்பட்ட்ட உமா தேவி உம்மைக் காக்கக் கடவது.
இதை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
பாடலைப் பார்ப்போம்:
அரனவ னிடத்திலே யைங்கரன் வந்துதா னையவென் செவியை மிகவும்.
அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவு மத்தன்வே லவனை
நோக்கி,
விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில் விளங்குகண்
ணெண்னினனென,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து நீயப்படி விகடமேன்
செய்தாயென,
மருவுமென் கைந்நீளமுழ மளர்ந்தானென்ன மயிலவனகைத்து நிற்க,
மலையரையனுதவவரு முமையவளைநோக்கிநின் மைந்தரைப்
பாராயெனக்,
கருதரியகடலாடை யுலகுபலவண்டங் கருப்பமாய்ப்பெற்றகன்னி,
கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்
களிப்புடனுமைக் காக்கவே
பாடலின் பொருள் :
அரனவன் இடத்திலே – சிவபிரானிடத்தில்
ஐங்கரன் வந்து – விநாயகன் வந்து
ஐய – ஐயனே
என் செவியை – எனது காதுகளை
மிகவும் – மிகுதியாக
அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் – முருகன் கிள்ளினான் என்று சிணுங்கிடவும்
அத்தன் வேலவனை நோக்கி – சிவபிரான் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே – (அப்படி ஏன் செய்தாய் என்று) விரைவுடன் கேட்கவும்
அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினன் என – அண்ணன் என் முகத்தில் விளங்குகின்ற கண்களை எண்ணினான் என்று பதில் கூற
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து – வருந்துகின்ற பிள்ளையைப் பார்த்து சிவபிரான்
நீ அப்படி விகடமேன் செய்தாய் என – நீ அப்படி விகடம் ஏன் செய்தாய் என்று கேட்க
,
மருவும் என் கைந்நீளம் , – பொருந்துகின்ற என் துதிக்கையின் நீளத்தை
முழம் அளர்ந்தான் என்ன – முழம் போட்டான் அவன் என்று சொல்ல
மயிலவன் நகைத்து நிற்க – வேலவன் சிரித்தவாறு நிற்க
மலையரையன் – பர்வதராஜன்
உதவ வரும் – பெற வந்த
உமையவளை நோக்கி – உமாதேவியை நோக்கி
நின் மைந்தரைப் பாராய் என – உனது பிள்ளைகளைப் பாராய் என்று கூற
கருதரிய – நினைத்தற்கும் அரிய
கடலாடை – கடலை ஆடையாகத் தரித்த
உலகு பல அண்டங் கருப்பமாய்ப் பெற்ற கன்னி,- உலகத்தையும் பல அண்டங்களையும் கருப்பமாகப் பெற்ற என்றும் இளையவளாய் இருக்கும் பார்வதி தேவி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள் – கணபதியை அருகில் அழைத்து அகம் மிக மகிழ்ந்தான்
களிப்புடன் உமைக் காக்கவே – மகிழ்வாகி அவள் உம்மைக் காக்கக் கடவது!
எப்படி இந்தப் பாடல்!
***