உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! (Post No.13,158)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.158

Date uploaded in London – — 20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! 

ச.நாகராஜன் 

உழவுத் தொழிலை விட மேலானதொரு தொழில் இல்லை. உழவர் முன்னே சொல்ல அவரைத் தொழுது உண்பவர் எல்லாம்  அவர் பின்னே செல்வர்.

ஆனால் உழுவதற்கு உதவி வேண்டுமே!

இதோ உதவி செய்யத் தயார் என்று ஒரு தெய்வ பட்டாளமே வருகிறது.

யார் யார் பார்ப்போமா?

திருமால் நிலத்தை அளிப்பான்.

சிவபிரானின் தோழனாகிய குபேரன் வித்தையைத் தருவான்.

பலராமன் கலப்பையைக் கொடுத்து  உதவுவான்.

யமன் எருமைக் கடாவைத் தருவான்.

முத்தலை சூலத்தைக் கொழுவாக்கிக் கொள்ளலாம்.

வடக்கயிறு முதலியவற்றை அன்பர் தருவர்.

முருகன் இருக்கிறானே, அவன் மாடு மேய்த்து உதவுவான்.

ஆக இனி உழுது பயிரிடுதலே நன்று.

யாராவது இரந்து யாசித்து உண்ணுவார்களா?

(இது நல்ல காரியம் என்று சொல்லி பரமசிவன் உம்மைக் காக்கக் கடவன்.)

இதை எழுதி அருளியது சிவப்பிரகாச சுவாமிகள்.

பாடலைப் பார்ப்போம்:

அச்சுத தனளிப்பினில முமதுநேயன் வித்தையருளுவன் பலபத்திரன்,

    அலமுதவுவன்சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருது முண்டே,

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திறுக்க,

  முந்தியவடகயிற்றுடன்மற்று நமன்தமர் முன்போயிரந்து கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு

    மாடுமேயப்பான்

   இனியுழுது பயிரிடுதல்நன்றுநன் றிதைவிட் டிரந்துண்ப தீனமெனவோ

     கச்சுமுலை மாதுமையுரைத்திடும் புத்தியைக் கைக்கொண்

      டுளத்திலிதுநற்,

காரியமெனக் கருதி  மெத்தக்களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே.

பாடலின் பொருள்:

அச்சுதன் -திருமால்

நிலம் அளிப்பன் – நிலத்தைத் தருவான்

உமதுநேயன்  – உமது தோழனாகிய குபேரன்

வித்தையருளுவன் – வித்தையை அருளுவான்

பலபத்திரன் – பலராமன்

அலம் உதவுவன்  – கலப்பையைக் கொடுத்து உதவுவான்

சமன் பகடு ஈவனன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆளதோர் எருதும் உ\ண்டே, – நமக்கு ஆளாயிருப்பதாகிய எருதும் உண்டே

முச்சிரம் அயில் படையினைக் கொழுவதாக்குவோம் – முத்தலை சூலத்தை கொழுவாக ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இருக்க – வலிமையுடன் இழுத்து இறுக்க

முந்தியவடகயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றுடன்

மற்றும் – மற்று நாம் வேண்டுவன யாவற்றையும்

நமன் தமர் முன்போய் இரந்து கொள்வோம் – நமது அன்பரிடத்துச் சென்று கேட்டு வாங்கிக் கொள்வோம்

இச்சையுடை – விருப்பத்தை உடைய

நமதிளைய தனயனாகிய கந்தன் இனிமையொடு மாடு மேயப்பான் – நமது இளைய குமாரனாகிய கந்தன் இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று நன்று – இனி உழுது பயிரிடுதலே நல்லது, நல்லது

இதை விட்டு இரந்துண்பது ஈனம் – இதை விட்டு யாசித்து உண்பது இழிவே

கச்சு முலை மாது உமை உரைத்திடும் புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்தியை

கைக்கொண்டு   ஏற்றுக் கொண்டு

உளத்தில் இது நற்,காரியமெனக் கருதி  – மனதில் இது நல்ல காரியம் என்று கருதி

மெத்தக்களித்திடும் – மிகவும்  மகிழ்கின்ற

 கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான்

உமைக் காக்கவே – உங்களைக் காக்கக் கடவன்.

விளையாட்டாக ஆரம்பித்து முக்கிய கருத்தை வலியிறுத்தி இறையருளை வேண்டி சிவபிரான், பார்வதியின் அருள் கிடைப்பதை சிவபிரகாச சுவாமிகள் உறுதி செய்யும் விதமே தனி!

***

Leave a comment

Leave a comment