பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்!-1 (Post.13,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.162

Date uploaded in London – — 21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

மேரி கேஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 1

ச. நாகராஜன்

 பெண்களை முன்னேற்றியவர்!

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண்களும் முன்னேற வேண்டும் என்ற கூச்சலை நிறையப் பார்க்கிறோம்; ஆனால் பெண்கள் இன்னும் ஆணுக்கு நிகராக சம உரிமையை உலகளாவிய விதத்தில் எல்லா நாடுகளிலும் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

பெண்களின் அழகுக்கு அழகூட்டி, மெருகை ஏற்றி அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தி லட்சக்கணக்கானோரை ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை ஒரு பெண்மணியைச் சேரும். அதுவும் இந்த மகத்தான காரியத்தை அவர் ஓசைப்படாமல் செய்தார். அவர் தான் மேரி கே ஆஷ்.

பிறப்பும் இளமையும்

மேரி அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹாட் வெல்ஸ் என்ற இடத்தில் 1918ஆம் ஆண்டு மே மாதம் 12ம் நாள் பிறந்தார்.

தந்தை எட்வர்ட் அலெக்ஸாண்டர். தாயார் லுலா வெம்பெர் ஹேஸ்டிங்ஸ் வாக்னர்.

லுலா ஒரு சிறந்த நர்ஸ். பின்னால் பெரிய உணவு விடுதி ஒன்றின் மேலாளராக ஆனார். ஹூஸ்டனில் படித்த மேரி பட்டம் பெற்றார். 17ஆம் வயதிலேயே மணம் முடித்து மூன்று குழந்தைகளையும் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் பணி புரிந்த அவரது கணவர் போர் முடிந்தவுடன் திரும்பி வந்தார். விவாக ரத்து ஆனது. பின்னர் அவர் ஜார்ஜ் என்பவரை மணந்தார்.

முதலில் வீடு வீடாகச் சென்று புத்தகங்களை விற்க ஆரம்பித்தார் அவர். பின்னர் வீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளை வீடு வீடாகச் சென்று விற்கலானார்.

சோதனை வந்தது

ஒரு நாள் அவரை ஒதுக்கி விட்டு அவரால் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவே மனம் வெறுத்துப் போனார் அவர். அப்போது அவருக்கு வயது 45.

1963இல் கம்பெனியை விட்டு வெளியேறிய அவர், பெண்கள் வணிகத்தில் எப்படி முன்னேறலாம் என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அந்தப் புத்தகம் அவருக்கே வணிகத்தை ஆரம்பிக்க உத்திகளைக் கற்றுக் கொடுத்தது; அவர் கணவர் ஜார்ஜுடன் ப்யூடி பை மேரி கே என்ற நிறுவனத்தை 1963இல் ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவர் மாரடைப்பினால் அதே வருடம் மரணமடைந்தார். மேரி தனது மூத்த பையன் பென் ரோஜர்ஸிடமிருந்து 5000 டாலர் வாங்கினார்.

மேரி கே காஸ்மெடிக்ஸ்

மேரி கே காஸ்மெடிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி

துணிந்து தனது விற்பனையை ஆரம்பித்தார். பெண்களுக்கான ஒப்பனைப் பொருள்களை அவரே தயாரித்தார். அத்தோடு பெண்களை உயரிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டமாக ஆனது.

ஆகவே விற்பனையில் தனக்கென ஒரு புதிய உத்தியை அவர் மேற்கொண்டார். நேரடி விற்பனை முறை தான் அது! வீடு வீடாகச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவருக்கே உரித்தான படி அழகு சாதனப் பொருள்களைச் சுட்டிக் காட்டி அவர்களை அலங்கரித்து பின்னர் விருப்பமிருந்தால் தனது பொருள்களை அவர்களை வாங்க வைப்பது தான் அவரது வழி!

தனது ஒப்பனைப் பொருள்களை விற்பதற்கு பல பெண்களை அவர் பயிற்றுவித்தார். அவர்களை தனது சொந்த மகள்களாகவே அவர் பாவித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.

தாய் தந்த ஊக்கம்

கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் பல. ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது தாயார் தன்னிடம் கூறிய சொற்களை நினைவு கூர்வார் மேரி.

அவர் தாயார் அவரிடம் கூறிய சொற்கள் : “உன்னால் முடியும் மேரி!”

மெல்ல மெல்ல வளர்ந்த நிறுவனம் அவருக்கு 980லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. 120 கோடி டாலருக்கும் மேலாக விற்பனை அதிகரித்தது. 80000 பேர் அவரிடம் வேலை பார்த்து முன்னேறினர்.

இன்று 46 நாடுகளில் அவரது தயாரிப்புகள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ஒரு டாலர் = சுமார் 83 ரூபாய்)

To be continued………………………

Leave a comment

Leave a comment