பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 2 (Post No.13,166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.166

Date uploaded in London – — 22 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

மேரி  கே ஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 2

ச. நாகராஜன்

அழகுக்கு அழகூட்டுங்கள்

பெண்கள் எப்போதுமே இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி அழகுடன் விளங்க வேண்டும் என்று நமது நூல்கள் சொல்கின்றன. பகட்டிற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல; அது ஒரு உற்சாகமான மேம்பாடுடன் கூடிய சமுதாயத்தின் அடையாளம் என்பதற்காக!

சௌந்தரியம் எனப்படும் அழகு என்பது தான் என்ன? கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம்.- கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்!

இதை இயற்கை முறையில் எளிமையாக அதிகம் செலவின்றி செய்ய உதவுவது காஸ்மெடிக்ஸ் எனப்படும் ஒப்பனைப் பொருள்கள் –

பெண் என்பவள் யார்? அன்றாடம் குளித்து, அழகிய ஆடை அணிந்து, நெற்றியில் சித்திரம் கூடிய திலகம் இட்டு, கண்ணுக்கு மை ‘எழுதி’, காதணி பூட்டி, மூக்கணி புனைந்து, கூந்தலைச் சீவி சிங்காரித்து மலர் சூடி, அழகுற உடை அணிந்து,   கால் ஆபரணம் அணிந்து, உடலுக்கு சுகந்த வாசனை சேர்த்து, அழகிய வளையல்களை அணிந்து, பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி, மேகலை அணிந்து, வாய் சிவக்க தாம்பூலம் தரித்து, மோதிர விரலில் மோதிரம் அணிந்து, சாதுரியத்துடன் இதர அலங்கார வகைகளையும் செய்து கொண்டு இல்லத்திற்கும் சமுதாயத்திற்கும் நலம் சேர்த்து அனைவரையும் மேலே உயர்த்துபவளே பெண் என்று நம் நூல்கள் பெருமையுறக் கூறுகின்றன!

மேரி காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள்

இந்த வகையில் பெண்களுக்குரிய லிப்ஸ்டிக், மேனி பளபளப்பாக இருக்க உதவும் க்ரீம்கள், சருமத்தை மென்மையாகக் காட்ட வல்ல ஒப்பனைப் பொருள்கள் என ஏராளமானவற்றைத் தயாரித்தார் மேரி.

உலகில் பெண்களுக்கான பத்து சிறந்த கம்பெனிகளுள் ஒன்று என்ற பாராட்டைப் பெறும் அளவில் தன் நிறுவனத்தை உயர்த்தினார் மேரி. இன்று மேரி காஸ்மெடிக்ஸ் 200 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

அதை விற்பதற்கென உலகெங்கும் 30 லட்சம் பெண்கள் ஆலோசகர்களாக உள்ளனர்.

ஆலோசகர்கள் இரு விதமாக சம்பாதிக்க முடியும். ஒன்று தன்னால் சில பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் விற்பனை ஆலோசகர் ஆக்குவது. இன்னொன்று – பொருள்களை விவரித்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து அதன் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுவது.

ஊக்கமூட்டும் பரிசுகள்

தனது நிறுவனத்தில் வேலை பார்த்தோருக்கு வெறும் சம்பளத்தை மட்டும் தரவில்லை மேரி. ஜெனரல் மோட்டார்ஸ் தனது நிறுவனத்திற்கென பிரத்யேகமாக தயாரித்த அழகிய கார்களையே பரிசாக வழங்கினார். 1969இல் அதன் விலை 5900 டாலர்கள். ஐந்து பேருக்கு ஐந்து கார்களை பரிசாக வழங்கினார் அவர்.

தனது பையில் கொண்டு செல்லும் வண்ணத்தட்டின் வண்ணத்தையும், உதட்டுச் சாய வண்ணமான இளஞ்சிவப்பையும் தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கும் கார்களுக்கு வண்ணமாகப் பூசச் செய்தார்.

கெடில்லாக், செவர்லெட் கார்களில் மூன்று மாடல்களை உருவாக்கி அந்த மூன்று வகை கார்களை அவரவர் விற்பனை சாதனைக்குத் தக்கபடி பரிசளிக்க ஆரம்பித்தார் மேரி. சாலைகளில் இந்தக் கார்கள் அடிக்கடி ஓடும் போது அது அனைவருக்கும் பரவசத்தை ஊட்டியது. இந்தப் பரிசளிப்பு இன்றளவும் தொடர்கிறது. 2016ஆம் ஆண்டு வரை விலை மதிப்புள்ள 6032 கார்கள் பரிசாக அளிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நிறுவனத்தின் சாதனையை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி விற்பனை சாதனையாளர்கள் அனைவருக்கும் தாராளமாக வைர மோதிரங்கள், மேலே அணியும் கோட்டுகள் உள்ளிட்ட பல  பரிசுப் பொருள்கள் அவரால் வழங்கப்பட்டன. இவரது நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 150 பெண்மணிகள் பத்து லட்சம் டாலருக்கு மேல் சம்பாதித்து மற்றவரை வியக்க வைத்தனர்.

சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு

தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கென என்ன செய்வது என்று யோசித்த மேரி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக முதன் முதலாக மறு சுழற்சிப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

1995ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தை டெக்ஸாஸில் அவர் கட்டி முடித்தார். 34 ஏக்கர் பரப்பளவில் ஆறு லட்சம் சதுர அடியில் 13 மாடிக் கட்டிடமாக அமைந்த இதை அண்ணாந்து பார்த்து அனைவரும் வியந்தனர்!

அறக்கட்டளை

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தனி ஒரு அறக்கட்டளையை தன் செலவில் மேரி ஆரம்பித்தார். இது பெண்களை இல்லங்களில் கொடுமைப்படுத்துவதிலிருந்து காப்பதற்கும் பெண்கள் கான்ஸரால் பாதிக்கப்பட்ட போது உதவுவதற்கும் முன் வந்தது.

மறைவு

வயது மூப்பின் காரணமாக 83ம் வயதில் டெக்ஸாஸில் தனது இல்லத்தில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் நாள் அவர் மறைந்தார்.

வாழ்ந்த காலத்திலும், வாழ்நாளுக்குப் பிறகும் அவரைத் தேடி பல விருதுகள் வந்து குவிந்தன.

ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகள் பெண்களுக்கு புது வாழ்வையே காண்பித்தது.

அவற்றில் சில:

ஒப்பனைப் பொருள்களை விற்பதை மட்டும் நாம் செய்யவில்லை. நாம் வாழ்க்கையையே மாற்றுகிறோம்.

ஒவ்வொருவரும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாதபடி, “என்னை முக்கியமானவனாக உணரச் செய்யுங்கள்’’ என்று பொறிக்கப்பட்ட ஒரு போர்டைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார். மற்றவருடன் பணியாற்றும் போது இதை மறந்து விடாதீர்கள்.

வெற்றியாளருக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் அசாதாரணமான மன உறுதி தான்!

கடவுள் உன்னைத் திறனுடையவரா அல்லது திறனற்றவரா என்று கேட்கவில்லை. நீ செயல்புரியத் தயாராக இருக்கிறாயா என்று தான் கேட்கிறார்.

உலகில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பவர், ஒரு காரியம் முடிக்கப்படுவதைப் பார்ப்பவர், அட, அது எப்படி முடிந்தது என்று வியப்பவர்! இந்த மூவரில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் முதலாவது வகையைச் சேர்ந்தவளாக இருக்கத் தீர்மானித்தேன்.

ஒருபோதும் மனம் தளர்ந்து பாதியில் விட்டு விடாதீர்கள். அடுத்த முயற்சி வெற்றியைத் தரும் ஒன்று தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

பாரதியார் காட்டிய பெண்!

“திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

 தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்”

என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளை மெய்ப்பித்தவர் மேரி ஆஷ் கே என்றால் அது மிகையாகாது!

*****

Leave a comment

Leave a comment