ஹென்றி போர்டு  –   ஆர்வம்,  உழைப்பு, பொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1 (Post.13,169)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.169

Date uploaded in London – — 23 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் வெளியான கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஹென்றி போர்டு  –  ஆர்வம்உழைப்புபொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1

ஹிட்லர் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர்

கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் அதை அசெம்பிள் செய்து வேடிக்கை பார்த்த ஒரு சிறுவன், உலகின் ஆகப் பெரிய கார் அசெம்பிளி லைனை – 24 விநாடிகளில் கார் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு காராக உருவாக்கும் – நுட்பத்தைச் செய்து காட்டினான் என்றால் பிரமிப்பாக இல்லை?

அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரையும் வெறுக்கும் ஹிட்லர் தன் வாழ்நாளில் அனைவரும் அறியும்படி “உத்வேகம் ஊட்டுபவர்” என்று கூறிப் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர் இவர் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

யார் இவர்?

அவர் தான் ஹென்றி போர்டு.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வில்லியம் என்பவருக்கும் மேரி போர்டுக்கும் 1863-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்தார் ஹென்றி போர்டு. தாயின் விருப்பதிற்கிணங்க பண்ணையில் வேலை பார்த்த அவர் 1876-ல் தாயார் மறையவே பண்ணையிலிருந்து வெளியே வந்தார்.

தந்தையார் அவருக்கு ஒரு பாக்கட் கடிகாரத்தைப் பரிசாகத் தந்தார். அடுத்த கணமே அதை அக்கக்காகப் பிரித்த போர்டு, மீண்டும் அதை கடிகாரமாக அசெம்பிள் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.

இதிலிருந்து அனைவரது கடிகாரங்களையும் வாங்குவது, பிரிப்பது மீண்டும் அதை பழையபடி ஒன்று சேர்த்து ஓட வைப்பது அவரது பொழுதுபோக்கானது. ரிப்பேர் செய்வதற்கென்றே கடிகாரங்களை அனைவரும் அவரிடம் தர ஆரம்பித்தனர்.

அசெம்பிள் செய்வது என்பது அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது.

15 வயதில் முதல் எஞ்ஜின்

1878-ல் தனது 15-ம் வயதில் தனது முதல் நீராவி எஞ்ஜினை அவர் உருவாக்கினார். எடிஸனின் நிறுவனமான எடிஸன் இல்லுமினேடிங் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது திறமையால் 1893-ல் தலைமைப் பொறியாளராக ஆனார்.

கையில் சிறிது பணம் சேரவே சொந்தமாக தனது கேஸொலைன் எஞ்சின்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

“குதிரை இல்லாமல் ஓடும் வண்டியான”, தனது காரை 1896இல் – 33-ம் வயதில் உருவாக்கினார்; அனவரும் பிரமித்தனர்.  ‘’க்வாட்ரி சைக்கிள்’ என்று அவர் அதற்குப் பெயர் சூட்டினார்.

எடிஸன் மீது அளவில்லாத பக்தி அவருக்கு ஏற்பட்டது. எடிஸன் அவரைக் கார் தயாரிக்குமாறு ஊக்குவித்தார்.

போர்டு மோட்டார் கம்பெனி

1903-ம் ஆண்டு போர்டு மோட்டார் கம்பெனியை 28000 டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கினார். ஆனால் உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தால் அது மூடப்பட்டது. நீதிமன்றம் சென்ற போர்டு முதலில் தோற்றாலும் 1911-ல் வெற்றி பெற்றார். மீண்டும் தொழிற்சாலை தொடங்கியது.

600 டாலர் விலையில் ‘மாடல் என்’ என்ற ஒரு காரை அவர் அறிமுகப்படுத்தினார். அதன்  விலை கூட என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அனைவரும் வாங்கும் விலையில் ஏராளமான கார்களை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

முதலில் 950 டாலருக்கு விற்பனையான அவரது ‘மாடல் டி’ கார்,

1927-ல் கடுமையான உழைப்பு,  ஆர்வம். ஆகியவற்றின் விளைவாக 290 டாலராகக் குறைக்கப்பட்டது.

தனது புதிய செயல் முறையான அசெம்பிளி லைனை அவர் 1913-ல் ஆரம்பித்தார். கார் பாகங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்க 723 நிமிடங்களில் அதை ஒரு காராக ஆக்கிய அசெம்பிளி லைனை முதலில் அவர் உருவாக்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் 93 நிமிடங்களில் ஒரு காரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். இன்னும் அதிக ஆராய்ச்சியும் , அதிக உழைப்பும் சேர அனைவரும் பிரமிக்கும் வண்ணம் 24 விநாடிகளில் அசெம்பிளி லைனிலிருந்து காரை வெளியே கொண்டு வந்தார்.

உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது.

அமெரிக்க சந்தையில் புகுந்த அவர் மக்களிடம் காரை விற்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாதி கார்கள் அவர் தயாரித்த கார்களாகவே இருந்தன.

உலகமே அதிசயதித்த அந்த கால கட்டத்தில் ஹிட்லரே அவரை “ஊக்கமூட்டும் ஒருவர்” என்று புகழ்ந்தார்.

மாடல் டி காரின் விற்பனை

மாடல் டி கார் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. 165 லட்சம் கார்கள் விற்கப்பட்டன.  1908லிருந்து 1927 முடிய தயாரிக்கப்பட்ட இந்தக் கார்கள் 2012ஆம் ஆண்டிலும் கூட அமெரிக்காவின் டாப்-டென் கார்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

குடும்பம்

க்ளாரா ஜேன் பைரண்ட் என்பவரை அவர் 1888-ம் ஆண்டு மணந்தார்.

அவருக்கு எட்ஸல் போர்டு என்று ஒரு மகன் உண்டு.

வாழ்நாளில் அவரைத் தேடி ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன.

அமெரிக்காவை உருவாக்கிய  முக்கியமான ஒருவராக அவர் கருதப்பட்டார். 1999-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்டின் லூதர் கிங், மதர் தெரஸா ஆகியோர் அடங்கிய 18 பேர் பட்டியலில் அவரும் ஒருவராக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் உருவம் பொறித்த தபால்தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

மனிதப் பண்புகள்

தனது நிறுவனத்தில் 20% பணியை மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்காக அவர் தந்தார்;

அந்தக் காலத்தில் மற்றவர்கள் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு ஊதியத்தை அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கியதோடு, நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த லாபத்தை ஆறுமாதத்திற்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தார்.

to be continued……………………………..

Leave a comment

Leave a comment