சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2 (Post.13,181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.181

Date uploaded in London – — 27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

மாலைமலர் 17-4-2024 இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

ச.நாகராஜன்

நேர்மையே வெல்லும்!

இன்னொரு சம்பவம் இது.

ஒரு சமயம் பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸுக்கு விஜயம் செய்தார்.

அதனுடைய டைரக்டரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் பகவந்தம் பாபாவின் பக்தராவார்.  அவர் பகவந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த மாடியில் க்ளார்க் வேலைக்காக ஒரு நேர்காணல் பேட்டி நடந்து கொண்டிருந்தது.  அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பாபா அவனை அழைத்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

இண்டர்வியூவில் கலந்து கொண்ட தன்னால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

பாபா, “அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் ஏதாவது உனக்குத் தந்தார்களா” என்று கேட்டார்.

அந்தப் பையன், “ ஆமாம். நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபா என்னிடம் இருக்கிறது” என்றான்.

உடனே பாபா, “ சி.வி. ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.

பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி,ராமனுக்காகக் காத்திருந்தான்.

ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறும் சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்தார். “நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?” என்றார்.

பையன் அவர் அருகில் சென்று, “கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டவுடம் அளவிலா மகிழ்ச்சி அடைந்த ராமன், “ஆஹா! இந்த வேலைக்கு உன்னைப் போன்ற நேர்மையுடைய ஒருவன் தான் வேண்டும்” என்று கூறி விட்டு அங்கிருந்த நிறுவன அதிகாரியைக் கூப்பிட்டு உடனடியாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை அடித்துத் தர உத்தரவிட்டார்.

ஐந்து ரூபாயையும் அவனிடமே திருப்பித் தந்தார்.

பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபா, “பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி” என்று அருளுரை பகர்ந்தார்.

விருதுகள்

ஏராளமான விருதுகளை சி.வி.ராமன் பெற்றுள்ளார்.

1929-ல் இங்கிலாந்து அரசியார் அவருக்கு சர் பட்டத்தை அளித்துக் கௌரவித்தார்.

1954-ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

1928-ல் அவர் பிப்ரவரி 28-ம் தேதி அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் நாளை இந்திய அரசு அதை தேசீய அறிவியல் நாளாகக் கொண்டாட ஆணை பிறப்பித்தது.

பங்களூரில் சி.வி,ராமன் நகர் என்ற பகுதியும் திருச்சியில் சி.வி,ராமன் நகர் பகுதியும் அவர் பெயரால் கௌரவிக்கப்படும் பகுதிகளாகும். பங்களூரில் சி.வி,ராமன் ஹாஸ்பிடல் உள்ளிட்ட பல இடங்கள் அவர் பெயரைச் சொல்லிப் பெருமைப்படுபவை.

மறைவு

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் நாளன்று தனது 82-ம் வயதில் மறைந்தார். தனது மனைவியிடம் மிக மிக எளிமையாக எந்த வித சடங்குமின்றி தான் எரியூட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

அவர் மறைவினால் தேசமே வருந்தியது. பிரதமர் இந்திரா காந்தி, தேசமும் பாராளுமன்றமும் ஒவ்வொருவரும் இவரது மறைவினால் வருந்துவதாகக் குறிப்பிட்டார். “நவீன இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான அவரது மனம் அவர் ஆராய்ந்த வைரம் போல இருந்தது. அவரது வாழ்க்கைப் பணி எங்கும் ஒளியைத் தந்தது” என்று மேலும் அவர் கூறினார்.

ஊக்கமூட்டும் உரைகள்

சர் சி.வி, ராமனின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள் ஏராளம்.

அவற்றில் முக்கியமான இரண்டு இதோ:

அறிவியல் என்பது சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்பதே அறிவியல் ஆகும்.

 நாம் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் இன்றையத் தேவை என்னவெனில் அந்த தோல்வி மனப்பான்மையை அழிப்பது தான்!”

 ஆம், தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு இந்தியர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக மேலெழுவோமாக! உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறுவோமாக!

—subham—

Leave a comment

Leave a comment