Post No. 13.191
Date uploaded in London – — 30 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவப்பிரகாச சுவாமிகளின் சாபம்!
ச.நாகராஜன்
சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு தவசீலர்.
அவர் ஒரு சமயம் ஒரு மாந்தோப்பில் நுழைந்தார். அங்கிருந்த ஒரு மாம்பழத்தை உண்பதற்காக எடுத்தார்.
தோட்டக்காரன் மிகுந்த கோபம் கொண்டு அவரது மடியைப் பிடித்து இழுத்தான்.
இதனால் மனம் நொந்த சுவாமிகள் அவனுக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
வருகின்ற கன்யாராசியில் சூரியன் வரும் போது நீ சாகக் கடவது என்பதே அந்த சாபம்.
அடுத்துவருந் தொண்டனுக்கா வந்தகனைத் தாளால்
அடர்ந்ததுவுஞ் சத்தியமே யானால் – எடுத்தவொரு
மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி
சாங் கனிக்கா தித்தன்வரத் தான்
அடித்து வரும் தொண்டனுக்கா – ஆசிரயித்து வந்த அடியவனுக்காக
அந்தகனை – யமனை
தானால் அடர்ந்ததுவும் – திருவடியால் உதைத்ததுவும்
சத்தியமே ஆனால் – உண்மையே என்றால்
எடுத்தது ஒரு மாங்கனிக்காக – எடுத்த ஒரு மாங்கனிக்காக என்னை
மடிபிடித்த பாவி – மடியைப் பிடித்து இழுத்த பாவியானவன்
கன்னிக்கு ஆதித்தன் வர – கன்யா ராசியில் சூரியன் வரும் போது
சாம் – சாவான்.
மேலே தொண்டன் என்பது மார்கண்டேயனைக் குறிக்கிறது. மார்கண்டேயனுக்காக யமனைத் தன் காலால் உதைந்த சிவபிரானின் வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.
கன்னிக்கு ஆதித்தன் வருவது – புரட்டாசி மாதத்தைக் குறிக்கிறது.
***
அடுத்து இன்னும் ஒரு சமயம் தனது தாயாருக்காக உப்புக் காரியை அவர் அழைத்தார்.
அப்போது அவர் பாடிய பாட்டு இது:
நிறைய வுளதோ வெளிதே கொளுவோம்
பிறையை முடிக்கணிந்த பெம்மான் – உறையும்
திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
கிருக்காட்டுப் பள்ளி யெமக்கு
பாடலின் பொருள்:
பிறையை முடிக்கு அணிந்த பெம்மான் உறையும் – பிறைச் சந்திரனைச் சிரத்திலே அணிந்திருக்கும் சிவபெருமான் வாழ்கின்ற
திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் – திருக்காட்டுப்பள்ளியில் திரிகின்ற பெண்ணே!
நீ இங்கு இரு – நீ இவ்விடத்தில் இரு
உப்பு அள்ளி எமக்குக் காட்டு – உப்பை அள்ளி எமக்குக் காட்டு
உறைய உளதோ – நிரம்ப இருக்கிறதோ
வெளிதோ – வெண்மையாக இருக்கிறதோ
(நிறைய வெண்மையாக இருக்குமானால்)
கொளுவோம் – விலைக்கு வாங்குவோம்.
வெண்மையான உப்பைத் தாயாருக்காக சிவப்பிரகாச சுவாமிகள் வாங்கினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
***