

Post No. 13,552
Date uploaded in London – 17 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25
லெபாக்ஷி எங்கே இருக்கிறது?
லெபாக்ஷி என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கிறது கதிரியிலிருந்து 82 கி.மீ; பெங்களூரிலிருந்து 120 கிமீ. புட்டபர்த்தியிலிருந்து 64 கி.மீ ; பெனுகொண்டாவிலிருந்து 50 கிமீ.
என்ன சிறப்புகள்?
சிறிதும் பெரிதுமாக மொத்தம்110 கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை – சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனியான கோவில்கள் உள்ளன. விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன கூர்மசைலம் என்று அழைக்கப்படும் சிறிய குன்றுமீது [ஆமை மலை] பாபனதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர்,வீரபத்ரர் ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள வீரபத்ரர் ஆலயம்தான் கலைமுக்கியத்துவம் கொண்டது.மற்றவை சிறிய சன்னிதிகள்

என்ன அதிசயங்கள் ?
இங்குள்ள மாபெரும் நந்தி ஒரு பெரிய அதிசயம் கோவிலுக்கு வெளியே சாலையோரமாக நம்மை இது வரவேற்கிறது.
ஒற்றைக் கல் நந்தியின் உயரம் 20 அடி; நீளம் 30 அடிகள்!
ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்பதால் ராமாயணத் தொடர்புடையது; ஜடாயு சிலையும் ஒரு அதிசயப் படைப்பு.
சித்தன்னவாசல், அஜந்தா குகை ஓவியங்களைப் போல இங்குள்ள ஓவியங்களும் அற்புதப் படைப்புகள்.
கோவில்களும் ஓவியங்களும் சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உடையவைதான்.
இங்குள்ள தரையைத் தொடாத தொங்கும் தூண் பொறியியற் கலையின் அற்புதப் படைப்பு எனலாம் . கோவிலில் உள்ள 70 தூண்களில் ஒன்று தரையைத் தொடவில்லை; அதற்கு அடியில் துணி அல்லது காகிதத்தை விட்டு வெளியே இழுக்கலாம்.
வெளியே இயற்கையான பாறை ஒன்றை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் நாகர் சிலை சிவலிங்கத்துடன் காட்சி தருகிறது; லெபாக்ஷியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிலை இதுதான். அந்தப்பாறையின் பக்கவாட்டில் உள்ள பெரிய புடைப்புப் பிள்ளையார் சிலை மிகவும் அழகானது.
ஓவியங்கள் இயற்கை வண்ணக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன ; அவைகள் சிவன் , விஷ்ணு, பார்வதி தொடர்பான புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன
xxxx

அனுமனின்மிகப்பிரிய காலடி
அனுமனின் காலடி என்று பக்தர்கள் நம்பும் மிகப்பெரிய கால் சுவடு வீரபத்ர சுவாமி கோவில் வளாகத்துக்குள் இருக்கிறது சுமார் மூன்று அடிகள் நீளமுள்ள கால் தடம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். இதற்குக் காரணம் பாறை யின் அடியிலுள்ள நீரூற்று ஆகும். இதுவும் நிறைய பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்றன.
கோவிலில் உள்ள வீரபத்ர சுவாமிக்கும், சிவலிங்கத்துக்கும் தினமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
xxxx
சுவையான கதை

இந்தக் கோவில்கள் பெனுகொண்டாவின் ஆளுநர்களாக் இருந்த வீரண்ணா விரூபண்ணா சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை ; விருபண்ணா இங்கே குகைக்குள் இருந்த வீரபத்ரர் சிலையைக் கண்டவுடன் அதை அங்கே பிரதிஷ்டைசெய்து பெரும் ஆலயம் கட்டினார் . நம்முடைய தமிழ்நாட்டின் மாணிக்க வாசகரைப் போல, ஆந்திர மாநிலத்தின் பத்ராசல ராமதாசரைப் போல இவரும் கோவிலைக் கட்டுவதற்கு அரசாங்க பணத்தைப் பயன்படுத்தினார் ; புகார்கள் பறந்தன விஜயநகர மன்னன் ஓடோடி வந்தான்; உண்மை என்று அறிந்தான்; உமக்கு நீரே தண்டனை கொடுத்துக் கொள்ளவும்; உ ம் கண்களை நீரே குத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான் விரூபண்ணாவும் அப்படியே செய்தார். லெபாக்ஷி என்ற பெயர் இதனால்தான் வந்ததாம் லோப + அக்ஷி என்றால் குருட்டு விழி என்று பொருள். லே +பட்சி என்றும் பொருள் சொல்லுவார்கள்; சீதையை இராவணன் கடத்தியதை ஜடாயு என்ற பறவை தடுத்தது; ராவணன் அதன் சிறகினை வெட்டினான் அது கீழே விழுந்தது; எழுந்திரு பறவையே என்று ராமன் சொன்னதால் லே +பக்ஷி (பறவை) என்ற பெயர் ஏற்பட்டது
கோவில் வேலை முழுமை அடையாமலேயே நின்றுவிட்டது.
இது நூற்றெட்டு சைவத் தலங்களுள் ஒன்று என்று ஸ்கந்த புராணத்தில் குறிப்பு இருக்கிறது . இதை அகத்தியர் நிறுவியதாக ஐதீகம் உள்ளது.
xxxx

வீரபத்ரசாமி கோவில்
வீரபத்ரசாமி கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. முக்த மண்டபம் அல்லது ரங்க மகால் ,பின்னர் அர்த்தமண்டபம். அதற்கு அப்பால் கருவறையும் அதன்முன் கல்யாணமண்டபமும். இருக்கின்றன கல்யாண மண்டபத்தில் சிற்பப் பணிமுடிவடையாத முப்பத்தெட்டு ஒற்றைக் கல்தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
இந்த தலத்தில்தான் சிவபார்வதி திருமணம் நிகழ்ந்தது என்பது ஸ்தலபுராணம். அதற்கேற்ப எங்கும் அழகு ததும்பி நிற்கும் தூண்கள். நாட்டிய மண்டபத்தில் இசைக்கலைஞர்களும் நடனமாதர்களும் பிரமித்து நிற்கின்றார்கள். கல்யாணமண்டபம் பணிமுடிவடையாத நிலையில் உள்ளது. தும்புரு- நாரத நடனம், அனந்த சயனம், தத்தாத்ரேயர் ,நான்முகன், ரம்பா போன்ற சிலைகள் மனதைக் கவர்கின்றன.
நாட்டிய மண்டபத்தையும் கல்யாண மண்டபத்தையும் பார்த்து முடிக்கவே முடியாது. மிக அற்புதமான சிலைகள் வரிசையாக இருக்கின்றன. குறிப்பாக ஒரே தூணில் உள்ள யட்சனும் புஷ்ப யட்சியும் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
நாட்டியமண்டபத்திலும் கல்யாணமண்டபத்திலும் மேலே கூரையில் உள்ள சுவரோவியங்களும் புகழ்பெற்றவை. மகாபாரத ராமாயண காட்சிகளுடன் வீரண்ணா, விரூபண்ணா ஆகியோர் தங்கள் பக்கவாட்டில் கட்டிமுடிக்கப்படாத ஒரு மண்டபம் சிற்பங்கள் மண்டிய தூண்களாக மட்டும் நின்று கொண்டிருக்கிறது. முகப்பில் அகத்தியர் முதலிய ரிஷிகளின் அற்புதமான சிலைகள் வரிசையாக நிற்கின்றன. உள்ளே, நின்ற திருக்கோலத்தில் விஷ்ணுவின் சிலை உள்ளது.





—Subham–
Tags- சிவன் கோவில், லெபாக்ஷி , ஓவியங்கள் , பெரிய நந்தி , ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25, வீரபத்ர சுவாமி, நாகத்தின் கீழ் சிவலிங்கம், தொங்கும் தூண், அனுமன் காலடி