விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் –31 (Post No.13,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,561

Date uploaded in London – 20 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மருத்துவ அதிசயங்கள் 

இனிமேல் விஷ்ணு சஹஸ்ரநாம (விச.)த்திலுள்ள மருத்துவம் தொடர்பான நாமங்களைக் காண்போம் .

 பேஷஜம் – நாம எண்  578–

மருந்து என்று பொருள்.

பிறவிப் பிணிக்கான மருந்து என்று ஆதி சங்கரர் பொருள் சொல்கிறார்.

சுற்றி வளைத்துப் பார்த்தால் அது உடல் நோய்க்கும் மருந்து. ஏனெனில் நோய்கள் ஒரு மனிதனுக்கு வருவதற்கு காரணமே பூர்வ ஜென்ம கர்மம்  தான் என்று ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் கூறுகின்றனர் ; அப்படிப் பிறப்பு வராமல் அறுக்கும் – மாயப்  பிறப்பறுக்கும்–  மருந்து இறைவனின் நாமமே!

மேலும் சில சுவையான விஷயங்கள்

1. சிவ பெருமானைப் போற்றித் துதிக்கும் யஜுர் வேத மந்திரமான ருத்ரத்திலும் பேஷஜம்’ என்று நாமம் வருகிறது.

2. இறைவன்தான் பிறவிப் பிணிக்கு மருந்து; இதை ஆழ்வார் நாயன்மார்  பாடல்களிலும் காண்கிறோம்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை

பிரிவிலா அடியார்க்கென்றும்

வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்

தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

  – அப்பர்

இங்கே இரு பொருள் தொனிக்க அப்பர் தேவாரம் பாடியுள்ளார் இது பாடிய தலம் உடல் நோய் களையும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் ஆகும்.

3.மனிதனின் உடலை வலுவாக, நோய் வராமல், வைத்துக்கொள்ளும் மருத்துவத் துறைக்கும் ஆயுர் வேதம் என்று வேதத்தின் பெயரையே சூட்டினர்; தமிழர்களும் சித்த மருத்துவம் என்று சித்தர்கள் கண்டதாகவே சொன்னார்கள். அதாவது ஆன்மீக, லெளகீக அகராதிகளில் இறைவனைவேதத்தை ஸம்பந்தப்படுத்தியே நம்மவர்கள் அணுகினார்கள். 

1600 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்தீஸ்வரனைப் பாடியதோடு மட்டும் நில்லாமல் சுந்தரர் போன்றோர் சிவனைப் பாடி கண் நோய்கள் நீங்கப்பெற்றார்கள்.

கேரளத்தில் நாராயண பட்டதிரி போன்றோர்  குருவாயூரப்பனைப் பாடிடியே உடல் நலம் பெற்றனர்.

நாராயணீயம் படித்து தன்னுடைய தோல் நோயைத் தீர்த்துக்கொண்டதை ஸ்ரீ அனந்த ராம தீட்சிதர் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

வைத்தீஸ்வரன் கோவில், சங்கரன் கோவில் போன்ற இடங்களில் மருந்து உருண்டை என்ற பெயரில் புற்று மண், மிளகு, உப்பு போன்றவைகளை  பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் இறைவன், நம்முடைய பவரோகத்தையும்  தீர்ப்பான். உடலில் வரும் நோயையும் தீர்ப்பான்.

இப்போதும் மக்கள் குறிப்பிட்ட கோவில்களுக்குப் போனால் குறிப்பிட்ட நோய்கள் போகும் என்ற நமபிக்கையுடன்  தீர்த்த யாத்திரை செய்வதைக் காணலாம்.

இதில் சில விஞ்ஞான உண்மைகளும் உள ; சில இடங்களில் உள்ள, தண்ணீர், கோவில்களில் தரும் துளசி தீர்த்தம்வில்வ மரங்கள் சூழ்ந்த சிவன் கோவில்கள் முதலியன மருத்துவ குணங்கள் உடையவை

xxx

ஒளஷதம் — நாம எண் 578– 

இங்கும் பிறவிப் பிணிக்கு- அதாவது ஜனன- மரண சுழலுக்கு — மருந்து என்றே சொல்லப்படுகிறது. உலகத்தில் இந்துக்களும் இந்தியாவில் தோன்றிய கிளை மதங்களும் மட்டுமே மறு  பிறப்பை நம்புகின்றன .பிறந்து, பிறந்து இறப்பதை ஒரு பிணி என்றும் சொல்லுகின்றன.காரணம் என்னவெனில் அவர்களுக்கு பழம்பிறப்புகளை அறியும் சக்தி இருந்தது; இதை மாணிக்கவாசகர் போன்றோர் தெளிவாகவே பாடுகின்றனர் ; நம்மில் எவருக்கும் நமது வாழ்வில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கும். அப்படி இருக்கையில் புழு வாகவும் பண்றியாகவும் பிறந்து கோடிக்கணக்கான பிறப்புகளுக்குப் பின்னர் மானுட ஜென்மம் கிடைத்து என்று ஆதிசங்கரரும் திருமூலரும் சொல்லுகின்றனர் ; இதை அறியும் சக்தி நமக்கிருந்தால் நாமும் பிறவாமை வேண்டாம் என்றே வேண்டுவோம்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் (சிவ புராணம்திருவாசகம்)

xxxxx

வைத்யஹ — நாம எண் 164-

பொருள் – டாக்டர், மருத்துவர் .

இன்னும் ஒரு  பொருள்: எல்லா வித்தை களையும் — அதாவது பல்வேறு ‘சப்ஜெக்ட்டு’க்களையும், துறைகளையும் அறிந்தவர்.

வேதத்தில் பிஷக் என்ற சொல்லினால் வைத்தியர் குறிப்பிடப்படுகிறார்.

ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு ஸ்லோகம் உண்டு :

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்.

யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.

பல ஊமைகள் தெய்வ சந்நிதியில் வாக்கு வண்மை பெற்றதை குமரகுருபரர் போன்றோர் வா க்கையில் அறிகிறோம் .

xxxx

வி.ச.வில் இயற்கை!


இந்துக்களின் வாழ்வு இயற்கையோடு இயைந்தது;  இயற்கையிலுள்ள எல்லப்  பொருட்களையும் வணங்குவர்; அவைகளைப்ப பயன்படுத்தும்போது மன்னிப்புக் கேட்டுவிட்டு, உரிய மரியாதை செலுத்திவிட்டு, பயன்படுத்துவர்; இவைகளை எல்லோரும் சொல்லி வந்த, இப்பொழுது ஆர் எஸ்.எஸ். ஷாகாக்களில் மட்டும் சொல்லி வரும், காலை வணக்கம்/ பிராதஸ்மரண ஸ்லோகங்களில் காணலாம் . படுக்கையிலிருந்து எழுந்து நிலத்தை மிதிக்கும்போதும் , கையை விரித்துப் பார்க்கும்போதும் இதைச் செய்வார்கள் . உழும் காலம் வந்தவுடன், முதலில் அரசன் தங்க ஏர் கொண்டு உழும்போது மன்னிப்புக் கேட்கும் மந்திரம், மரத்தை வெட்டும் போது மந்திரம் , துளசி வில்வம் இவைகளை பறிக்கும்போது மந்திரம் — இவ்வாறு நூற்றுக்கணக்கில் சொல்லலாம். தேவைக்கு அதிகமாக எதையும் அழிக்காதே ; அரச மரம் ஆனாலும், ஆல மரம் ஆனாலும் அதை வணங்கு; வாடி ய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் (வள்ளலார் பொன்மொழி) என்பது இந்துக்களின் கொள்கை.

காளிதாசன் எழுதிய பறவைப்பெண் (சாகுந்தலம்) என்ற உலகப் புகழ்பெற்ற நாடகத்தில் செடிக்குத் தண்ணீர் விட்டு, பறவைகளுக்கு உணவிட்ட பின்னர்தான் பறவைப் பெண் (சகுந்தலா ; சகுன= பறவை ; சகுனம் = பறவைகள் சொல்லும் செய்திகள்; சகுந்தலா = பறவை வளர்த்த பெண் ) வேறு பணிகளைச்  செய்வாள்.

ரிக் வேதத்திலேயே இமயத்தின் புகழும் ஆல மரத்தின் புகழும் (மஹா வ்ருக்ஷம்) இருக்கிறது

வி.ச.வில் ஆல , அரசு , அத்தி, சோம  மரங்களை விஷ்ணு என்று வணங்கும்  நாமங்கள் உள்ளன ; ஹம்ச/ அன்னம் , சுபர்ண கருடன் போன்ற பறவைகளும் சிங்கம் , வராஹம் போன்ற விலங்குகளும் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தில் ராமனை புலியே எழுந்திரு! காலைக் கதிரவன் உதித்துவிட்டான் என்று விச்வாமித்திரர் எழுப்பிவிடுவது வெங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாக வருகிறது (உத்திஷ்ட நரசார்தூல ).

தமிழ் நாட்டில் 300 கோவில்களில் தல மரங்களை வணங்குகிறார்கள் ; மதுரை மீனாட்சி கோவிலில் கடம்ப மரத்தைச் சுற்றியே பக்தர்கள் செல்கிறார்கள்; எல்லா உபநிஷத்துக்களும் இயற்கை சூழ்ந்த இமயத்தில் உருவானது; சங்க இலக்கிய புலவர்கள் கங்கையையும் இமயத்தையும் விதந்து ஓதுகிறார்கள்; புராணங்கள் அனைத்தும் நைமிசாரண்யம் காட்டில் இயற்றப்பட்டன

xxxx

மஹீதரஹ- நாம எண் 369-

பூமியைத் தாங்குகிறவர்; பூபாரத்தைப் போக்குபவர்.

விஷ்ணு புராணம் சொல்கிறது:

வனானி  விஷ்ணுர் கிரயோ திஸாஸ்  ச — என்று விஷ்ணு போற்றப்படுகிறார்.

காடுகளும் மலைகளும் திசைகளும் விஷ்ணுவின் வடிவமே — என்பது பொருள்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா

உந்தன் கரிய நிறம் தோன்றுதையா  நந்த லாலா — என்ற பாரதி பாடலையும்

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்

      கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

      நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)–என்ற பாரதி பாடலையும்  இது நினைவுபடுத்தும் .

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0021.html

xxxx

லோக சாரங்கஹ — நாம எண் 783–

சாரங்க, என்பதற்கு, வில், தேனீ , மான் போன்ற நான்கு கால் விலங்குகள் ஆகிய பொருளும் உண்டு.

வி.ச.வில் தேனீ என்ற பொருளில் வருகிறது; அது பூவின் சாரத்தை எடுப்பது போல, விஷ்ணுவும் பூமியின் சாரத்தை கிரஹிக்கிறார்.

இந்து சமய சாஹித்ய   கர்த்தாக்களும் மஹான்களும் தங்களை இறைவனின் தாமரைப் பாதங்களைச் சுற்றிவரும் தேனீக்களாக வருணித்துப் பாடுகிறார்கள் – பிரமரி = வண்டு .

 க்ஷேமம் குரு கோபால – நாராயணதீர்தர் :–

क्षेमं कुरु गोपाल   संततं मम  க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம

क्षेमं कुरु गोपाल||                க்ஷேமம் குரு கோபால |

कामं तवपाद-कमल भ्रमरी भवतु      காமம் தவபாத-கமல ப்ரமரி பவது

श्रीमन् मम मानसं मधुसूदन      (क्षेमं….)   ஸ்ரீமன் மம மானஸம் மதுசூதன |

 –subham—

Tags: பேஷஜம், பிஷக், வைத்ய, மருத்துவர், டாக்டர், சித்த, ஆயுர்வேத, மருத்துவம், இயற்கை, கடவுள், பிராத்த ஸ்மரணம்  காக்கைச் சிறகினிலே, காக்கை, குருவி எங்கள் ஜாதி, பாரதி, பிரமரி

Leave a comment

Leave a comment