Post No. 13.564
Date uploaded in London – —21 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வளமான வாழ்க்கைக்கு நிர்வாக இயல் கதைகள் இரண்டு!
ச.நாகராஜன்
(பெண்களும் ஆண்களும் நிர்வாக இயலில் தூள் கிளப்பும் இந்தக் காலத்தில் இந்தக் கட்டுரை மகளிர்க்கு மட்டும் இல்லை; ஆண்களும் இதைப் படிக்கலாம்.)
நிர்வாக இயல் சம்பந்தமான கூட்டங்களில் வளமான வாழ்க்கைக்கான உத்திகளை, கதைகளோடு சொல்வது வழக்கம். இரண்டு கதைகளைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையொட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.
ராஜா அவர்களைப் பாராட்டிவிட்டுக் கூறினார்:- “அறிஞர் பெருமக்களே! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்து போகிறேன். ஆனாலும்
இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் வீணாகி விடக் கூடாது. ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்.”
அறிஞர்கள் கூடித் தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம், “ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றுமில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.
மனம் மகிழ்ந்த ராஜா, “அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்”” என்றார்.
அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.
ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன், “அரசர் பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்” என்று கூறு தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.
ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, “உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்” என்றார்.
அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.
மகிழ்ந்து போன ராஜ மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார். “ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாதபடி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா? இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்” என்றார்.
அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர். அதைப் படித்துப் பார்த்த ராஜா, “ஆஹா! மிக மிக அற்புதம்! என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன? என்றார்.
அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலைநறுக்கில் எழுதித் தந்தனர்.
அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார்.
“இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே! இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்” என்று மகிழ்ந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான்.
அந்த வாசகம் என்ன தெரியுமா?
“இலவசமாக உணவு கிடைக்காது!” என்பது தான் அந்த வாசகம்.
இன்னொரு கதை பார்க்கலாமா?
ஒரு ஊரில் ஒரு சிட்டுக்குருவி இருந்தது. அதற்கு விநோதமான பொழுதுபோக்கு இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல அது விநோதமான உணர்வுகளை மனித இனம் போன்ற இதர இனங்களிலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வுகளை கலெக்ட் செய்வது தான் அதனுடைய ஹாபி!
மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது விரும்பி கலெக்ட் செய்து கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு குஷி வந்து விடும். தன் பையில் பொறாமையைச் சேர்த்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான கலெக் ஷனாக அது விநோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!! பேராசைகளின் அடிப்படையிலான விநோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை.
தனது கலெக் ஷனை எண்ணி மகிழ்ந்து போனது அது! இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை விநோத உணர்வு கலெக்ஷனால் நிரம்பித் தளும்பப் போகிறது!
ஒரு நாள் அதற்குப் பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இதுவரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால் இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.
சோர்ந்துபோன் அது ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், “என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே. உடம்புக்கு என்ன?” என்றது.
“நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய்விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை” என்றது.
பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டது நாய்.
“அதுவா, என்னுடைய கலெக்ஷனான உணர்வுகளை வைத்திருக்கிறேன்” என்றது குருவி.
“அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்” என்றது நாய்.
“எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் கலெக்ட் செய்திருக்கிறேன்” என்றது குருவி.
“அப்படியா! இந்தப் பைதான் உன்னைப் பறக்கவிடாமல் செய்கிறது என்று நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்” என்றது நாய்.
“சே! புரியாமல் பேசுகிறாயே! இது. மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை” என்றது குருவி.
நாய் நண்பன் விடவில்லை. “எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்” என்றது அது.
ஒத்து கொண்ட குருவி தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது.
அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது.
அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம், இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.
ஒவ்வொன்றாக அது கீழே போடப்போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அது அதிக ஆற்றலுடன் பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.
சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தபோது சொன்னது:-
“நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்திவிட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை கலெக்ட் செய்யவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அதுமட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட, கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு. மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது. மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால் அவர்களும் விண்ணைத் தொடலாமே!”
சிட்டுக்குருவியின் உரையைக் கேட்ட நாய் மகிழ்ந்தது. இருவரும் சிரித்த போது வானமே லேசாகி சிரித்தது போல இருந்தது.
இந்தக் கதைகள் கூறும் நீதி தான் வாழ்க்கையில் மேம்படுவதற்கான அஸ்திவாரமான உண்மைகள்!
**
மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, அக்டோபர் மாதம் வெளியான கட்டுரை.
Varna Rekha
/ August 22, 2024May we know why you have started sharing a womans’ mag articles?