Post No. 13,566
Date uploaded in London – 21 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

அனுமன் பற்றி, ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் ,சொன்ன 2 சுவையான விஷயங்களை முதலில் காண்போம் :
1.ஞானம், பக்தி இரண்டினையும் ஒற்றுமைப்படுத்தும் புராணக் கதை ஒன்று உண்டு ஸ்ரீ ராமத்சந்திர மூர்த்தி பக்தியின் சிறந்த ஹநுமானைப் பார்த்து ,
என் குழந்தாய், எந்த பாவனையோடு என்னைக் காண்கிறாய் ? எவ்விதம் என்னைத் தியானம் செய்கிறாய்? என்று கேட்டார்.
சில சமயம் பின்னப்படாத பூரணனான உன்னைக் காண்கிறேன் . அப் போது பூரணமான தெய்வீகத்தின் ஒரு அம்சமாக , ஒரு திவலையாக என்னைப் பாவித்துக் கொள்கிறேன். உன்னைத் தேவநாயகனாகக் காணும்போது என்னை உன் அடித்தொண் டனாகக் கருதி தியானம் செய்கிறேன். ஆனால் தத்துவ ஞானமாகிய உண்மை ஞானத்தை அடையும்போது நானே நீயாக, நீயே நானாகக் காண்கிறேன்- என்று ஹனுமான் பதில் கூறினார். (பக் தியும் ஞானமும் முடிவில் ஒன்றே என்ற தலைப்பில் இது வருகிறது )
(பாரதியும் 23 பாடல்களில் கண்ணனையும், கண்ணம்மாவையும் எப்படிக் கண்டான் என்பதை இங்கே நினைவு கூறலாம் ).
xxx
2.உருவமுள்ளவாயினும் உருவம் இல்லாதவனாயும் ஈசுவரன் ஹநுமானுக்குத் தரிசனம் தந்தருளினான் .என்றாலும் ஹனுமான் தான் ஈசுவரதாசன் என்ற அஹங்காரத்தைக் கொண்டவனாகவே இருந்தான்.நாரதர், ஜனகர், ஸநந்தனர் , ஸனத்குமாரர் ஆகியவர்களுடைய விஷயமும் இப்படித்தான். அவர்கள் பிரம்மா ஞானத்தை அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் ஆற்றோட்டத்தின் சப்தத்தைப்போல் ஈசுவரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றனர். இதனால் அவர்களிடத்தும் சிறிது அஹங்காரம் இருந்தது என்று தெரிகிறது. உலகத்திற்கு தர்மப் பிரசாரம் செய்வதற்குத்தான் இந்த அஹங்காரம்.
xxx

இரண்டாவது ஸ்லோகத்துக்கு வருவோம்
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
ராம தூதனே ; தங்கள் ஈடு இணையில்லாத பலம் உடையவர். அஞ்னையின் புத்திரர்; வாயுவின் புத்திரர்
கம்பனும் இப்படித்தான் நமக்கு அனுமனை அறிமுகப்படுத்துகிறான் ; இன்னுமொரு இடத்தில் வாயு குமாரன் என்பதை அழகாக காற்றின் மைந்தன் என்கிறான்.
“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –
(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்). இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான்.
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .
ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்
“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்
இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..
உடனே அனுமன்,
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ”
என்று பதில் தருகிறான்.
xxx
அனுமனை நினைத்தவுடனே நமக்கு ராமன் நினைவு வந்துவிடும்; நமக்கு பலமும் கிடைத்துவிடும் ஏனெனில் அனுமன் பலத்துக்கும், காற்றின் வேகத்துக்கும் , துணிவுக்கும் இலக்கணமாகத் திகழ்பவன் இதோ அடுத்த ஸ்லோகம்.
xxx

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
பொருள்
தங்கள் மஹாவீரர் ; அளவற்ற வீரம் உடையவர். வஜ்ரம் போன்ற உடலுறுப்புகளைக் கொண்டவர் மனிதர்களின் கெட்ட புத்தியை நீக்கி நல்லறிவினை நல்குகிறீர்கள்.
புராதன இந்தியாவில் இரண்டே பேருக்குத்தான் மஹாவீரர் பட்டம்; ஏனெனில் இருவரும் புலன்களை வென்றவர்கள் .சமண சமய 24-ஆவது தீர்த்தங்கரரும் அனுமனும் மஹாவீரர் என்ற பெயரால் துதிக்கப்படுகிறார்கள் . மற்ற நாடுகளில் ஏ கே 47 துப்பாக்கிகளால் அ தி கம் பேரை சுட்டுக் கொல்வோரை மஹாவீரன் என்பார்கள் .
அவ்வையார் சொல்கிறார் :
ஓன்றாகக் காண்பதே காட்சி; புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம் – என்று
கம்பன் , அவனது வீரத்தை யமனின் ஆற்றலுக்கு ஒப்பிடுகிறான் ; அழகில் மன்மதனாம்
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”
இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.
XXXX
எல்லோரும் சொல்லவேண்டிய சம்ஸ்க்ருத ஸ்லோகம் இதோ :
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால் இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.
அனுமனின் தோற்றத்தை துளசிதாஸர் வருணிப்பதையும் காண்போம்.
தொடரும் …………………………..
–subham—
Tags- மஹாவீரர், புத்திர் பலம் யசோ தைர்யம் ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் , Part 3 ,ராமக்ருஷ்ண பரமஹம்சர்