சிம்மாசலம் வராக லட்சுமி  நரசிம்மர் கோவில்-26 (Post No.13,569)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,569

Date uploaded in London – 22 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 26

கோவில் எங்கே இருக்கிறது ?

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டிண துறைமுக நகரிலிருந்து 15 கி.மீ.

 (Sri Varaha Lakshmi Narasimha temple)

என்ன சிறப்புகள் ?

பிரகலாதனுடன் தொடர்புடைய ஸ்தலம். நாஸ்தீகனான ஹிரண்ய கசிபுவை பெருமாள் சிங்க முக வடிவில் வந்து (நரஸிம்ம ) கிழித்தெறிந்த கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார்.

இங்கு வராஹ நரசிம்மர் என்று அழைப்பதற்கான காரணம் அவர் காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் செதுக்கப்பட்டுள்ளார். பெருமாளை சாதாரண மனித வடிவிலும் அமைத்துள்ளதால் மொத்தம் மூன்று வடிவங்ககளில் (வராஹ மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி , மனித உருவம் ) சேவிக்கலாம் ;சிம்மாசலம் என்ற குன்றின் மேல் அமைந்துள்ளதால்  சிம்மாசலம் கோவில் என்றும் சொல்லுவார்கள் .

என்ன அதிசயம் ?

கருவறையில் உள்ள மூலவரை — பெருமாளை ஒருசில நாட்கள்  மட்டுமே சந்தனக்  காப்பில்லாமல் காண முடியும்; தமிழ்நாட்டில் உத்தர கோச மங்கை நடராஜரை சந்தனக்  காப்பால்  ஆண்டு முழுதும் சார்த்தி வைப்பது போல இங்குள்ள லட்சுமிநரசிம்மரையும் ஆண்டு முழுதும் சந்தனத்தால் காப்பிடுகின்றனர். காரணம் என்ன வென்றால் உக்கிர நரசிம்மரை குளிர்விப்பதற்காக ; அவரின் கோபம் தணிந்து சாந்தமாக,  ஆண்டுதோறும் 500 கிலோ சந்தனத்தைப் பூசுகின்றனர் .

 மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார்.

இது தவிர , கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவராக லட்சிமி  நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. ஒவ்வொரு  வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தனக் காப்பு விலக்கப்பட்டு வராக லட்சுமி நரசிம்மர்  தன் உண்மை உருவத்துடன் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் . இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். இருக்கிறார்கள்

கையில் தாமரையுடன் ஆண்டாள் , லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன. கோவிலின் மூலவர் சந்தனக் காப்பிட காலங்களில் சிவலிங்கத்தைத் தரிசிப்பது போல இருக்கும்.

1000 படிகள்

கோவிலை அடைய கொஞ்சம் சிரமப்பட வேண்டும் ஏனெனில் 1000 படிகள் ஏறினால்தான் அவர் தரிசனம் தருவார். ஆனால் வண்டிகளிலும் போகலாம் தென்னாட்டிலுள்ள பெரும்பாலான நரசிம்மர் கோவில்கள் குன்றின் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கம் மலைக் குகைகளில் தானே இருக்கும் ! கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் கோவில் அமைந்துள்ளது.

இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (???) மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் ஏற வேண்டும்.

கோவில் வரலாறு

ஹிரண்யகசிபு மற்றும் அவன் தம்பி ‘ஹிரண்யாட்சன் ஆகிய இருவரும் கடவுள் இல்லைஇல்லவே இல்லை’ என்று நாஸ்தீக வாதம் பேசினார்கள் . அவனது மகன் பிரகாலதானோ ஸநாதன ஹிந்து; கடவுள் உண்டு அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்; அணுவிலும் இருப்பான் மலையிலும் இருப்பான் என்று முழங்கினான் ; எங்கே? இந்தத் தூணில் இருக்கிறானோ , பார்ப்போம் என்று சொல்லி அரண்மனைத் தூணை எட்டி உதைத்தான் முட்டாள் ஹிரண்யகசிபு; பெருமாள், பிரஹலாதன் என்னும் சிறுவனை — ஹிரண்யகசிபுவின் மகனைக் காப்பாற்ற– சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவின் வயிற்றை இரு கூறாகக்கிழித்து துவம்சம் செய்தான். நாத்தழுழும்பு ஏறிய நாத்திகர் என்று மாணிக்க வாசகர் பாடிய,  கெட்டுப்போன நாத்தீகர்களுக்கு, என்னே நேரிடும் என்பதே, நரசிம்ம அவதாரம் நமக்குப் போதிக்கும் பாடம்.

தல புராணத்தின்படி, பிரகலாதன் கட்டிய கோவில் இது ; காலப்போக்கில் அது அழியவே , அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் ,சிலையைக் கண்டெடுத்து  மீண்டும்  கோவிலை எழுப்பினான் அப்போது வானிலிருந்து எழுந்த அசரீரி ஒலி இட்ட கட்டளைப்படியே  சந்தனக் காப்பு இடுகிறார்கள்  இது ஐதீகம் , அதாவது செவிவழி வந்த நம்பிக்கை

வரலாற்றுச் சிறப்புகள்

குலோத்துங்க  சோழனின் பதினோராம் நூற்றாண்டு  கல்வெட்டுகள் இந்தக் கோவில் பற்றிய தகவலைத் தருகிறது பின்னர், 13 ஆம் நூற்றாண்டு கீழைக் கங்க மன்னர்கள் கோவிலை விரிவாக்கினர். சிற்பங்களும், கட்டிடக் கலையும் ஒரிஸ்ஸா  பாணியைக் கொண்டவை .

கருவறைக்கு இடப் பக்கம் கப்பஸ்தம்பம் என்ற தூண். மணிகளாலும் பட்டு துணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கீழே சந்தான கோபாலரின் யந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதைக் கட்டிக்கொள்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

1268 ஆம் ஆண்டு கல்வெட்டு தரும் செய்தி

விஜய நகர பேரரசன் கிருஷ்ண தேவ ராயரின் தலைமைத் தளபதி நரசிம்மன் கோவிலின் விமானம், முக மண்டபம், நாட்டிய மண்டபங்களைக் கட்டினான். ஆதிகாலத்தில் விமானத்துக்குத் தங்கக் கவசம் இட்டான்

கோவிலில் ஒரு கல்ரதமும் உள்ளது இது உலகப் புகழ்பெற்ற கொனார்க் சூரியன் கோவில் ரதம் போல இருக்கும்.

குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காலம்  1098-99; அவன் கலிங்க நாட்டினை வென்றான்

வௌ நாடு சிற்றரசன் கொங்காவின் ராணி  Velanadu Chief Gonka 111(AD 1137-56) நரசிம்ம சுவாமிக்குத் தங்கக் காசம் விட்டதா இன்னொரு கல்வெட்டு சொல்கிறது.

கல்யாண மண்டபத் தூண்களில் காகதீய வம்ச அரசர் கால சிற்பிகளின் கைவண்ணம் தெரிகிறது கல்யாண மண்டபத்தில் 96 தூண்கள் பதினாறு (16X6) வரிசையில் உள்ளன

கோவில் மாடங்களில் மூன்று திசைகளில் காணப்படும் வராஹம், நரசிம்மர், த்ரிவிக்ரமன் ஆகியன உருவத்தில் பெரியவை.

இந்த இடம் காடுகளுக்கு இடையே இருப்பதால் கங்காதர என்ற நீர்வீழ்ச்சியும் உளது இதனால் தெலுங்கு மொழியில் ஒரு வாசகம் உளது

சிம்மாசலத்துக்கு மிஞ்சிய மலையும் இல்லை

நரசிம்மருக்கு மிஞ்சிய தெய்வமும்  இல்லை

கங்காததாரத்துக்கு மிஞ்சிய அருவியும் இல்லை

xxxx

விழாக்கள்

ஆண்டுக்கு ஒரு முறை  கல்யாண  உற்சவம் நடக்கிறது. அட்சய திருதியை நாளில் சந்தனக்காப்பு நீக்கப்படுவதால் அப்போது பக்தர்கள் யாத்திரையாக வருகின்றனர் ; இது  வட இந்தியாவில் நடக்கும் பெரும் யாத்ரா (ஜாத்ரா) போல நடக்கிறது .

கிரிப் பிரதட்சிணம்

32 கி.மீ., தூரம் உள்ள சிம்மாசலம் மலையை ஏராளமான பக்தர்கள் வலம் வருவார்கள்  சிம்ஹாசலம் ஸ்ரீ வராஹ லட்சுமி ஸ்வாமியின் வருடாந்திர ‘கிரி பிரதக்ஷிணம் கோடை காலத்தில்  நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் 32 கிமீ நீள மலைப்பாதையை வலம் வருவார்கள் பக்தர்கள் ‘தோளி பவஞ்சாவில்’ தேங்காய் உடைத்து பிரதக்ஷிணத்தைத்  தொடங்குவார்கள். ஸ்ரீ ஸ்வாமி வாரி ரதம் தோளி பவஞ்சில் இருந்து தொடங்கும்.

—subham—

Tags- சிம்மாசலம்,  வராக லட்சுமி நரசிம்மர் கோவில்,  ஆந்திர மாநிலம்,  108 புகழ்பெற்ற கோவில்கள் –, Part 26, சந்தனக்காப்பு, கிரிப் பிரதட்சிணம்

Leave a comment

Leave a comment