வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்!–1 (Post No.13,568)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.568

Date uploaded in London – 22 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 1

ச. நாகராஜன்

ஹலோ! நல்லா இருக்கீங்களா?

இன்று கையில் செல் போனை வைத்துக் கொண்டு இப்படி பேசாதவர் யாருமே உலகில் இல்லை எனலாம். எதற்கெடுத்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எல்லோரிடமும் செல் போன் – தகவல் தொடர்புக்கு இன்றியமையாத சாதனமாகத் திகழும் இதைக் கண்டுபிடிக்க வழி வகுத்தவர் ஒரு நடிகை என்றால் ஆச்சரியமாக இல்லை – ஆ,ம், அந்த பேரழகியான நடிகை ஒரு விஞ்ஞானியும் கூட என்றால் இன்னும் வியப்பு அதிகமாகும்!

அவர் பெயர் ஹெடி லமார்! (Hedy Lamarr)!

பிறப்பும் இளமையும்

ஆஸ்திரியாவில் லிவிவ் என்ற இடத்தில் (இப்போது உக்ரேனில் உள்ள இடம் இது) 1914-ம் ஆண்டு ஹெடி லமார் என்ற ஈவா மேரி கியஸ்லர் பிறந்தார். தந்தை  ஜெர்ட்ருட் ட்ரூட் கியஸ்லர் ஒரு உயர் அதிகாரி. யூதரான தாயார் எமில் கியஸ்லர் பியானோ வாசிப்பவர்.

ஐந்து வயதிலேயே புதிதாக எதையும் செய்யும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. பழைய மியூஸிக் பாக்ஸ் ஒன்றை எடுத்து அதைப் பிரித்துப் போட்டு விட்டு, திருப்பியும் அதை அப்படியே அசெம்பிள் செய்தார் அவர். படிக்கும் போது அவருக்கு இரசாயனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானதால் கெமிக்கல்களை ஒன்றுடன் ஒன்று கலந்து பார்ப்பது அவரது வழக்கமானது.  அதே சமயம் தந்தையாருடன் நடைப்பயிற்சி செய்யும் போது, அவர் எப்படி நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவார்.

திரைப்பட வாய்ப்பு

12-ம் வயதில் வியன்னாவில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசைத் தட்டிச் சென்றார் அவர்.

முதன் முதலாக 1933-ல் அவரது 19-ம் வயதில் செக்கோஸ்லேவிகிய, ஆஸ்திரிய தயாரிப்பான எக்ஸ்டஸி என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த பிரதான நடிகை ஒரு யூதர் என்பதால் அதை ஹிட்லர் தடை செய்தார்.

ஆனால் படிப்படியாக அவரது நடிப்பு மக்கள் மனதை ஈர்க்கவே அவர் புகழ் பெறலானார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஜிக்ஃபீல்ட் கேர்ள் (1941) மற்றும் சாம்ஸன் அண்ட் டிலைலா (1949) அவரை புகழேணியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதிக சம்பளத்தைத் தைரியமாகக் கேட்டவர்

நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் அனைத்து யூதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிய காலம் அது! ஆகவே பிரபலமான எம்ஜிஎம் உரிமையாளரான லூயிஸ் பி. மேயர், ஜெர்மனியிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கும் நல்ல நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்யலாம் என்று அங்கு வந்தார். மெட்ரோ கோல்ட்வின் மேயரைப் பார்க்கவே தவம் செய்வார்கள் எல்லா பிரபலங்களும்! அவர் எப்போது தம்மைக் கூப்பிடுவார் என்று அனைவரும் ஏங்கியிருந்தனர். மேயர்  லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார். “உனக்கு வாரத்திற்கு 125 டாலர் சம்பளம் தருகிறேன். ஹாலிவுட் வருகிறாயா?“  என்று கேட்டார். “சாரி! அந்தச் சம்பளத்திற்கு என்னால் வர முடியாது” என்று டக்கென்று பதில் சொல்லி விட்டார் லமார்.

மேயர் மட்டுமல்ல, அனைவருமே திகைத்துப் போனார்கள். கூடுதல் சம்பளத்திற்கு வழி என்ன என்று யோசித்தார் லமார். ,மேயர் திருப்பி அமெரிக்கா செல்லும் கப்பல் எது என்று அறிந்து அதிலேயே தனக்கும் ஒரு டிக்கட்டை பதிவு செய்தார் அவர்.

ஒரு நாள் கப்பலில் மேல்தளத்தில் அவர் அமர்ந்திருந்த போது பளபளக்கும் ஆடையை அணிந்து அவர் டேபிளின் அருகே அவர் தன்னைப் பார்க்கிறாரா என்று நன்கு கவனித்து ஒய்யாரமாக அன்ன நடை நடந்தார் அவர்.

மேயர், லமாரை அழைத்து வாரத்திற்கு ஐநூறு டாலர் தருகிறேன் என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது!

புதிய பெயர்

ஹாலிவுட்டில் நடிக்க அவருக்கென பிரத்யேகமாக ஒரு பெயர் தேவை என்று கோல்ட்மேயர் நினைத்தார். கோல்ட்மேயரின் மனைவி மார்கரெட் மௌனபட காலத்தில் பிரசித்தமாக விளங்கிய நடிகையான பார்ப்பாரா லமார் பெயரில் உள்ள ‘ல மார்’ என்பது பிரெஞ்சு வார்த்தை போல இருப்பதால் அதை அவருக்குச் சூட்டலாம் எனக் கூறினார். அது முதல் அவர் ஹெடி லமார் ஆனார். டிஸ்னியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரமான ஸ்நோ ஒய்ட்டும், பேட்மேனில் வரும் கேட் உமனும் அவரைப் பார்த்து பெற்ற உத்வேகத்தால் அமைக்கப்பட்டவையே.

தொடர்ந்து அவரது திரை வாழ்க்கையில் ஏராளமான படங்களில் அவர் நடித்துப் புகழ் பெற்றார். வானொலி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்றார். தானே ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஆனார்.

விருதுகள்

ஏராளமான விருதுகளை அவர் வாழ்ந்த போது பெற்றார்.  அவர் மறைந்த பிறகு இன்னும் பல விதத்தில் அவரது நினைவு போற்றப்படுகிறது.

 வியன்னா பல்கலைக்கழகத்தில் 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட க்வாண்டம் டெலஸ்கோப்பிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2019, ஆகஸ்ட் 27-ம் தேதி ஒரு விண்கல்லுக்கு “32730 லமார்” என்று அவரை கௌரவிக்கும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டது.

உலகப் போரில் சேவை

இரண்டாம் உலகப் போரின் போது அவர் சேவை செய்ய முன்வரவே அவர் போர் பத்திரங்களை விற்க உதவி செய்யுமாறு கோரப்பட்டார். ரசிகர்கள் முன்னிலையில் அவர் நின்று இந்தப் பத்திரங்களைத் தர ஏராளமானோர் இந்த பத்திரங்களை வாங்கி நிதி உதவி செய்தனர்.

குடும்பம்

லமாரைப் பாராட்ட வந்த ஏராளமானோரில் ப்ரெடெரிக் மாண்டில் என்பவரும் ஒருவர். அவர் ராணுவத்திற்கு ஆயுதம் விற்கும் வியாபாரி. அவர் லமாரை விடாது தொடரவே அவரை 1933-ல் லமார் மணந்தார். ஆனால் அவர் முஸோலினிக்கு மிக நெருங்கியவராக இருந்ததோடு ஹிட்லருக்கும் வேண்டியவராக இருந்தார். ஆகவே திருமணம் நிலைத்திருக்கவில்லை. பாரிஸுக்கு விரைந்தார் அவர். இதன் பிறகு ஐந்து முறை மணந்தார் அவர். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 1955-ல் நடந்த கடைசி திருமண முறிவுக்குப் பின்னர் 35 வருடங்கள் அவர் தனியாகவே வாழ்ந்தார்.

 to be continued……………………………

Leave a comment

Leave a comment