வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 2 (Post No.13,572)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.572

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 2

ச. நாகராஜன்

புதிய கண்டுபிடிப்பு

உலகப் போர் மும்முரமான போது தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒன்றாக ஆனது. ஹிட்லர் எனிக்மா என்கோடிங் மெஷின் என்ற ரகசிய சங்கேதம் அனுப்பும் மெஷினை வைத்தே தனது ரகசிய திட்டங்களையும் ஆணைகளையும் அனுப்பி வந்தான். டைப்ரட்டர் அளவே உள்ள அந்த சிறிய மெஷின் பதினைந்து லட்சம் கோடி சங்கேத முறைகளில் வேறு வேறாகச் செய்திகளை அனுப்பும் திறன் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவம் இந்த சங்கேதங்களை இடைமறித்துக் கேட்டாலும் அது என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் நேச நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.

நேசநாட்டு ராணுவத்தினருக்கு ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து ஆணைகளை விரைவாக அனுப்புவது இன்றியமையாத தேவையாக ஆகி விட்டது முக்கியமாக கடற்படையினருக்கு விரைவாக அனுப்பும் தகவல் தொடர்பு முக்கியமானதாக ஆனது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் லமார் உச்சகட்ட புகழில் இருந்த போது பிரபல இசையமைப்பாளரான ஜார்ஜ்   அன்தெய்லுடன் இணைந்து ஒரு ரகசிய தகவல் தொடர்பு அமைப்பைக் கண்டுபிடிப்பதில்  முனைந்தார். லமார் ஒரு கணித நிபுணி.  அன்தெய்லின் உதவியுடன் பியானோவை இசைக்கும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ப்ஃரீக்வென்ஸி ஹாப்பிங் எனப்படும் அலைவெண் தத்தலைக் கண்டுபிடித்து உரிய பேடண்டையும் எடுத்தார். இதன் மூலம் ரேடியோ மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தி, ஏவி எதிரிகளை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்க கடற்படையை அணுகி தனது கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார்.

பியானோவை வைத்து அதில் 88 வெள்ளை மற்றும் கறுப்பு கீ- கள் இருப்பதால் அதை வைத்து அலைவெண்களுக்கு இடையே மாற்றுகின்ற ஒரு புதிய உத்தியை அவர் கண்டு பிடித்தார். இதன் மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தலாம் என்று அவர் கூறினார்.

 அவரை புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இவராவது டார்பிடோ குண்டுகளை ஏவுவதாவது என்று எண்ணிச் சிரித்தனர். அவரது கண்டுபிடிப்பின் பெருமை பற்றி அறிய அவர்கள் முற்படவில்லை. ஆனால் 1962ஆம் ஆண்டு தான் இதைப் பற்றி கடற்படைநன்கு  அறிந்து அதை அமுல்படுத்தியது. 

என்ன நடந்தது என்பதை அவர் ‘பாம்ப்ஷெல்: தி ஹெடி லமார் ஸ்டோரி’ என்ற ஒரு பதிவில் தானே பேசி இருக்கிறார். 

பெரிதும் நிராசையடைந்த லமார் ஒரு விதமாக அங்கீகாரமும் கிடைக்காமல் போக,  பேடண்ட் உரிமையும் காலாவதி ஆகவே முயற்சியையும் கை விட்டார்; நம்பிக்கையையும் இழந்தார். 

ஆனால் இன்றைய கணினி யுகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள செல் போன், ப்ளூ-டூத், மற்றும் வை-ஃபி போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு விதை ஊன்றியவரே அவர் தான். அவருக்கு அதற்கான புகழ் கிடைக்கவில்லை.1997இல் தான் அவர் பெருமை உலகிற்கு தெரிய வந்தது.

அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மட்டுமல்ல, மிக பிரம்மாண்டமாக வரவேண்டிய கண்டுபிடிப்பு தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கான உத்தேச காப்பீட்டுத் தொகை மட்டும் சுமார் 3000 கோடி டாலர் என்று  மதிப்பிடப்படுகிறது.

லமார் பற்றிய படங்களும்புத்தகங்களும் 

லமார் பற்றி ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும்,  கூட வெளி வந்து விட்டன. அவரது சுயசரிதை பற்றி அவர் கூறுகையில், “இது சரியான சுயசரிதை இல்லை. இதை என் சார்பாக எழுதியவர் தனக்குத் தோன்றியதை எழுதி விட்டார். உண்மை சரிதத்தை நானே எழுதுகிறேன்” என்றார். ஆனால் அதை எழுதுவதற்குள் அவரது இறுதி நெருங்கி விட்டது. 

மறைவு

லமார் தனது இறுதி ஆண்டுகளில் யாருடனும் நேரில் பேசவில்லை. யாரானாலும் போனில் மட்டுமே பேசி வந்தார்.

 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தனது 85-ம் வயதில் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காஸல்பெர்ரி என்னுமிடத்தில் அவர் இதயநோய் காரணமாக இறந்தார். அவரது மகன் அவரது அஸ்தியின் ஒரு பகுதியை அவரது விருப்பப்படி ஆஸ்திரியா கொண்டு சென்று வியன்னா காடுகளில் தூவினார்.

2014-ல் அவரது நினவுச் சின்னம் வியன்னா சென்ட்ரல் கல்லறையில் நிறுவப்பட்டது. மீதமுள்ள அஸ்தியும் அங்கு புதைக்கப்பட்டது. 

அனுபவ மொழிகள்

தனது வாழ்க்கையின் அனுபவ மொழிகளாக அவர் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அவற்றில் சில:

 எந்தப் பெண்ணுமே கவர்ச்சியானவள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டாள் போல நின்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்! 

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள். 

உண்மையான நல்ல கண்டுபிடிப்பு சமுதாயத்தின் மீது நலன் தரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் தொழில்நுட்பமோ என்றும் உள்ளது; சிரஞ்சீவியானது.

 எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் எதையும் அறியும் ஆர்வமுமே உத்தரவாதங்களை விட மேலானவை. நம்மால் உணரமுடியாதவையே என்ன ஈர்த்தன. ஈர்க்கின்றன. 

அடுத்த முறை செல்போனை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது அதற்கு வழிகோலிய லமாரை மனதாரப் பாராட்டலாம், இல்லையா!

***

Leave a comment

Leave a comment