சந்திரனுக்கு உடல் ஊனம்; சனிக்கோ கால் ஊனம்! (Post No.13,813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.813

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தனிப்பாடல் தமிழ் இன்பம் 

சந்திரனுக்கு உடல் ஊனம்சனிக்கோ கால் ஊனம்! 

ச.நாகராஜன் 

குறையில்லாத மனிதனே இல்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் குறை உண்டாம்.

சொக்கநாதப் புலவர் தன் பாடல் ஒன்றில் வரிசையாக அடுக்குகிறார் தேவர்களின் குறைகளை!

 சந்திரனுக் குடலூனந் தனதனுக்கோர் கண்ணூனந் தருவினீழல்

 இந்திரனுக்கோ பகக்குறையா மியமனுக்கோ புழுக்காலா மிரவியீன்ற

 மைந்தனுக்கோ கால்முடமாம் வனசனுக்கோர் தலைகுறையாம் வரலாறீதேல்

 பந்தமுள மானிடரை விதிவிடுமோ ஆலவாய்ப் பதியுளானே

பாடலின் பொருள்: 

ஆலவாய்ப் பதியுளானே – திருவாலவாய் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருப்பவனே

சந்திரனுக்கு உடல் ஊனம் – சந்திரனுக்கு உடல் பழுது

தனதனுக்கு  ஓர் கண் ஊனம் – குபேரனுக்கு ஒரு கண் பழுது

தருவின் நீழல் இந்திரனுக்கு பகக்குறி – கற்பகத்தருவின் நிழலில் இருக்கின்ற இந்திரனுக்கோ உடம்பு முழுவதும் பெண் குறி

இயமனுக்கோ புழுக்கால் – யமனுக்கோ புழுக் கால்

இரவி ஈன்ற மைந்தனுக்கோ கால் முடமாம் – சூரியன் பெற்ற புதல்வனான சனிக்கோ கால் முடம்

வனசனுக்கு ஓர் தலை குறையாம் – தாமரை மலரை ஆசனமாகக் கொண்ட பிரம்மாவுக்கு ஒரு தலை குறையாகும்

வரலாறு ஈதேல் – வரலாறு இதுவென்றால்

பந்தமுள மானிடரை – பாசக்கட்டுள்ள மானிடரை

விதி விடுமோ – விதியானது விட்டு விடுமா என்ன?!

 தனது குறையையும் அவர் சூசகமாக ஒரு பாடலில் கூறி திப்பையராயன் என்ற வள்ளலிடம் வேண்டியதைப் பெற்றார்.

இத்தோடு சூரியனுக்கு பல் ஊனம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்!

பாடல் இதோ:

 இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா நக்கினி யுதரவிட் டகலான்,

 எமனெனைக் கருதா னரனெனக் கருதி நிருதிவந் தென்னை யென்செய்வான்

 அந்தமாம்வருண நிருகண்விட்டகலா னகத்தினின் மக்களும் யானும்

 அநிலம தாக மமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகில்

 சந்ததமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித்

 தலைசெயு மெம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவக் கோப்பையளுதவும்

 மந்தர புயத்தான் றிப்பைய ராயன் மகிழ்வொரு விலையிலா வன்னோன்

 வாக்கினாற் குபேரனாக்கினா னவனே மாசிலீ சாணபூ பதியே

பாடலின் பொருள்: 

இந்திரன் – தேவேந்திரன்

கலை ஆய் – ஒரு கூறாகி

என் மருங்கு இருந்தான் – என்னிடத்தில் இருந்தான்

அக்கினி – அக்கினியானவன்

உதரம் விட்டு அகலான் – என் வயிற்றை விட்டு நீங்க மாட்டான்

என்னை அரன் எனக் கருதி – என்னை சிவன் என்று நினைத்து

எமன் கருதான் – எமன் என்னை நினைக்க மாட்டான்

நிருது வந்து என்னை என் செய்வான் – நிருதியானவன் வந்து என்னை என்ன செய்வான்

அந்தம் ஆம் வருணன் – அழகாகிய வருணன்

இரு கண் விட்டு அகலான் – இரண்டு கண்களையும் விட்டு நீங்க மாட்டான்

அகத்தினில் – வீட்டில் மக்களும் யானும்

அநிலமது ஆகும் அமுதினைக் கொள்வோம் – காற்றாகிய அமிர்தத்தை உட்கொள்வோம்

உலகில் – உலகத்தில்

எமக்கு எதிர் – எமக்கு நிகரானவர்

யார் உளார்- யார் இருக்கின்றார்கள்

சந்ததம் – எப்பொழுதும்

இந்த வரிசையைப் பெற்று – இந்த முறைமையைப் பெற்று

தரித்திர ராசனை வணங்கி – தரித்திரராஜனைத் தொழுது

தலைசெயும் எம்மை – தழைக்கின்ற எங்களை’

நிலை செய் – நிலைப் படுத்திய

நற்கீர்த்தி – நல்ல புகழை உடைய

சாளுவ கோப்பையன் உதவும் – சாளுவ கோப்பையன் பெற்ற

மந்தரபுயத்தான் – மந்தரமலை போலும் தோள்களை உடைய

திப்பையராயன் – திப்பையராயன் என்பான்

மகிழ்வொடு – சந்தோஷத்துடன்

அன்னோன் வாக்கினால் – அவனது சொல்லினால்

குபேரன் ஆக்கினான் – குபேரனாகச் செய்தான்

அவனே மாசிலாத – அவனே குற்றமில்லாத

ஈசான பூபதி – ஈசானத்திற்கு அதிபதியானவன்!

அருமையான இந்தப் பாட்டின் மூலம் தன் அவல நிலையைத் தெரிவிக்கிறார் கவிஞர் சொக்கநாதர். 

தான் உடுத்திய ஆசை கந்தையாய்ப் பல துளைகள் உள்ளது என்பதை ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் மேனிக்கு உவமையாகக் கூறினார்.

பசி ஒருபோதும் தன்னை விட்டு நீங்கவில்லை என்பதை அக்கினி உதரம் விட்டு அகலான் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

வருணன் இரு கண் விட்டு அகலான் என்று கூறி தனது இரு கண்களிலும் நீர் அழுகையாகப் பொழிகிறது என்று நயமாகக் கூறினார்.

 அநிலமதாகும் அமுது என்று கூறி வாயுவையே ஆகாரமாகக் கொள்வதைக் குறிப்பாகக் கூறினார். 

இப்படி இந்திரன் முதலிய அஷ்டதிக்பாலகர்களும் தேவர்களும் எனது வசமாய் இருக்கிறபடியால் எனக்கு நிகரானவர் உலகத்திலேயே இல்லை என்று அவர் கூறுகிறார்.

 பசி வருத்துவதை புகழ் மொழி போல இரு அர்த்தம் கொண்ட பாடலாக உரைத்தார் சொக்கநாதர்.

 அவர் பசிப்பிணி தீர்ந்தது; குபேரன் அளவு செல்வம் குவிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

 தமிழின் அழகையும், புலவரின் கவித்திறனையும் தமிழ் வளர்க்கும் வள்ளல்களின் வள்ளன்மையையும் காட்டும் பாடல் இது! 

**

Leave a comment

Leave a comment