Post No. 13,840
Date uploaded in London – 1 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 1-11-2024
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத் வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
வணக்கம் இன்றைய நாள் நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை
******
அயோத்தியில் தீபத் திருவிழா
ஞானமயம் சார்பில் முதலில் உங்கள் அனைவர்க்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் நாளன்று கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பினார்; அதைக் கொண்டாடும் விதமாக தீப உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 25 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன; இந்த ஆண்டு 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
அயோத்தியில் நடைபெற்று வரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
” தீப உற்சவ திருவிழாவையொட்டி கடந்தாண்டு சரயு நதிக்கரையில் 22 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மண் விளக்குகளை ஏற்றி அயோத்தி மாநகரத்தை ஔிர செய்ய திட்டமிடப்பட்டது.
தீப திருவிழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
அயோத்தியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதன்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முன் தீப உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
*****
காசியில் தீபாவளி
காசியில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. தீபாவளித் திருநாளில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது “மணிகர்ணிகா கட்டம்’’ மட்டுமே! ‘‘எந்த இடத்தில் சங்கரர் யாரும் கடக்க முடியாத சம்சார சாகரத்தைக் கடக்க வைக்கிறாரோ, அதுவே மணிக்கர்ணிகா கட்டம்’’ – என்று ‘காசி காண்டம்’’ விளக்குகிறது. ‘‘மணிகர்ணிகாவில், மாத்தியாந்நிக ஸ்நானம் செய்பவர் நாராயணனையோ, சிவனையோ அடைகிறார். மணிகர்ணிகாவில் மரணம் நேரிடின், அப்படி ஆவி பிரிந்தவனைத் தரிசிக்க இந்திரனே ஆயிரம் கண் கொண்டு காத்துக் கிடக்கிறான்!’’ என்று ‘மணிகர்ணிகா அஷ்டகத்தில்’ ஆதிசங்கர பகவத் பாதர் கூறுகிறார். காசி மாநகரில், கங்கைக் கரையில் உள்ள 64 ஸ்நானக் கட்டங்களில், முக்கியமான ஐந்து ஸ்நான கட்டங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
அவை, அஸிகட்டம், தசாசுவமேத கட்டம், வருணா கட்டம், பஞ்சங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகியவை.
விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அன்னபூரணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அன்னையே அரசியாவாள். தேவி இடக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கையில் தங்கக் கரண்டியுமாகத் திகழ்கிறாள். எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் விஸ்வநாதர்க்கு, அன்னமிடுகிறாள் அன்னபூரணித்தாய். அன்னபூரணியின் சந்நதியைப் பலகணி வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும். தீபாவளியை ஒட்டி மட்டுமே அன்னபூரணியை வௌியே உற்சவத்துக்கு அழைத்து வருகிறார்கள். லட்டுத் தேரில் அமர்ந்து அன்னபூரணி காட்சி தந்தருள்வாள். தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியுடன், ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனிருந்து ஆசீர்வதிக்கிறார்கள்.
மிட்டாய்த் திருவிழா
தீபாவளி சமயத்தில் காசிநகர் முழுவதும் வண்ண அலங்காரங்களும் தோரணங்களும் கண்ணைப் பறிக்கும். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்கள் காசியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் கோலாகலமாக விளங்கும். பிரசித்தி பெற்ற ‘மிட்டாய்த் திருவிழாவும்’, அன்னகூட, அன்னாபிஷேக ஆராதனைகளும் பிரமிக்க வைப்பதாகும். தங்க அன்னபூரணித் தேரோட்டம் திமிலோகப்படும். காசி வரும் லட்சோப லட்சம் பக்தர்களுக்கு ஏராளமான இடங்களில் அன்னதானம் நடைபெறும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
வருடந்தோறும் தீபாவளி அன்றும், மகாசிவராத்திரி அன்றும் தங்க விசாலாட்சி அம்மனை, நகரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்து பொது மக்கள் புண்ணிய தரிசனம் பெற ஏற்பாடுகள் செய்கிறார்கள். விழாக் காலங்களில் தமிழக மேள தாள நாதசுரம் இசைக்கருவிகளைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
*****
தேவ் தீபாவளி
தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் குழுமுகிறார்கள்.
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்!
*****
லண்டனில் மேயர் சார்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ட்ரபால்கர் ஸ்கொயரில் தீபாவளி கொண்டாடப்பட்டது லண்டன் மேயர் சாதிக் கான் மேடையிலுள்ள பிள்ளையார் சிலைக்கு மாலை அணிவித்து தீபத்தை ஏற்றிவைத்து விழாவைத் துவக்கி வைத்தார் .
மாலைவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்; நாட்டியம் இசை, பல வகையான ஸ்டால்கள், உணவு விற்கும் ஸ்டால்கள், இடம்பெற்றன.
இதே போல பார்லிமென்டிலும், சவுத் இண்டியன் சொசைட்டி சார்பிலும் நார்த்விக பார்க் ஆஸ்பத்திரி சார்பிலும் தீபாவளி விழாவைக் கொண்டாடினார்கள்.
xxxxx
ராணுவ வீரர்களுடன் தீபாவளி..கொண்டாடிய பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, .குஜராத் மாநிலம் கச்சில் ராணுவ உடை அணிந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடியுள்ளார்
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும்ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளார்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்:
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி தீபாவளியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
2022ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் கார்கிலிலும், கடந்தாண்டு இமாச்சலத்தின் லெப்சாவிலும் தீபாவளி கொண்டாடினார்.
********
‘ தீபாவளிக்கு நியூயார்க் பள்ளிகள் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி தினத்தில் பள்ளிகள் மூடப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தீபாவளியை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அதனால், தீபாவளியன்று நகரில் பொது விடுமுறையை அறிவிப்பது என்பது எளிதல்ல. பல ஆண்டுகளாக சமூக தலைவர்கள் பலர், இதற்கான இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். இறுதியில், மேயர் எரிக் ஆடம்ஸ் நிர்வாகத்தின் கீழ், பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளி தினத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதனால் மாணவர்களுக்கு, அன்றைய தினம் கோவிலுக்கு செல்வதா? அல்லது பள்ளிக்கு செல்வதா? என்ற நெருக்கடி இந்த ஆண்டில் இருக்காது
*****
சிவகாசியில் தயாரான பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது., இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரமகோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்தனர்.
*****
விமானக் கட்டணங்கள் மும்மடங்கு அதிகரிப்பு
சென்னையிலிருந்து தமிழ்நாடு கர்நாடகம் ஆந்திரம் செல்லும் எல்லா விமானக் கட்டணங்களும் தீபாவளிப் பண்டிகை காரணமாக மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. எப்போதும் கடைசி நேரத்தில் விமான கட்டணம் உயர்வது வழக்கமாக நாட்டைபெறுவதுதான்.
தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள்
பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
******
சென்னையில் சிருங்கேரி சங்கராசார்யார்
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிருங்கேரி இளைய சங்கராசார்யார் சென்னையில் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
விஜய யாத்திரைக்காக, கடந்த OCTOBER 28 ம் தேதி சென்னை வந்த சிருங்கேரி சன்னிதானம், நான்காவது நாளாக மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
காலை 8:00 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சன்னிதானத்திடம் ஆசி பெற்றனர். பின், மாலை 4.30 மணிக்கு சுவாமிநாதன் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர்.
தொடர்ந்து, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. மாலை 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்தார்.
*****
பெங்களூரில் மன்னர் சார்ல்ஸ்
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் பெங்களூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் மூன்று நாள் தங்கிவிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி லண்டனுக்குச் சென்றார்.
மன்னருடன் அரசியார் கமிலாவும் வந்திருந்ததார் .
தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு வந்திருந்த அரச தம்பதி, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் தங்கினர்.
அங்கு யோகா, தியானம் உட்படப் பல்வேறு உடல்நல சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சைகள் அவை.
‘சௌக்யா’ எனப்படும் அந்த நிலையம், WHITEFIELD வைட்ஃபீல்டு பகுதிக்கு அருகே 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது..
சார்ல்ஸ் இந்த நிலையத்திற்கு வருகைதந்தது இது முதன்முறை அல்ல. . ஏற்கனவே 2019ஆம் ஆண்டு தமது 71வது பிறந்தநாளை அவர் இங்குக் கொண்டாடினார்..
நிலையத்தை நடத்தும் டாக்டர் ஐசக் மத்தாய், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட சிலரில் அடங்குவார்.
*****
கடைசியாகத் திரைப்படச் செய்தி
ஜெய் அனுமான்’ படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார். சென்னை, இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான ‘அனுமான்’ படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இந்த பட வெற்றியைத்தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக ‘ஜெய் அனுமான்’ படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார்.
இந்த படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
****
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் பத்தாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்
****
Tags-
ஞானமயம், வழங்கும் உலக இந்து செய்திமடல், 1-11-2024