தண்டனை செய்யும் உத்தண்டன்,  மூதண்டனே கோதண்டன்! (Post.13,838)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.838

Date uploaded in London – –1 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தனிப்பாடல் தமிழின்பம் 

தண்டனை செய்யும் உத்தண்டன்மூதண்டனே கோதண்டன்!

ச. நாகராஜன்

சொல் விளையாட்டிலும் அதில் பொருளை ஆழமாய்த் தோய்த்து வைப்பதிலும் சிறந்தவர் சொக்கநாதப் புலவர்.

அவரது ஒரு சொல் விளையாட்டுப் பாடல் இது:

பண்டனைப் பட்டனை யோதுபெம் மானைப் பனிவரைக்கோ

தண்டனைத் தண்டனை செய்யுமுத் தண்டனைத் தண்டனைமூ

தண்டனை யண்டர் தொழுந்திரு மாற்பே றமர்ந்தமணி

கண்டனைக் கண்டனை யாயினெஞ் சேமுத்தி கண்டனையே

இந்தப் பாடலில் தண்டனை என்ற வார்த்தை ஐந்து முறையும்

கண்டனை என்ற வார்த்தை மூன்று முறையும் வருவதைக் காணலாம்.

பாடலின் பொருள்;

நெஞ்சே – மனமே

பண்டனை – பழையோனை

பந்தனை ஓது பெம்மானை – பண்ணைப் பாடுகின்ற பெம்மானை

பனிவரை கோதண்டனை – மேருமலையாகிய வில்லை உடையவனை

தண்டனை செய்யும் உத்தண்டனை – துஷ்டர்களை சிட்சை செய்யும் உக்கிர மூர்த்தியை

தண்டனை – கதையை உடையவனை

மூதண்டனை – பழமையாகிய அண்டங்களை உடையவனை

அண்டர் தொழும் – தேவர்கள் தொழுகின்ற

திருமாற்பேறு அமர்ந்த – திருமாற்பேறு என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும்

மணிகண்டனை – நீலமணி போலும் கழுத்தை உடையவனை

கண்டனையாயின் – கண்டாய் ஆனால் (தரிசனம் செய்தாய் என்றால்)

முக்தி கண்டனை – மோக்ஷத்தைக் கண்டவன் ஆவாய்

தண்டனை மற்றும் கண்டனை ஆகிய இரு வார்த்தைகள் எப்படி இணைக்கப்பட்டும் பிரிக்கப்பட்டும் கவிதையை அழகுறச் செய்கிறது என்பதைப் பார்த்து மகிழலாம்.

சொக்கநாதப் புலவர் இயற்றிய சொல் விளையாட்டுடன் கூடிய இன்னொரு பாடலைப் பார்ப்போம்

துங்கா தராதல மெல்லா மொருமிக்கத் துய்த்தநர

சிங்கா தராதரந் தானறிந்தே நல்கச் சேலம் வந்த

கெங்காத ராநின் புகழ்கேட் டசைப்பன் கிரீடமென்றே

வெங்காத ராவுக்குச் செய்தா னிலைமலர் வேதத்தனே

பாடலின் பொருள்:

துங்கா – பரிசுத்தனே

தராதலம் எல்லாம் – பூமி முழுவதும்

ஒருமிக்கத் துய்த்த – ஒருமிக்க விழுங்கிய

நரசிங்கா – நரசிங்கனே

தராதரம் தான் அறிந்து – வருகின்றவர்களின் தராதரங்களை உணர்ந்து

நல்க – அவரவர்க்கு உரியதைக் கொடுக்க

சேலம் வந்த – சேலத்தில் அவதரித்த

கெங்காதரா – கெங்காதரனே

நின்புகழ் கேட்டு – உனது புகழைக் கேட்டு

கிரீடம் அசைப்பன் என்றே – மகுடத்தை அசைப்பான் என்று நினைத்தே

மலர்வேதத்தன் – தாமரை மலரை உடைய பிரமன்

அராவுக்கு – ஆதிசேடனுக்கு

வெம் காது செய்தான் இல்லை – கொடிய காதைப் படைக்கவில்லை.

பாம்புக்குக் காது இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

ஆதிசேடனுக்கு ஏன் காதுகளைப் படைக்கவில்லை என்று வியக்கிறார் கவிஞர்.

கெங்காதரனின் புகழைக் காதால் கேட்டால் ஆதிசேடன் தன் ஆயிரம் தலைகளையும் அசைப்பான் இல்லையா, அதனால் தான் அவனுக்குக் காதுகள் படைக்கப்படவில்லையோ என்று வியக்கிறார் கவிஞர்!

இப்படிப்பட்ட அருமையான பல தனிப்பாடல்களை வழங்கியவர் சொக்கநாதப் புலவர்!

**

Leave a comment

Leave a comment