Post No. 14,025
Date uploaded in Sydney, Australia – 28 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பாவையிலுள்ள ஆன்மீக விஷயங்களையே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் ஆண்டாள் இயற்கைக் காட்சிகளையும் நேரில் காண்பது போல வருணிப்பதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. இங்கே சில காட்சிகளைக் காண்போம் .
அவர் சிங்கத்தை வருணிக்கிறார். வங்காள விரிகுடாவில் கப்பல்கள் சென்றதை வருணிக்கிறார். ஆனைச்சாத்தன் என்ற பறவையை வருணிக்கிறார். பறவைகளின் ஒலிகளைப் பாடுகிறார். வானத்தில் உதித்த மார்கழி பெளர்ணமி சந்திரனைப் பாடுகிறார். விடி வெள்ளி எழுந்து வியாழன் கிரகம் அஸ்தமித்தத்தைச் சொல்கிறார். காரிருள் மேகங்கள் சூழ மழை கொட்டுவதைப் பாடுகிறார். இவ்வாறு எல்லா பாடல்களிலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வினை வருணிக்கிறார். நவரத்தின மணிகள் பற்றியும் திருப்பாவையில் காண்கிறோம். முத்தும் பவளமும் அடங்கிய நவரத்தினங்களும் இயற்கையில் கிடைப்பதை இக்கால மக்கள் உணர்வதில்லை
புள்ளும் சிலம்பின் காண்- பாடல் 6
கீசு கீச்சென்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின – பாடல் 7
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் பாடல் 18
இவ்வாறு அதிகாலைப் பொழுதின் அழகினை வருணிக்கிறார். முதலில் ஆனைச்சாத்தன் பறவை பற்றிக் காண்போம்.
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
—-திருப்பாவை 7
மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூல் யானையங் குருகு என்று குறிப்பிடுகிறது –வரி 674
குறுந்தொகைப் பாடலிலும் ( 34 )இந்தச் சொல்லைக் காணலாம்.
ஆனைச்சாத்தன் பறவைக்கு வண்டாழ்ங்குருகு, வலியன், பரத்வாஜ பக்ஷி என்ற பெயர்களும் உண்டு
அகநானூற்றில் குஞ்சரக் குரல குருகு என்ற சொல்லால் இதை அழைக்கிறார் புலவர் பாடல் 145
இப்பொழுது இந்தப் பறவையின் பெயரைச் சொன்னால் எத்தனை பேருக்குத் தெரியும் ? அக்காலத்து தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் அன்றாடப் பேச்சிலும் பழமொழிகளிலும் பறவைகளையும் விலங்குகளையும் காண்கிறோம் யானையங்குருகு திருவோண நட்சத்திரத்துக்குரிய பறவை என்று ஜோதிட நூலார் கூறுவார்; யானை போன்ற குரலுடைய பறவை என்பதால் குஞ்சரக் குரல் உடைய பறவை என்று அகநானூற்றுப் புலவர் பாடினார்
குஞ்சரம்= யானை
*****
சிங்கம்
சிங்கம் என்னும் விலங்கு இப்பொழுது குஜராத்தில் கிர் வனக்காடுகளில் மட்டுமே உள்ளது; ஒரு காலத்தில் இது வட இந்தியா முழுதும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிம்மேந்திரன் சிம்மாசனம், ம்ருகேந்திரன் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இதை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் புலிகள் மட்டுமே அதிகம். ஆயினும் அக்கால ராஜாக்களின் தோட்டங்களிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் இதை மக்கள் பார்த்திருப்பார்கள் . அரி என்ற தமிழ்ச் சொல் இதைக் காட்டும். புலி சிங்கம் ஆகிய விலங்குகள் சோம்பல் முறிப்பதை மூரி நிமிர்ந்து என்று ஆண்டாளும் பாடுகிறார். மனிதர்களும் தூங்கி எழுந்தவுடன் இரு கைகளையும் உயர்த்தி நிமிர்ந்து சோம்பல் முறிக்கிறோம். விலங்குகளை உற்று நோக்கிய ஆண்டாள் இதை ஒரு பாசுரத்தில் பாடுகிறார் :
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
—திருப்பாவை 23
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, மூரி நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
மூரி நிமிர்ந்து :– இது சங்க காலச் சொல்வழக்கு; இதை புறநானூறு -52, பரிபாடல்-20 கம்பராமாயணம் பாலகாண்டம் உண்டாட்டுப்படலம் ஆகிய நூல்களிலும் காணலாம்
இது குகையிலிருந்து சிங்கம் புறப்படும் தத்ரூபக் காட்சி. விலங்குக் கூட காட்சி அல்ல. இதை எப்படி ஆண்டாள் அறிந்தாள்? அந்தக் காலத்தில் பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை பெரு வழக்கில் இருந்திருக்க கூடும்.
*****
இன்னும் ஒரு இயற்கை வருணனை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.—திருப்பாவை 14
பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே.
செங்கழு நீர் மலர ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன என்பது ஆண்டாள் காணும் காட்சி
*****
அந்தக் காலத்தில் பெண்கள் சங்கு வளையல்களை அணிவார்கள் இபோது பிளாஸ்டிக், ரப்பர் ஆகியவற் றால் ஆன அல்லது கண்ணடியாலான வளையல்களையே பெரும்பாலும் அணிகின்றனர்
ஆண்டாளோ சங்கு முழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார்; இன்றும் வங்காளிப் பெண்கள் சங்கு வளையல்களை அணிகின்றனர்; திருமணங்களில் சங்கு ஓலி முழக்கம் செய்கின்றனர்
கம்பராமாயண பாலகாண்ட நாட்டுப்படலத்தில் இடைப்பெண்கள் தயிர் கடையும் காட்சி வருகிறது. அங்கு இடைப்பெண்கள் சங்கு வளையல் அணிந்து தயிர் கடையும் செய்தியை நமக்கு கமபர் அளிக்கிறார். ஆண்டாளும் தயிர் கடையும் காட்சியை ஏழாவது பாசுரத்தில் பாடுகிறார். சங்கு வளையல் ஒலியை நாம் ஊகிக்கலாம்.
****
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)
கடல் நீரிலிருந்து மழை எப்படி உண்டாகிறது என்பதை இந்தப் பா சுரத்தில் படிக்கிறோம்
*****
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி -30
கடைசி பாசுரத்தில் கப்பல்கள் ஓடும் கடலைக் காட்டுகிறார் ஆண்டாள் .
அந்தக் காலத்தில் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும் சென்று வணிகம் செய்ததையும் பண்டபாட்டைப் பரப்பியதையும் பறைசாற்றும் கல்வெட்டுகளும் கோவில்களும் இன்று வியட்நாம், லாவோஸ் முதல் இந்தோனேஷியா வரை காண்கிறோம் . அதையும் கூடக் கடைசி பாசுரத்தில் தொட்டுக்காட்டிவிட்டாள் ஆண்டாள்.
காடு முதல் கடல் வரை பாடிய ஆண்டாள் ஒரு பெரும் இயற்கை ரசிகை என்பதில் ஐயமில்லை!!
****
என்னுடைய பழைய கட்டுரைகள்:-
திருப்பாவை அதிசயம் – விஷ்ணுவுக்கு 56 …
Tamil and Vedas
https://tamilandvedas.com › திர…
18 Jan 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. திரு ப்பாவையில் உள்ள 30 …
திருப்பாவை அதிசயம் 2- ‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா? (Post.9175) January 22, 2021
திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ? (Post No.9186) January 25, 2021
மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486) December 25,2021
ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
Tamil and Vedas
https://tamilandvedas.com › ஆ…
20 Jan 2012 — ஆண்டாள் அம்மாள், அனந்த கோடி வணக்கங்கள். திருமாலையே கணவனாக வரித்த தாயே, …
சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள் …
Tamil and Vedas
https://tamilandvedas.com › சி…
·
15 Nov 2024 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.
–subham—
Tags- ஆண்டாள் பாடல், இயற்கைக் காட்சிகள், திருப்பாவை , ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 7 ஆனைச்சாத்தன், மூரி நிமிர்ந்து, சிங்கம், வங்கக் கடல், மழை