ஜெய்பூர் காலே ஹனுமான்ஜி மந்திர் (Post No.14,304)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,304

Date uploaded in London 24 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 23-3-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானர யூதமுக்யம் ஶ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி!

ஆஞ்சநேயர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஜெய்பூர் நகரில் உள்ள காலே ஹனுமான்ஜி மந்திராகும்

இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த அதிசயமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அற்புதமானதொரு ஆன்மீக அனுபவத்தை அடைகின்றனர்.

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.

சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.

தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான்  குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.

ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.

சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.

அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.

காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.

எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோவிலில் உள்ள தூண்கள் புஷ்ய நட்சத்திரத்திற்கு இணங்கக் கட்டப்பட்டுள்ளன.

கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கச் மூன்று திசைகளைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.

முகலாயர் மற்றும் ராஜ்புத்ர கட்டிடக் கலையின் படி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கோவில் அமைப்பில் ஒரு சிறிய கர்ப க்ருஹத்தில் ஒரே கல்லால் அமைந்துள்ள ஹனுமானின் விக்ரஹம் உள்ளது. இங்கு விநாயகர், ஶ்ரீ ராமர், சிவன், துர்க்கை ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கல்கத்தாவிலிருந்து வந்த கட்டிடக் கலை நிபுணர்கள் இந்தக் கோவிலை பெரிதாக்கினர்.

கோவிலைச் சுற்றி பெரிய தோட்டங்களும், விருந்தினர் விடுதிகளும் உள்ளன.

ஒரே சமயத்தில் 5000 பக்தர்கள் உணவருந்தும் விதத்தில் பிரம்மாண்டமான உணவருந்தும் கூடமும், பெரிய சமையல் அறையும் இங்கு உள்ளன.

கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.

சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.

சாமானியன் முதல் உயர் பதவி வகிப்பவர் வரை ஹனுமனை வழிபட்டு அதனால் தாங்கள் பெற்ற பயன்களை கூறுவதால் ஹனுமனின் புகழ் பெருகிக் கொண்டே இருக்கிறது

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தனது பையில் அனுமனது சிலையைக் கொண்டு செல்வதை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காலே ஹனுமான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment