Post No. 14,309
Date uploaded in London – 25 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!— அப்பர்.
****
கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர் சிலையின் புன்சிரிப்பினைக் காணக் கண் கோடி வேண்டும்!
கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். 250 ஆண்டு களுக்கு பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களிலும் இக்கோவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரதான கோவில் கோபுரம் 55 மீ உயரம் கொண்டதாகவும் கம்பீரமானதாகவும் உள்ள கட்டிடம் ஆகும்.
****
சிவன் என்றால் சாந்தம்; ருத்ரன் என்றால் கோபம். நம் எல்லோருக்கும் இந்த இரண்டு குணங்களும் உண்டு . ஆனால் ஒரு வித்தியாசம் ; சிவன் கோபத்தோடு இருந்தபோதிலும் திரி புரங்களில் உள்ள அசுரர்களை அழிப்பதற்கு ஒரு சிரிப்புதான் சிரித்தார். அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அழிந்தன. .சிவன் சிரிப்பில் அசுரர் கோட்டைகள் அழிந்தன என்ற வரலாறு திருவதிகை தேவார விளக்கக் கதைகளில் வருகிறது
மேலும் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருமழபாடி பதிகத்திலும் வருகிறது
பாடல் எண் : 7
விண்ணில்ஆர் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்இலார் முப்புரம் எரிஉண நகைசெய்தார்,
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
பொழிப்புரை :சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .
மேலும் ஒரு பாடலில் அப்பர் சுவாமிகள் கொவ்வைப் பழம்போல சிவந்த சிவனின் புன்சிரிப்பைப் பாடுகிறார் . இதை அப்படியே சிற்பத்தில் வடித்துள்ளார் ஒரு சிற்பி. அந்த ஒரு சிலையக் காண்பதற்காகவாவது கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் செல்லவேண்டும்.
இந்தச் சிலை கர்ப்பக்கிரகத்தில் இல்லை. வெளிப்புறச் சுவர்களில் உள்ள பல அழகான சிலைகளில் சிரிக்கும் நடராஜரும் ஒன்று . சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குனர், உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்த ஆயிரம் மைல் தூர இலவச வரலாற்றுப் பயண பஸ்ஸில் நான் ஒருவன் மட்டும் பத்திரிகையாளன்–(மதுரை தினமணி உதவி ஆசிரியர்) அப்போது டாக்டர் நாகசாமி அப்பர் பாடலை மேற்கோள்காட்டி எல்லா சிற்பங்களையும் எங்களுக்கு விளக்கினார். இன்றும் அது நினைவில் நிற்கிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக்கும் எண்ணத்துடன் மாபெரும் நகரினை உருவாக்கினான் ராஜேந்திர சோழன். அவன் தந்தை ராஜராஜன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலைப்போல கட்ட எண்ணினான். ஆனால் முழுவெற்றி கிடைக்கவில்லை. இது இமிடேஷன் கோல்டுதான்; அசல் அபராஜிதத் தங்கம் இல்லை. மேலும் இப்போது ஐம்பது சதவிகிதம் பாழடைந்த நிலையில் உள்ளது தலைநகரச் சிறப்பு இல்லை. கர்நாடக ஹம்பி நகரம் போல சிறபங்களுக்கு மட்டுமே பிரசித்தம்.
கங்கை வரை படைகளை அனுப்பி புனித கங்கை நீரைக் கொண்டுவந்து விட்டுப் புனிதமாக்கியதால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர் உருவானது போகும் வழியில் எதிர்த்தோரை அடக்கி வென்றான். அவன் கொண்டுவந்த கங்கை நீரை ஏரியில் விட்டு சோழ கங்கம் என்ற நீர்நிலையினையும் உருவாக்கினான் .
நான் 2025 மார்ச் 17-ஆம் தேதி சென்றபோது கர்ப்பக்கிரகத்தில் விளக்குகள் எரிந்தன. மாபெரும் சிவ லிங்கத்தினைத் தரிசித்தேன். அப்போதுதான் குருக்கள் வேறு ஒரு சந்நிதிக்குச் சென்று கொண்டிருந்தார். இது எனது மூன்றாவது விஜயம் என்பதால் வேகமாகப் புகைப்படங்களை மட்டும் எடுக்க வலம் வந்தேன். கல்லும் முள்ளும் கால்களைக் குத்தின. தொல்பொருட்த் துறைக் காவலர்கள் இல்லாவிடில் இது கேடிகளின் உறைவிடம் ஆகிவிடும்
கும்பகோணம்- சென்னை சாலையில் ஜயம் கொண்டம் ஊருக்கு அருகி உள்ளது சாலையில் செல்லும் எவரும் தவறவிட முடியாத மா பெரும் கோபுரம் எல்லோரையும் வரவேற்கும். பல இடங்களில் கல்வெட்டுகளையும் காணமுடிகிறது.


வெளிப்புற சுவரில் உள்ள ஒவ்வொரு சிலையினையும் ரசித்துப் பார்க்கலாம்; அவ்வளவு அழகு.
—subham—
Tags- காணக் கண் கோடி வேண்டும் , கங்கைகொண்ட சோழபுரம் , நடராஜர் புன்சிரிப்பு , அப்பர், சம்பந்தர் , தேவாரம் , டாக்டர் இரா நாகசாமி, ராஜேந்திர சோழன்