கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்! (Post No.14,315)

Written by London Swaminathan

Post No. 14,315

Date uploaded in London –  27 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசை 2025 மார்ச் 16- ஆம் தேதி நிறைவேறியது; கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தில் அவருடைய திவ்ய தரிசனம் கிடைத்தது  மாயூரத்திலிருந்து 22 கிலோமீட்டரில் கூத்தனூர் இருக்கிறது

வைத்தீஸ்வரன் கோவிலில் குல தெய்வத்தை தரிசித்துவிட்டு அக்ஷர்தாம் விடுதியில் இலவச காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு காரில் சென்றோம் . ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசாரியைகள் ஆகியோரின் கூட்டம் நெருக்கித் தள்ளியது. கடவுளளைத் தரிசிக்கக் கட்டணம் கிடையாது; விசேஷ   கட்டண டிக்கெட்டும் இல்லை . வரிசையில் நின்றோம் ; எங்கள் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை; காலை நேர பூஜைக்காகத் திரை போடாப்பட்டது முக்கால் மணிநேரம் கியூவில் நின்று குமர குருபரரின் சகல கலா வல்லி மாலையில் நினைவில் நின்ற பாடல்களை ஜபித்துக்கொண்டு பொறுமையாக நின்றோம் திரை திறந்தவுடன் வெண்ணிற ஆடையுடன் தாமரையில் வீற்றிருந்த சரஸ்வதி தேவியை வணங்கினோம்..

இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது; இந்த ஊரினைச் சேர்ந்த கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் ஆண்டுதோறும் ராமாயண உபன்யாசத்துக்காக மதுரைக்கு வருவார்.  அவரை,  புகழ்பெற்ற , டி .வி .எஸ்  T V S  நிறுவனம் அழைக்கும் சாத்திரிகள் மஹா வேத பண்டிதர்; எங்கள் ஆத்தில் (வீட்டில்) தங்குவார். சுவாமி அறையில் பூஜை செய்வார் ; அறை தெப்பக்குளம் ஆகிவிடும்;மாமி கோபித்துக் கொள்ளாதீர்கள் நான் ஜபம் செய்தால் இப்படி ஆகிவிடும் என்பார். ரிக்வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து காஞ்சி மகா சுவாமிகளிடம் வீடு, பசு மாடு, சால்வை, தங்க க் காசு பரிசு பெற்றவர் ; ராமாயண உபன்யாசம் முழுதும் ரிக் வேத மேற்கோள்கள் வரும் அவருக்கு நான்தான் காரியதரிசி. மாலையில் டி .வி .எஸ்  T V S  காரர்கள் அனுப்பிய கார் வந்தவுடன் நானும் அவரும் டி .வி .எஸ்  T V S  நகருக்குப் பயணம் செய்து பள்ளிக்கூடம் செல்வோம்; பள்ளியின்  ஹாலில் நடக்கும் உ பன்யாசத்தைக் கேட்பேன். நோட்ஸ் எடுத்து மறுநாளைக்கு மதுரை தினமணிப் பத்திரிகையில் அது அப்படியே வரும் ; இதனால் என் மீது தனிப்பட்ட அன்பு. நேரம் கிடிக்கையில் ரிக்வேத பெருமைகளை கேட்டறிவோம். வார விடுமுறைகளில் எனது தந்தை தாயாரும் வருவார்கள்; அவர் “குழந்தை ! நீ கூத்தனூருக்கு வந்து சரஸ்வதியைத் தரிசிக்க வேண்டும்” என்று சொல்லுவார் ; அப்போது முதல் இருந்த ஆசை இப்போது நிறைவேறியது!

வீட்டில் தங்கி இருக்கையிலோ அல்லது சாப்பாடு பரிமாறுகையிலோ என் தாய், தந்தையர் வேறு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்று கேட்டால் நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பதில்கொடுப்பார் ; கூத்தனூர் கோவிலில் முக்கால் மணி நேரம் கியூவில் நிற்கையில் நான் மேலே சொன்ன விஷயங்கள் நிழல் ஆடின.

இந்து மதத்தின் புதிய வடிவங்கள் !

இப்போதெல்லாம் எல்லோருக்கும் சுருக்கு வழிப் பெருக்கல் கணக்கில் ஆசை வந்துவிட்டது அதாவது, படிக்காமலேயே பாஸ் செய்ய வேண்டும் ; உழைக்காமலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுருக்கு வழியில் மக்கள் இறங்கிவிட்டார்கள்; நாங்கள் சென்ற நாளில்   பள்ளிக்கூட ஆசிரியைகளும் தங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தனர் ; முன்னரெல்லாம்,  மாணவர்கள் ஹால் டிக்கெட் எண்களைக் கோவிலில் சுவரில் எழுதி வந்தார்கள் ; அதாவது மூட நம்பிக்கை! அப்படி எழுதினால் பாஸ் ஆகலாம் அல்லது நல்ல மதிப்பெண் பெறலாம் என்ற நம்பிக்கை அத்தகைய மூடர்களின் கிறுக்கல்களை நான் படம் பிடித்தேன் இப்போது சுவரை நெருங்க முடியாதபடி தள்ளி, கம்பிகளைக் கட்டிவிட்டனர், தயவு செய்து உங்கள் எண்களை எழுதாதீர்கள் என்று எழுதியும் போட்டுள்ளனர்.

மஹா வேடிக்கை

இதைவிட மகா வேடிக்கை ! கோவிலுக்கு முன்னால், நூற்றுக் கணக்கான பேனா, நோட்டுப் புஸ்தகக் கடைகள்; அத்தனையிலும் சரஸ்வதி தேவியின் படங்கள்; அந்தப் பேனாவை வைத்து எழுதினால் படிப்பு வரும், பாஸ் மார்க் வரும் என்ற நம்பிக்கை! குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்வதற்கு பெற்றோர்கள் சிறு குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். கியூ வரிசையில் நின்றபோது பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்; ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பரீட்சை என்று பய பக்தியுடன் பதில் தந்தனர்!

ஒட்டக்கூத்தன் வாழ்க

இந்தத் தலத்துக்குப் பெயரை உண்டாக்கியாவர் புகழ்பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர் ஆவார். அவருக்கு சரஸ்வதி அருள்புரிந்த இடம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் உண்டாக்கியது . அவரால் பெருமை பெற்றது இந்த ஊர்; சரஸ்வதியால் பெருமை பெற்றார் அவர் .

கற்க வேண்டிய பாடங்கள்

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போகாதே.

கோடை விடுமுறைக் காலத்தில், சுற்றுலா ஊர்களுக்குச் செல்லாதே.

ஐயப்ப பக்தர் வரும் சீஸனின் எந்த தலத்துக்கும் போகாதே ; அதில் தள்ளுமுள்ளு ரவுடிகள் அதிகம்.

ஒவ்வொரு ஊரிலும் விஷேச நாட்கள் உண்டு; ஊரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்து அந்த நாட்களில் செல்லாதே ; பரிக்கல் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர நாள்  விஷேச நாள் என்பதை அறியாமல் சென்று வரிசையில் நின்றோம்.

****

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

4. Goddess of all Learning! Ocean of Mercy! You rest on the grateful tongues (lips) of poets and preserve the sea of Sanskrit scholarship and the rich heritage of Tamil songs. May you grant that I become proficient in the deep and varied branches of Learning! May you grant me the gift of singing felicitous songs!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே —குமரகுருபரர் அருளிய சகல கலா வல்லி மாலை

10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.

English Translation of Sakalakalavallai malai from The Tanjore Art Gallery Guide Book, year 1954

–SUBHAM—

TAGS- கூத்தனூர் ,சரஸ்வதி கோவில் , ஒட்டக்கூத்தன், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள், ரிக்வேதம், உபன்யாசம் , டி .வி .எஸ்., சகல கலா வல்லி மாலை

Leave a comment

Leave a comment