ஆலயம் அறிவோம்! சிந்த்பூரணி ஆலயம் (Post No.14,582)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 582

Date uploaded in London –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-6-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம் 

வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன் 

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

    நிறைந்த சுடர்மணிப் பூண்

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் – இவள்

    பார்வைக்கு நேர் பெருந்தீ

வஞ்சனை இன்றிபகை இன்றி,  சூதின்றி,

    வையக மாந்தர் எல்லாம்

தஞ்சம் என்றே உரைப்பீர் “சக்திஓம் சக்தி

    ஓம் சக்திஓம் சக்திஓம்!

                 – மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ள, 108 சக்தி பீடங்களில் ஒன்றான, சிந்த்பூரணி ஆலயம் ஆகும். மாதா ஜ்வாலாமுகியின் அம்சமே சிந்த்பூரணி தேவியாகும்.

இமயத்தின் மேற்குப் பகுதி வடக்கிலும், ஷிவாலிக் மலைத் தொடர் கிழக்கிலும், சூழ்ந்திருக்க இது பஞ்சாப் மாநிலத்தை எல்லையாகக் கொண்டு ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ளது.

உனா  மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் டெல்லியிலிருந்து 420 கிலோமீட்டர் தூரத்திலும், ஜலந்தரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்திலும் சண்டிகரிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இங்கு எழுந்தருளியுள்ள துர்கா தேவியின் அம்சமான தேவியை சின்னமஸ்திகா தேவி என்று அனைவரும் அழக்கின்றனர். இந்த தேவிக்கு தலை கிடையாது. இப்படி தேவி எழுந்தருளியுள்ளதைப் பற்றிய மார்க்கண்டேய புராணம் கூறும் வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் தேவர்களை அசுரர்கள் மிகவும்  துன்புறுத்தினர். தேவர்கள் துர்க்கையை வேண்டவே, சண்டி தேவியாக அவதாரம் எடுத்து தேவி அசுரர்களை அழித்தாள்.. ஆக்ரோஷமான அந்த தேவி அசுரரை வதம் செய்த பின் தன்னுடன் இருந்த தனது காவல் தேவதைகளான யோகினிகள் ஜயா மற்றும் விஜயா ஆகியோரின் பசி தீராமல் இருக்கக் கண்டாள். அவர்களின் பசியைத் தீர்க்கத் தனது தலையை வெட்டி அதிலிருந்து வெளிவந்த ரத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தாள். தன்னை அண்டி இருப்போருக்குத் தன்னை அழித்தும் கூட அருள் புரியும் தேவி சின்னமஸ்திகா தேவி என்பது இதன் தாத்பரியம்.

இந்தத் தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. 

தட்சன் செய்த யாகத்தில் தேவி பார்வதியின் உடல் வெட்டப்படவே, தேவியின் உடல் பாகங்கள் பாரதமெங்கும் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் என்று அறியப்படுகின்றன. அந்த பாகங்களில் தேவியின் பாதம் விழுந்த இடம் இது தான். இங்கு தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது. 

தேவியின் சிலை ஒரு உருண்டையான கல்லாகவே இங்கு  உள்ளது. ஆலயத்தின் பின்னால் ஒரு ஆலமரமும் உள்ளது.

இந்த ஆலயம் எழுந்ததைப் பற்றியும் ஒரு வரலாறு உள்ளது.

இதை நிறுவியவர் பண்டிட் மாய் தாஸ் என்பவர். இவர் ஒரு சரஸ்வத் பிராமணர். அவரது வமிசாவளியினரே இருபத்தியாறு வம்சங்களாக இங்கு பூஜை செய்து வருகின்றனர்.

ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்த அவர் ஆலமரம் ஒன்றின் அடியில் இருந்து இளைப்பாறி சற்றே கண்ணயர்ந்தார். அப்போது துர்க்கா தேவி அவரது கனவில் தோன்றி அந்த இடத்தில் தான் ஒரு கல்லாக தங்கி உள்ளதாகவும் அதை உரியபடி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருமாறும் கூறி அருளினாள். அவரும் ஒரு ஆலயத்தை எழுப்ப அங்கே உரிய முறையில் பூஜைகள் நடைபெறலாயின.

 ‘சின்னமஸ்திகா தாம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலின் எல்லா திசைகளிலும் சிவபிரானுக்குக் கோவில்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், கிழகே காலேஸ்வர் மஹாதேவர் ஆலயமும், மேற்கே நாராயண மஹாதேவர் ஆலயமும், வடகே மச்சகந்த மஹாதேவர் ஆலயமும் தெற்கே சிவ்பாரி ஆலயமும் அமைந்துள்ளன,

 940 மீட்டர் உயரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. ஆலயத்தின் அருகே பண்டிட் மாய்தாஸின் சமாதியும் உள்ளது.

அனைத்து விதமான நலன்களைப் பெறவும் எதிரிகள் தொல்லை தீரவும் இந்த தேவியை வழிபட திரளாக பக்தர்கள். வருகை புரிகின்றனர். குளிர்காலத்தில் உஷ்ணநிலை பூஜ்யம் டிகிரிக்கு கீழாகச் செல்வதால் பக்தர்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இங்கு வருகின்றனர்.

 இங்கு நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் நவராத்திரி காலத்தில் இங்கு திரளாகக் கூடுகின்றனர். 

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சின்னமஸ்திகா தேவி என அழைக்கப்படும் சிந்த்பூரணி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment