Post No. 14,676
Date uploaded in London – –23 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜூன் 2025 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
ஆரோக்கிய ரகசியம்!
வியாதி வராத மனிதன் யார்?
ச. நாகராஜன்
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, அவர்களுக்கு வரும் வியாதிகள் அவர்களது தப்பான உணவுப் பழக்கங்களாலும் தவறான உணவுகளாலும் வருபவையே.
மூன்று விதமாக உணவு வகைகள் உள்ளன. சாத்விக், ராஜஸிக், தாமஸிக் என்பவையே அவை. இவை ஒவ்வொன்றும் அந்தந்த குணநலன்களை அதை உண்பவர்களுக்குத் தருகின்றன.
சீரான நல்ல உணவுத் திட்டங்களும் உணவும் நன்மையையே தரும்.
உணவு வகை, உணவின் அளவு இவை இரண்டுமே நமது உடல்நலத்தைச் சீராக வைக்கும் அல்லது வியாதியை அடைய வைக்கும்.
ஆயுர்வேதத்தில் பெரும் நிபுணராகத் திகழ்ந்தவர் வாக்பட்டர். சிந்து தேசத்தில் பிறந்த இவரது பாட்டனார் பெயரும் வாக்பட்டர் தான். இவரது தந்தையார் பெயர் சித்தகுப்தர். அஷ்டாங்க சங்ரஹ மற்றும் அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகிய புகழ்பெற்ற இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார். இதைத் தவிர இன்னும் இருபது நூல்களை இவர் எழுதியுள்ளார். இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
இவரைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
தன்வந்தரி ஒரு பறவையின் வேடத்தை எடுத்துக் கொண்டு வாக்பட்டரைச் சந்திக்கிறார்.
‘நல்ல வியாதி வராத மனிதன் எப்படி இருக்க வேண்டும். அதற்கான ரகசியம் என்ன’ என்று தன்வந்தரி வாக்பட்டரைக் கேட்கிறார்.
அதற்கு வாக்பட்டர் மூன்று ரகசியங்களை தன்வந்தரிக்குச் சொல்கிறார்.
அவை:
ஹித புக், மித புக், சுத புக்.
இதமான உணவையே உண்க.
அதையும் மிதமான அளவில் உண்க
அதையும் எப்போது பசிக்கிறதோ அப்போது மட்டுமே உண்க
இவை தான் அந்த மூன்று விதிகள்; ரகசியங்கள்.
இதை எவன் ஒருவன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கிறானோ அவனே வியாதி இல்லாத மனிதன்.
இதுவே வாக்பட்டர் கூறும் ரகசியம்.
இதைத் தவிர இன்னொரு முக்கிய அம்சத்தையும் ஆயுர்வேதமும் இந்து அறநூல்களும் வற்புறுத்துகின்றன.
அது தான் ஏகாதசி விரதம்.
மாதத்திற்கு இரு முறை ;ஏகாதசி திதி வருகிறது.
ஏகாதசி விரதம் புண்யம் காயஷோதன கரணம் என்று அறநூல்கள் கூறுகின்றன.
அதாவது ஏகாதசி அன்று விரதம் இருப்பது புண்யமயமானது மற்றும் உடலைச் சுத்தமாக்குகிறது என்பதே இதன் பொருள்.
வாத, பித்த, கப தோஷம் ஆகிய மூன்றினாலேயே ஒருவனின் உடல் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதை எவன் ஒருவன் நல்ல ஒரு ஆயுர்வேத நிபுணரைக் கலந்தாலோசித்து தன் உடலுக்குத் தக தேவையான உணவுத் திட்டத்தையும் உணவு வகைகளையும் நிர்ணயித்துக் கொள்கிறானோ அவனே வியாதியற்று வாழ்வான்.
இன்றைய வாழ்வில் நாம் காண்பது என்ன?
நொறுக்குத் தீனிகள், ஏராளமான இனிப்பு வகைகள், சரியான முறையில் வளர்க்கப்படாத தாவரங்களில் இருந்து பெறப்படும் கறிகாய்கள் ஆகியவையே நமக்குக் கிடைக்கின்றன.
இவையும் கூட பாக் செய்யப்பட்ட பாலிதின் பைகளில் அடைக்கப்பட்டுத் தரப்படுகின்றன. நெடுங்காலம் இவை கடைகளிலிருந்து வெளியே வாங்கப்படும் வரை இருக்க வேண்டும் என்பதால் பிரிஸர்வேடிவ் எனப்படும் ரசாயனங்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ரசாயனமும் ஒவ்வொரு விதத்தில் தீமையைத் தருகிறது.
எண்ணெயின் தரமோ, அது செய்யப்படும் விதமோ நமக்குத் தெரியாது.
ஆகவே வியாதிகள் வருவதில் ஆச்சரியமே இல்லை.
இல்லத்தில் அவ்வப்பொழுதே வாங்கப்பட்ட சமையல் பொருள்களினால் அவ்வப்பொழுது சுகாதார முறைப்படி தயாரிக்கப்படுபவையே உகந்த உணவாகும்.
இதை நன்கு அறிந்திருந்தாலும் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை என்பது தான் ஆச்சரியகரமான விஷயம்!
அப்புறம் மருத்துவமனைகளுக்கு ஏராளமாகப் பணம் கொடுக்கிறோம் என்று அலட்டிக் கொள்வதில் பிரயோஜனமே இல்லை.
ஆகவே மனதில் கொள்ள வேண்டிய மூன்று ரகசிய சூத்திரங்கள்:
ஹித புக், மித புக், சுத புக்.
இதமான உணவையே உண்க.
அதையும் மிதமான அளவில் உண்க
அதையும் எப்போது பசிக்கிறதோ அப்போது மட்டுமே உண்க
வளமுடன் வாழ்வோம்; ஆரோக்கியத்துடன் வியாதியின்றி வாழ்வோம்!
***