WRITTEN BY Chitra Nagarajan
Post No. 14, 706
Date uploaded in London –30 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

29-6-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது சித்ரா நாகராஜன்
ஸஹ்யாத்ரி சீர்ஷே விமலே வஸந்தம் கோதாவரீதீர பவித்ர தேசே |
யத் தர்சநாத் பாதகம் பாஸு நாசம் ப்ரயாதி தம் த்ரயம்பகமீசமீடே||
“கோதாவரி நதிக் கரையில், ஸஹ்ய பர்வதத்தின் சிகரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ த்ரயம்பகேஸ்வரரை பயங்கள் நீங்கி, நலன்கள் பெருக தினமும் தியானித்து ஆராதிக்கிறேன்.”
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மஹராஷ்டிர மாநிலத்தில் சஹ்ய மலைச்சாரலில் கோதாவரி நதி தீரத்தில் த்ரயம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஜோதிர்லிங்க சிவ ஸ்தலமாகும். இது நாசிக் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்றான இத்திருத்தலத்தில் தான் கோதாவரி நதி ஆரம்பமாகிறது.
இங்கு மூன்று புண்ய நதிகளான கோதாவரி, சரஸ்வதி, குசாவர்த்த நதிகள் சங்கமம் ஆகின்றன என்பது ஐதீகம்.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.
கௌதம முனிவர் இங்குள்ள பிரம்மகிரியில் தனது பத்தினி அகல்யாவுடன் வசித்து வந்தார். அவர் தனது தவத்தால் வருணனை வேண்ட ஒரு குழி தோன்றி அதிலிருந்து நிறைய தானியங்களும் உணவும் கிடைக்க ஆரம்பித்தது. அதிலிருந்து வந்த நீர் வளத்தால் அவரது ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ரிஷிகள் ஒரு பசுவை அவர் ஆசிரமத்திற்குள் அனுப்பினர். அதை தனது தர்ப்பையால் கௌதமர் விரட்டியதுமே அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் அவருக்கு பசுவை வதை செய்த தோஷம் ஏற்பட்டதாக அனைத்து ரிஷிகளும் கூறினர். உடனே கங்கையை அங்கு வரச் செய்து தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய கௌதமர் சிவபிரானை நோக்கித் தொழ ஆரம்பித்தார். கங்கை அங்கு கோதாவரியாக வந்து இறங்கினாள். இங்குள்ள மக்கள் கோதாவரியை கங்கா என்றே கூறுகின்றனர்.
சிவபிரானும் இங்கு த்ரயம்பகராக எழுந்தருளி அருள் பாலிக்க ஆரம்பித்தார்.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்மராசியில் சஞ்சரிக்கும் போது இங்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். இந்த கும்பமேளா உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரளுகின்றனர்.
சிவபிரான் இங்கு எழுந்தருளியுள்ளதைப் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு. சிவனின் மூலத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய பிரம்மாவும் விஷ்ணுவும் அவர் நெடிய தீப்பிழம்புத் தூணாகத் தோன்றவே அவர்களால் அடியையும் முடியையும் காண முடியவில்லை. பிரம்மா தான் முடியைக் கண்டதாகப் பொய் உரைத்தார். இதனால் அவருக்கு பூமியில் ஆலயமே இல்லாமல் போகட்டும் என்ற சாபத்திற்கு உள்ளானார்.
பதிலுக்கு பிரம்மா சிவனை பூமிக்கு அடியில் போகக் கடவது என்று சபிக்கவே அவர் இந்த பிரம்மகிரியில் பூமிக்குக் கீழே த்ரயம்பகேஸ்வரராக பிரம்மகிரியில் இருக்கலானார்.
இங்கு கங்காத்வாரம், பில்வம், கோடி, குசாவர்த்தம், கனகம், இந்திரம், விஸ்வநாத், வராஹம் உள்ளிட்ட பல தீர்த்தங்கள் கோயிலைச் சுற்றி உள்ளன.
குசாவர்த்தம் தீர்த்தம் இங்குள்ள தீர்த்தங்களிலெல்லாம் மிகுந்த புனிதம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. இங்கு தான் கௌதம ரிஷி கங்கையை தனது தர்ப்பையால் சுற்றி கீழே வரவழைத்ததாக புராண வரலாறு கூறுகிறது. இந்தக் குளத்தை அப்பாஜி பார்னேகர் 18ம் நூற்றாண்டில் புதுப்பித்தார்
வராஹ தீர்த்தத்தில் வராஹ ரூபத்தில் விஷ்ணு தீர்த்தமாடியதாக வரலாறு கூறுகிறது.
கருங்கல்லால் அமைந்த ஆலயத்தில் கர்பக்ருஹத்தில் ஒரு குழி இருக்கிறது. அங்கு எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. நீரின் மேல் சிறிதளவு தெரியும்படி ஒரு சிவலிங்கம் உள்ளது. அந்த லிங்கத்தின் முடியில் உள்ள ஒரு பிளவிலிருந்து இந்த நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு மூன்று முகங்கள் உண்டு என்றும் பிரம்ம விஷ்ணு சிவன் ஆகிய மூவரை இந்த முகங்கள் குறிக்கின்றன என்றும் ஐதீகம் கூறுகிறது.
எப்போதும் சிவலிங்கம் ஒரு வெள்ளிக் கவசத்தால் சார்த்தப்பட்டிருக்கிறது. உற்சவ காலங்களில் ஐந்து முகங்கள் கொண்ட தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெள்ளிக் கவசம் ஒரு பல்லக்கில் வைத்து குசாவர்த்த தீர்த்ததிற்கு கொண்டு சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது. தங்கக் கவசமானது சிவராத்திரி தினங்களிலும் கார்த்திகை மாத பௌர்ணமி மற்றும் விசேஷ உற்சவ காலங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள நந்தி பிரம்மாண்டமானது. எப்போதும் சிவனையே பார்ப்பதாக அமைந்துள்ளது நந்தியின் பக்தியை விளக்குவதாக அமைகிறது.
சந்நிதிக்கு முன்னால் பெரிய ஆமை உருவம் அமைந்துள்ளது.
இங்கு ராமர் தனது வனவாசத்தின் போது சீதை லக்ஷ்மணருடன் தங்கியதாக புராண வரலாறு கூறுகிறது.
இந்தக் கோவிலை 18ம் நூற்றாண்டில் பாலாஜி பாஜி ராவ் புதிப்பித்தார்.
இந்த ஆலயத்தில் பக்தர்கள் கால சர்ப்பதோஷ நிவாரண பூஜை, பித்ரு தோஷ பூஜை, ருத்ராபிஷேக பூஜை உள்ளிட்ட பல பூஜைகளைச் செய்ய கோவில் நிர்வாகம் வசதிகளைச் செய்துள்ளது.
.பிரம்மகிரியில் கோரக்நாதர் தவம் செய்த குகை உள்ளது. அங்கு அவரது திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் த்ரயம்பகேஸ்வரர்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
**