இந்திரன் பழி தீர்த்த படலம்
Post No. 14,711
Date uploaded in London – 1 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய கட்டுரைகளில் திருவிளையாடல் புராணத்தில் (தி. வி. பு. வில்) உள்ள சாமுத்ரிகா லட்சணம் , நவரத்தின மணிகளின் அபூர்வ சக்திகள் , நாற்பது நாடுகளின் பட்டியல், குதிரைகளின் வகைகளும் அவற்றின் லட்சணங்களும் , மதுரை நகரின் பெயர்கள் முதலிய பல செய்திகளைப் பார்த்தோம் ; இவை தவிர எவ்வளவோ சுவையான செய்திகளைப் போகிற போக்கில் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் ; இதோ சில செய்திகள்:-
மதுரையில் இந்திரன் கண்ட விலங்கு அதிசயங்கள்
கர்ப்பமுற்ற தவளைக்குப் பாம்பு குடைபிடித்த அதிசயத்தைக் கண்ட ஆதி சங்கரர் அந்த இடத்தில் சிருங்கேரி மடத்தை தாபித்ததை நாம் அறிவோம்; வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட முயல்கள் திடீரென்று வீறுகொண்டு எழுந்து வேட்டை நாய்களையே விரட்டிய அதிசயத்தைக் கண்ட வீர பாண்டிய கட்டபொம்மன் அங்கு பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை க் கட்டியதை நாம் அறிவோம்; பட்டுப்பூச்சிகளைப் பிடித்துப் பட்டியலிடச்சென்ற பிரான்சு நாட்டு ஆராய்ச்சியாளர் ஹென்றி முக்கோத் உலகிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோர் வத்தைக் கம்போடியா நாட்டில் கண்ட அதிசயத்தைக் (French explorer and naturalist Henri Mouhot) அதிசயத்தை நாம் அறிவோம். அஜந்தா என்னும் அற்புதமான குகைக் கோவில்களையும் ஓவியங்களையும் புலி வேட்டைக்குப் போன ஆங்கிலேயர்களை ஆடு மேய்க்கும் சிறுவன் அழைத்துச் சென்று காட்டி மறைந்த அதிசயத்தை நாம் அறிவோம்.
இதே போல இந்திரனும் கண்ட அதிசயத்தைப் பரஞ்சோதி முனிவர் பட்டியல் இடுகிறார்
இந்திரன் க்ஷத்திரியன் ; அவன் விருத்திரன் என்ற பிராமண அசுரனைக் கொன்றான் ; இதனால் அவனை பிரம்ஹத்திப் பாவம் (பிராம்மணக் கொலை= பிரம்ம ஹத்தி) பிடித்துக்கொண்டது குளத்தில் ஒளிந்து கொண்டான். தேவர்கள் அரசன் இல்லாமல் வருந்தி, அவர்களுடைய குருவான வியாழ பகவானை—பிரஹஸ்பதியை– வணங்கி வேண்டினர் ; அவர் குளத்தில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரனை அழைத்து தெற்கே போ அங்கு ஒரு தலத்தில் உன் பாவம் நீ ங்கும் என்று ஆணையிடுகிறார் ; இந்திரன் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்து தெற்கே வந்தவுடன் சில அதிசயங்களைக் காண்கிறான் ஆஹா, இதுதான் நம் குருநாதர் சொன்ன இடம் என்று முடிவு செய்கிறான் ; அது மதுரை மாநகரம் என்று பரஞ்சோதி பகிர்கிறார்; .அவன் கண்ட அதிசயக் காட்சிகள் :
கற்றறிவில்லாத மந்திகள் / பெண் குரங்குகள் அருவி நீரில் மூழ்கி , அவ்வருவி நீர் வீசிய மணிகளை க் கொண்டு வந்து பாறைமேல் சிவலிங்கமாக வைத்து அருவி நீரால் அபிஷேகம் செய்து கரிய விரல்களால் பூக்களைப்பறித்து வந்து அர்ச்சனை செய்து பழங்களை நிவேதித்துப் பூசை செய்யவும், யாளியும் யானையும் புழக்கையால் ஒரு துறையில் நீரை முகந்து வந்து ஒன்று க் கொன்று ஊட்டி ப் பருகவும், (யாளி என்பது சிங்கம் ; யானையின் எதிரி), புலி முலைப் பாலை மான் கன்றுகள் பசிதீரப் பருகி மகிழவும், வெய்யிலில் வெறு நிலத்தில் பாம்புக்குட்டிகள் வருந்தக்கண்டு கருடன் தனது சிறகை விரித்து நிழலைத்தரவும், அதுகண்டு பாம்புக் குட்டிகள் கருடனால் வருந்துகின்றன , ஐயோவென்று பெண் குரங்குகள் சங்குகளால் நீரை முகந்து வந்து அவைகளினுடல் குளிரச் சொரியவும், மயில்கள் பெட்டையோடு கூடியிருக்கும் மணவறையில் பாம்புகள் மாணிக்கங்களைக் கக்கி விளக்கு வைக்கவும் குயில்கள் ஓமென்று ஒலிக்க, கிளிகள் ஸ்ரீ பஞ்சாட்த்திரத்தை அதனோடு சேர்த்துச் சொல்ல பூவைகள் குருவுபதேசம் கேட்பது போலக் கேட்டு மகிழவும் இவ்வாறாக பக்ஷிகள், மிருகங்கள் செய்கையைக் கண்டு இந்திரன் ஆச்சரியமடைந்த புளகாங்கிதனாகி மன மகிழ்ச்சியோடு செல்லும்போது ஒற்றர்கள் மீண்டு வந்து வணங்கிப் பால் குடிப்பவனுக்கு அப் பாலோடு தீபனைச் சொரிந்தாற்போல மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி பொங்கச் சொல்லத் தொடங்கினர் — இந்திரன் பழி தீர்த்த படலம் , தி வி பு
எனது கருத்து
மான் குட்டிகளுக்குப் புலிகளும் தாய்ப்பசத்தோடு பால் கொடுத்த செய்திகள் சம்ஸ்க்ருத இலக்கியத்தி லும் உண்டு மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார் இதன் கருத்து என்ன வென்றால் அன்பும் சிவனும் ஒன்று; கடவுள் இருக்கும் இடத்தில் பகைமை என்பது இராது.
நான் கண்ட சில அதிசயக் காட்சிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன :
நாங்கள் மதுரையில் வடக்கு மாசிவீதியில் வசித்ததால் எப்போதும் வடக்கு கோபுரம் அதாவது மொட்டைக்கோபுரம் பூசாரியிடம் விபூதி வாங்கிக்கொண்டு மீனாட்சி கோவிலுக்குள் நுழைவோம்; அக்காலத்தில் பாடும் தூண்களுக்கு இரும்புக்கூண்டு கிடியாது ஏதோ சங்கீதப் புலி என்று நினைத்துக்கொண்டு அதைக் கற்களால் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு ஒரு மண்டபம் வழியாக நுழைவோம் அங்கே திருவிளையாடல் புராணத்தை நான் மேலே எழுதிய வசன நடையில் ஒருவர் சொல்லிக்கொண்டு இருப்பார்; அதை நிறைய கிராமத்தான்கள் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். நானும் சிறிது நேரம் நின்று அவரது வசன நடையை அனுபவித்துவிட்டு சந்நிதிக்குச் செல்வேன். அக்க்காலத்தில் இந்த தி வி பு வசன நடையை சிலர் மனப்பாடமாக சொல்ல முடிந்ததும் அதைக்கேட்கப் படிப்பறிவில்லாத ஒரு கூட்டம் கோவிலுக்கு வந்ததும் வியப்பான விஷயமே; இன்றும் அக்காட்சியை என்னால் மறக்க முடியவில்லை .
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே— திருமூலர் இயற்றிய திருமந்திர பாடல்
****
செண்பக பாண்டியனின் உண்மைப் பெயர் என்ன?
நாலு வகை மாலைகள் — இண்டன் மாலை, தொங்கன் மாலை, தா மாலை, கண்ணி மாலை .
வங்கிய சேகர பாண்டியன் மகன் வங்கிய சூடாமணி ; இவனுக்கு செண்பக பாண்டியன் என்ற புனைப் பெயர் உண்டு ; காரணம் என்னவென்றால் இவன் வண்டுகள் மொய்க்காத சண்பகப் பூக்களைக் கொய்து, இண்டன் மாலை, தொங்கன் மாலை, தா மாலை, கண்ணி மாலை கலாய்த்த தொடுத்து சிவபிரானுக்கு அளித்து அலங்காரம் செய்து மகிழ்ந்தான்; இதனால் இவனை சண்பக பாட்டியின் என்றே அனைவரும் அழைத்தனர் ; இவன் காலத்தில் தான் தருமி- நக்கீரர் மோதலும், சிவ பெருமான் நக்கீரர் மோதலும் நடந்தது. இதை அப்பர் பாடியுள்ளார் ; அவர் சங்கம் என்று தமிழ்ச் சங்கத்தைக் குறிப்பிட்டுப் பாடியதால் இந்த மன்னனது காலம் சங்க காலம் என்றும் தெரிகிறது . சிவ பெருமான் ஏழைப் பிராமணன் தருமிக்கு எழுதிக்கொடுத்த பாடலும் குறுந்தொகையில் முதல் பாடலாக வைக்கப்பட்டுள்ளது .
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
(ப-ரை.) கொங்குதேர் வாழ்க்கை – பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி – உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, காமம் செப் பாது – என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ – நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக: நீ அறியும் பூ – நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் – எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் – மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு – நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் – இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் – நறுமண முடைய பூக்களும், உளவோ – உள்ளனவோ?
(முடிபு) தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும் உளவோ? மொழிவாயாக.
(கருத்து) தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.
இச்செய்யுளை, ‘ஆலவாய் இறையனார் தருமி என்னும் பிரமசாரிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுத்த சிந்தாசமுத்தி யகவல்’ என்று தமிழ் நாவலர்சரிதை கூறும்.
இது, பாண்டியனால் சங்க மண்டபத்தின் முன் கட்டப்பட்ட பொற்கிழியைத் தருமி என்னும் பிரமசாரி ஒருவன் பெறும் பொருட்டு ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் இயற்றி அவனுக்கு அளித்ததென்று கூறப்படும்;”பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச்செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புடனுதவி, என்னுளங் குடிகொண்டிரும்பய னளிக்கும், கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’’(கல்லாடம் .1) கூறுகிறது.
****
ஒரிஜினல் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன
நமக்குக் கிடைத்த இரண்டு தமிழ் தி.வி.பு.வும் ஒரிஜினல் / மூலம் அல்ல; அவை சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதை அந்த ஆசிரியர்களே கூறுகின்றனர் ; ஆகையால் கந்தபுராணம் ஹாலாஸ்ய மஹாத்ம்யம் சிவ லீலார்ணவம் ஆகிய மூலங்களைக் கொண்டு ஆராய வேண்டும்; நம்பிக்கும் பரஞ்சோதிக்கும் இடையே 400 ஆண்டு இடைவெளி உள்ளது. நம்பியின் பாடல்களைப்போல இரு மடங்கு பாடல்கள் பரஞ்சோதி தி வி பு வில் உள்ளன.
****
மன்னர்கள் இடைவெளி –மன்னர்களுக்கு இடையே 12 ஆண்டுகள் இடைவெளி!
இடைக்காடன் என்பவர் சங்க காலப் புலவன் ; இவர் காலத்தில் நடந்த பிணக்கினை/ பிரச்சினையை சிவ பெருமானே வந்து தீர்த்துவைக்கிறார்; இது நடந்தது குல பூஷண பாண்டியன் காலத்தில் . அவர் மகன்தான் மாணிக்க வாசகர் கால அரி மார்த்தன பாண்டியன் ; இதிலிருந்து மாணிக்கவாசகரும் சங்ககாலத்தில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது. மேலும் அரிமர்த்தனனுக்கும் சம் பந்தர் கால கூன்பாண்டியனுக்கும் இடையே 12 மன்னர்கள் இருந்ததாகப் பரஞ்சோதி செப்புகிறார் அப்படியானால் சம்பந்தருக்கு 200 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்க வாசகர் இருந்திருக்க வேண்டும்.
கடவுள் மீனவன்
தி வி பு.வில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று சிவ பெருமான் எடுத்த ரூபங்கள் ; அவர் மீனவனாக வருகிறார் இரத்தின வியாபாரியாக வருகிறார் கிழவனாக பாலனாக , வாட்போர் வீரனாக விறகு வெட்டியாக பாடகனாக புலவராக வருகிறார் ; இது போல பெரிய புராணத்திலும் காண்கிறோம் இந்த 64+63 =127 நிகழ்ச்சிகளையும், பக்தி என்பதை மறந்துவிட்டு, சமூக நோக்கில் பார்த்தால் அதிசயங்களுக்கு மேல் அதிசயங்களைக் காணலாம்.
தொடரும்…………
Tags- திருவிளையாடல் புராணம் சில அதிசயச் செய்திகள்-1