picture– எல்லாம் வல்ல சித்தரானது
Post No. 14,720
Date uploaded in London – 3 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்
அந்தக் காலத்தில் பல நாட்டுப் பாடகர்களும் வீரர்களுக்கும் தமிழ் நாட்டுக்கு வந்து அரசவைக்குள் நுழைந்து தைரியமாக சவால் விட்டதை திருவிளையாடல் புராணம் (தி வி பு ) காட்டுகிறது
பாணபத்திரரின் மனைவிக்கு சவால் விடுத்தது இலங்கைப் பாடகி! பின்னர் அவள் தோற்றுப் போனாள்
வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி, வட நாட்டுப் பாடகர்
இதே போல கரிகாலன் காலத்துப் புலவன் ஒருவன் ராஜ சேகர பாண்டியன் அவைக்கு வந்து எங்கள் கரிகாலனுக்கு 64 கலைகளும் தெரியும் உமக்குப் பரத சாஸ்திரம் தெரியுமா? என்று கேட்ட செய்தி கால் மாறி ஆடிய படலத்தில் வருகிறது.
வாட்போட்டியில் ஒருவன் சவால் வீட்டு, சிவபிரானே வந்து சண்டையிட்டது அங்கம் வெட்டிய படலத்தில் வருகிறது; சங்க இலக்கியத்திலும் மல்யுத்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து மற்போர் புரிந்த செய்திகள் இருக்கின்றன . ஹேமநாத பாகவதர் வரகுணன் அவைக்கு வந்து சவால் விட்டதை திருவிளையாடல் திரைப்படம் மூலம் எல்லோரும் அறிவார்கள்.
****
கணவன் மனைவி பெயர்கள்
அக்காலத்தில் எல்லா ஜாதியினரின் குடும்பத்திலும் கணவன் மனைவி பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களாக இருந்ததைக் காட்டுகிறது.
மலையத்வஜன் மனைவி – காஞ்சனமாலா ; அவள் சூரசேன நாட்டுப் பெண்மணி;
அங்கயற் கண்ணி கணவன் – சுந்தரேசன் அல்லது சுந்தர பாண்டியன்.
உக்கிரகுமாரன் மனைவி பெயர்- காந்திமதி; அவள் சூரியகுல சோமசேகரனின் புதல்வி ;
உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.
இதிலிருந்தது சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய் (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !
விருத்த குமாரன் பாலன் ஆகிய படலம் ஒன்றினை மட்டுமே நால்வரும் — அப்பர்- சம்பந்தர் சுந்தர், மாணிக்க வாசகர்—பாடினார்கள்; இதில் வரும் பிராமண பெயர் விரூபாக்ஷன்.
காரைக்கால் அம்மையார் காலத்தில் புனிதவதி, பரமதத்தன் அப்பர் காலத்தில் திலகவதி தருமசேனர் இருந்ததால் இதில் வியப்பில்லை அவர்கள் பிராமணர்கள் அல்ல.
உலவாக்கோட்டை அருளிய படலத்தில் வரும் பெண்ணின் பெயர் தருமசீலை ; அவள் ஜாதியில் வேளாளர் ;
மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி – சுசீலா;
வங்கிய சூடாமணி காலத்து பிராமணன் பெயர் தருமி; அவனை அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்
சங்கத்தார் கலக்கம் தீர்த்த படலத்தில் வரும் செட்டியார் பெயர்கள் தனபதி- குணசாலினி
பிட்டு விற்ற கிழவியின் பெயர் வந்தி. இன்னொரு படலத்தில் சுக்லன்- சுகளை என்ற கணவன்- மனைவி பெயர்கள் வருகின்றன
***
காப்பி அடித்த புஸ்தகங்கள்
நம்பி எழுதிய நூலுக்கான மூலம் சாரசமுச்சயம் என்னும் புஸ்தகம் கிடைக்கவில்லை;ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தர பாண்டியமும் கிடைக்கவில்லை.. ஸ்கந்த புராண ஒரிஜினலை வைத்து ஹாலாஸ்ய மாஹாத்ம்யம், சிவலீலார்ணவம் முதலிய சம்ஸ்க்ருத தி வி பு. கள் எழுதப்பட்டன. அதிலிருந்து வந்ததே பரஞ்சோதியாரின் தி.வி.பு. ஆகவே சம்ஸ்க்ருத மூலங்களை ஆராய்வது முக்கியம்.
உலவாக்கோட்டை அருளிய படலத்தில்……
****
உலகின் முதல் சிபாரிசுக் கடிதம்
திருமுகம் கொடுத்த படலம் மிக முக்கியமானது; இதை சம்பந்தரும் குறிப்பிடுவதால் அவருக்கு முந்திய காலத்தில் நடந்த சம்பவம் இது ; இதில்தான் சிவ பெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம் வருகிறது. சேராமானுக்கு சிவன் எழுதிய இந்தக் கடிதம்தான் உலகின் முதல் ரெக்கமண்டேஷன் லெட்டர் :இதோ அந்தப் பாடல்
பதினொன்றாந் திருமுறை- திருவாலவாயுடையார் அருளிச் செய்த 1, திருமுகப் பாசுரம்-
1.மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
5.பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ்,
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
10தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
சிறப்புரை: ‘கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, – பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும் அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் ..
முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத்தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாணபத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.
‘இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்’ என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற்கு குறிக்கப்பட்ட பாணபத்திரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். ‘சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்’ என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.
பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், ‘இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே’ எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பக்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும்பொருள் கொடுத்துப் பாசுரத்தில் – வரவிடுப்பதுவே – என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்’ என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். ‘சேரமான் பெருமாள் நாயனார்’ சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.
மறைமலை அடிகளார் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலில், மாணிக்க வாசகர் மூவர்க்கு முற்பட்டவர்’ என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் ‘பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல’ என்றார்.
திருமுகங் கொடுத்த வரலாற்றைக் ‘கல்லாடம்’ என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. அது மாணிக்கவாசகர் காலத்து நரிபரியாக்கிய திருவிளையாடலைக் கூறிற்று, மற்றும் பல கதைகளைக் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்ந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. ‘ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற் பட்டது’ என்றும், அது மாணிக்க வாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமையால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார்.
(மேற்கூறிய விளக்கவுரை தமிழ் வரச்சுவெல் யுனிவர்சிட்டி T V U உரை)
எனது கருத்து
சேரமான் பெருமாள் என்பது சேர மன்னனைக்குறிக்கும் பொதுப் பெயர் ; ஆகவே சுந்தரர் கால சேரமான் வேறு ஒருவராக இருக்கலாம் . சேக்கிழார் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது
****
கி பி 600 CE க்கு முந்திய லீலைகள்
அப்பரும் சம்பந்தரும் குறிப்பிடும் தி வி பு நிகழ்ச்சிகள் குறைந்தது 1400 ஆண்டுகாளுக்கு முன் ந டந்திருக்க வேண்டும்
அவையாவன :
சம்பந்தர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்
வெள்ளை யானை சாபம் தீர்த்தது
வெள்ளியம்பலத்திற் கூத்தாடியது
வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது
மாணிக்கம் விற்றது
நான்மாடக்கூடல் ஆனது
எல்லாம் வல்ல சித்தரானது
விருத்த குமாரன் பாலரானது
திருமுகம் கொடுத்தது
பலகையிட்டது
பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கியது
திருவாலவாயானது
சங்கப்பலகை தந்தது
பாண்டியன் சுரம் தீர்த்தது
சமணரைக் கழுவேற்றியது
****
அப்பர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்
இந்திரன் முடிமேல் வளை எறிந்தது
வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது
நான்மாடக்கூடல் ஆனது
எல்லாம் வல்ல சித்தரானது
விருத்த குமாரன் பாலரானது
வளையல் விற்றது
பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்தது
சங்கப்பலகை தந்தது
தருமிக்குப் பொற்கிழி அளித்தது
இடைக்காடன் பிணக்கு தீர்த்தது
வலை வீசியது
வாதவூரடிகளுக்கு உபதேசித்தது
நரி பரியாக்கியது
மண் சுமந்தது
****
இந்த இரண்டு பட்டியலில் வரும் நிகழ்ச்சிகளால் முதலாவது வரகுணன் ஒருவன் இருந்ததும் , மாணிக்க வாசகர் தேவார மூவருக்கு முந்தையவர் என்பதும் உறுதியாகிறது.
*****
அடுத்த கட்டுரையில்
சுனாமி தாக்குதல்கள் , வறட்சி , புதிய மதுரை உண்டானது ,
ஜனத்தொகை பிரச்சினை
உவமைகளும் பழமொழிகளும்
ரசவாதம்
அஷ்டமா சித்திகள்
மதுரையில் செட்டி தெரு
சீல் / லட்சினை வைக்கும் முறை
அம்புகளில் பெயர்கள்
முதலியவற்றைக் காண்போம்
தொடரும்…………..
–சுபம்—
TAGS—திருவிளையாடல், புராணம், சில அதிசயச் செய்திகள்-3