picture – மதுரைக்கோவில் தங்க கோபுரம்
Post No. 14,749
Date uploaded in London – 11 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கருமத்தான் ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி
தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்
அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டகும் ஆண்ட
பெருமைத்து ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க யோகம்.
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் ( தி.வி. பு.) கையாளும் மேலும் சில சுவையான உவமைகளைக் காண்போம்.
வைகை நதி உவமை
அன்னக்குழியும் வையையுமழைத்த படலத்தில்,
“நீண்ட பிலத்தில் செல்லுகின்ற நிலைமையுடையனாவாவும் ,
நிருமலனாகிய பரமசிவன் சந்திரனையணிந்த திருமுடியின் மேல் ஆடுகின்ற செயலினை யுடையனாவாவும், பிரகாசத்தையுமிழா நின்று அரிய மாணிக்கங்களைத் தன் தலையில் உடையனாவா வும் , நீண்டு வளைந்த தலை யுடையனாவாவும், நிறை நிறைவான குறுகிய பல கால்களினால் ஓடுகின்ற வகையினையுடையனாவா வும் இருத்தலால் வளைந்த பாம்பென்று சொல்லும்படியாகவும் வாரா நிற்கும். இவ்வாறு வரும் நதியானது கல்வித்தேர்ச்சியில்லாதவர் செய்த கவிபோலக்கலங்கி , கல்வி கேள்வியில் வல்லவர்கள் செய்த கவி போல் பல சிறப்பாகிய துறைகள் தோன்றப்பொருந்திச் செல்லுகின்ற வழிகள் தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்திலுள்ள யாவரும் விரும்பி அப்பயனைக் கொள்ளும்படி தங்கிற்று .
****
இந்திரன் சிவனைக் கண்ட காட்சி
இந்திரன் பழிதீர்த்த படலத்தில்,
அருவாகி யுருவாகி யருவுருவங்
கடந்துண்மை யறிவா னந்த
உருவாகி யளவிறந்த வுயிராகி
யவ்வுயிர்க்கோ ருணர்வாய்ப் பூவின்
மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன்
னிடையுதித்து மடங்க நின்ற
கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா
யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான்.
அருவமாகியும், உருவமாகியும், அருவுருவமாகியும், கடந்து
இவற்றைக் கடந்து, சச்சிதானந்த வடிவாகியும், எண்ணிறந்த
உயிர்களாகியும், அவ்வுயிர்களின் அறிவுக்கோர் அறிவாகியும் (நிற்றலின்), மலரின் மணம்போலாகியும்,
சரமும் அசரமுமாகிய அனைத்தும், தன்னிடத்துத் தோன்றி அடங்க நின்ற மூல காரணமாகியும், தோன்றியருளிய சிவக் கொழுந்தினை,
ஆயிரங்கண்களும் களிக்கும்படி பார்த்தான் .
அரு, உரு எனப் பிரித்தலுமாம். அருவம் – சிவம், சத்தி,
நாதம், விந்து என்பன. உருவம் – மகேசுரன், உருத்திரன், மால்,
அயன் என்பன. அருவுருவம் – சதாசிவம். ஆகி என்பதனை
அருவுருவம் என்பதனோடும் கூட்டுக. இம் மூன்றும் இறைவற்குத்தடத்தவிலக்கணம்,; இவற்றைக் கடந்து நின்றது சொரூப விலக்கணம்;
இவ்வியல்பினை,
“உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோ மருவுரு வான போது
திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் விளைவு காணே”
என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா லறிக. ‘– வேங்கடசாமிநாட்டார் உரை
***
மதுரைக்கோவிலில் தங்க விமானம் 8, 16, 32, 64
கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும்
புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு
மெட்டெட்டுக் கணமுந் தாங்க
விரியெட்டுத் திரைபரப்ப மயனிருமித்
துதவியவவ் விமானஞ் சாத்தி
அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை
யருச்சிப்பா னாயி னானே.*
எட்டு மலைகளும் என்னும்படி, முகிலைக் கிழித்து
மேலோங்கும், தொளையினையுடைய துதிக்கை
யினையும், சந்திரனது பிளவுபோன்ற கொம்பினையுமுடைய, எட்டு யானைகளும், கோபத் தினை யுடைய முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்க, விரிந்த
எட்டுத் திக்குகளிலும் பரவி நிற்க, -தேவ தச்சனால் ஆக்கிக் கொடுக்கப்பட்ட, அந்த விமானத்தை இந்திரனானவன் சாத்தி, எட்டுத் திருவுருவங்களையுடைய பரஞ்சோதியை, அருச்சனை செய்வானாயினன்.
மதுரைக்கோவிலில் சந்நிதியில் கல் யானைகளைக் காணலாம். மேலே தங்க விமானம் புகைப்படமும் கிடைக்கிறது ஆனால் சிங்கம் முதலியன இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
*****
picture–மாணிக்கம் விற்ற படலம்
தேவாரம், திருவாசகம் பாணியில் போற்றி
430. அம் கணா போற்றி வாய்மை ஆரணா போற்றி நாக
கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
செங்கணா போற்றி ஆதி சிவ பரஞ் சுடரே போற்றி
எங்கள் நாயகனே போற்றி ஈறு இலா முதலே போற்றி. 87
உரை
431. யாவையும் படைப்பாய் போற்றி யாவையும் துடைப்பாய் போற்றி
யாவையும் ஆனாய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி
யாவையும் அறிந்தாய் போற்றி யாவையும் மறந்தாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி. 88
உரை
432. இடர் உறப் பிணித்த வந்தப் பழியினின்று என்னை ஈர்த்து உன்
அடி இணைக்கு அன்பன் ஆக்கும் அருள் கடல் போற்றி சேல்கண்
மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடர் விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி. 89
உரை
433. பூசையும் பூசைக்கு ஏற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியின் பேறு நல்கும்
ஈசனும் ஆகிப் பூசை யான் செய்தேன் என்னும் என் போத
வாசனை அதுவும் ஆன மறைமுதல் அடிகள் போற்றி.
****
வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலத்தில்
வேதங்களின் எண்ணிக்கை : 21+101+9+1000 சாகைகள்
ஆனால் இப்போது இவ்வளவு சாகைகள் கிடைக்கவில்லை
வேதமும் ஒன்றே; வேதப்பொருளும் ஒன்றே .
சுந்தர லிங்கத்தின் ஆத்ம தத்துவம் பிரமன்;
நடுவிலுள்ள விச்சா தத்துவம் விஷ்ணு;
முடிவில் சிவ தத்துவமான உருத்திரன்;
இம்மூன்றினிருந்து அகார உக்கார மகாரமாகிய — ஓம்— பிரணவம் உதித்திடும் .
இப்படிக்கு விந்து நாதத்தோடு உதிக்கா நின்ற விசாலமான பிராணவத்தினின்றும் மூன்று பேதமாகிய பதத்தால் காயத்திரி பிறக்கும்.
கிழக்கில் ரிக் வேதம் – 21 கிளை /சாகைகள்
தெற்கில் யஜுயூர் – 101 கிளை;
மேற்கில் அதர்வணம் – 9 கிளை
வடக்கில் சாமம் – 1000 கிளை
****
இவற்றை விளக்கும் பாடல்கள்
1185. ஓத அரும் அகார உகாரமே மகாரம் உதித்திடும் பிரணவம் விந்து
நாதமோடு உதிக்கும் வியத்த ரகத்தின்அல்ல காயத்திரி மூன்று
பேதம் ஆம் பதத்தால் பிறக்கும் இக்காயத்திரி இருபேதம் ஆம் பேதம்
யாது எனில் சமட்டி வியட்டி என்று இரண்டும் ஏது ஆம் வேட்டவை எல்லாம். 33
*
1186. இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான் மறையை அந் நான்கும்
பின்னவன் அருளால் அளவு இல ஆன பிரணவம் ஆதி மந்திரமும்
அன்னவாறு ஆன தாரகத் தகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த
சொன்ன அக் கரத்தில் சிவாகம நூல் இச் சுரவன் நடுமுகத்தில் உதித்த.
*
1187. கீட்டிசை முகத்து ஒன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்தது ஆல் இருக்க அது தென்பால்
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வடதிசை முகத்தில்
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்
நாட்டிய ஒன்பது உருவொடு கிளைத்து நடந்தது நான்கு அதாம் மறையே.
****
மதுரைக்கு எண் 12 என்று பெயர் ஏன் ?
அத்தகு தலமற் றியாதெனி னுலக
மகிலமுந் தன்னுடம் பான
வித்தகன் சென்னிப் பன்னிரு விரன்மேல்
விளங்கிய தலமது சீவன்
முத்தரா யெண்ணில் வானவர் முனிவோர்
முயன்றுமா தவப்பய னடைந்து
சித்தமா சகன்று வதிவதென் றறநூல்
செப்பிய மதுரையந் நகரில்.
அந்தச் சிறந்த பதி யாதெனில். அஃது உலக மனைத்தும் தனது வடிவமாகவுள்ள விராட்புருடனது, முடியின்மேல் பன்னி ரண்டங்குலத்துக்கு மேலாக விளங்கிய தலம் என்றும், அளவிறந்த தேவர்களும் முனிவர்களும் நோற்றுப் பெரிய தவப்பயனை எய்தி, மனக் குற்றங்கள் நீங்கிச் சீவன் முத்தராய் வசிக்கப் பெறுவது என்னும், தரும நூல்கள் எடுத்துக்கூறும் மதுரைப் பதியாம்;
picture-வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
பன்னிரு விரன்மேல் விளங்கிய தலம் -துவாதசாந் தத்தலம்;
–SUBHAM—
TAGS-வைகை நதி, உவமை , மதுரைக்கோவில் ,தங்க விமானம் ,வேதங்களின் எண்ணிக்கை , தி.வி.பு.உவமைகள், உருவகங்கள்-5