பராசக்தி வழிபாடு பற்றி பெரியோர்கள் என்ன சொன்னார்கள் ?- 1 (Post.14,768)

GODDESS MEENAAKSHI, LORD SHIVA, SUNDARESWARA.

Written by London Swaminathan

Post No. 14,768

Date uploaded in London –  16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,

ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி

பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,

யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,

இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.

நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,

அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

— பாரதியார் பாடல் ; தலைப்பு: தேச முத்துமாரி.

****

ஒளியால் உலகீன்றுயிர் அனைத்தும்

மீன் போற்செவ்வியுறநோக்கி

அளியால் வளர்க்கும் அங்கயற்கண்

அன்னே! கன்னி அன்னமே !

அளியால்  இமவான் திருமகளாய்

ஆவியன்ன மயில் பூவை

தெளியா  மழலைக்கிளி வளர்த்து

விளையாட்டரும் யா செய்தி என்னே

பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்

FISH EYED GODDESS – MEENAAKSHI OF MADURAI.

மீன்கள் இட்ட முட்டைகளைத் தன் பார்வையால் குஞ்சு பொறிப்பது போல நீ ஈன்ற உயிர் அனைத்தையும், உன் அருட் பார்வையால் வளர்க்கிறாய்; அன்னம் போன்றவளே ; மயில் போன்றவளே! மலையத்வஜ பாண்ண்டியன் மகளாய் அவதரித்து பூவைப் பறவைகளையும் கிளிகளையும் வளர்த்து விளையாடும் செயல்தான் என்னே !

கயற் கன்னி = மீனாட்சி; அம் = அழகான ; கயல் = மீன்.

****

Ghanam Krishna Iyer (1790–1854) 

ராகம்: ரதிபதிப்ரியா

பாடல்: கனம் கிருஷ்ண ஐயர்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)

சுக ஸ்வரூபிணி மதுர வாணி

சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ

வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)

****

அவளின்றி ஓர் அணுவும் அசையாது !

ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரி

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமபி |

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி || 1 ||

செளந்தர்யலஹரி , ஆதி சங்கரர் இயற்றியது, முதல் ஸ்லோகம்

ந கலு குசல: ஸ்பந்திதுமபி= அவளின்றி ஓர் அணுவும் அசையாது !

பொருள்

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் விளக்கம்

தெய்வங்களே நமது குறைகளை நீக்க வேண்டும் . அப்படி நீக்குபவர் தேவர்கள் எனப்படுவர் ; அத்தேவர்களுக்கு ஏற்படும் குறைகளை நீக்கும் தெய்வம் ஸ்ரீ சக்தி எனப்படும். இந்த சக்தியுடன் சேர்ந்து இருப்பதே  சிவபெருமானுக்குப் பெருமை. சக்தியுடன் சேராமல் இருந்தால் சிவனும் வெறும் சிவன்தான் . ஆதலால்தான் உலக வழக்கத்திலும் வைஷ்ணவர் முதலிய யாராயினும் எனக்கு எழுந்துவர சக்தி இல்லையே எனக்கூறுவர்.அப்படிச் சொன்னால் , சிவனே என்று இரு சொல்லுவது வழக்கம் .

ஆகையால்தான் ஆதி சங்கரரும் பரமேஸ்வரனுக்கு காரியங்களைச் செய்யவதற்குத் தகுதியை அளிக்கும் பராசக்தி இவளேதான் ; ஆகையால் பிரம்மா, விஷ்ணு  முதலியோரும் வணங்கும் ஸ்ரீ சக்தியை நமஸ்கரிக்கவோ துதிக்கவோ புண்யமில்லாதாருக்கு இயலாது. இச்சக்தி இல்லையேல் அசைவதற்கும் இயலாது என்று துதித்திருக்கிறார் .

.

இவ்வுலகில் ஸ்த்ரீ ரூபமாய்த் தெய்வத்தைக் கூறும் மதம் நம் இந்துமதம் ஒன்றுதான். அதனாலேயே நம் மதத்தில் பெண்களுக்கு சிறந்த பெருமை கொடுக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல ; தெய்வங்களாகக்கூட பெண்களை பூஜித்து வருகிறோம்.அம்மாதிரி பூஜித்து புடவை, , மஞ்சள்  , குங்குமம், புஷ்பம் தாம்பூலம் இவற்றைக்கொடுத்து அலங்கரித்து , அன்னமிட்டு உபசரிப்பதை சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொல்கிறோம்.  இப்பூசையை விஷ்ணு மதத்தைச் சேர்ந்தோரும் செய்து வருகிறார்கள். இந்த பூஜையை எதோ ஒரு காரணத்தால் நடத்தாத  குடும்பங்களில் நல்ல காரியங்களைத் தொடங்கும்போது இடையூறு ஏற்படுகிறது .அக்குடும்பங்களில்  தோன்றும்  சந்ததியினருக்கு  சந்திரன் சுக்கிரன் ,  ராகு  ஆகிய  கிரஹங்கள்  ஜாதகத்தில் தோஷமுள்ளவர்களாகின்றன. மனதும் சுவாச கோஷமும் பாதிக்கப்படுகின்றன. ஆதலாலேயே லலிதா சஹஸ்ர நாமத்தில்

ஓம் சுவாசின்யை நமஹ 

ஓம் சுவாசின்யர்ச்சிநப்ரீதாயை நமஹ  என்ற நாமங்களால் ஸ்ரீ சக்தியை  சுவாசினி ரூபிணியாகவும்  சுவாசினியை அர்ச்சிப்பதால் சந்தோஷப்படுகிறவளாயும்  கூறப்பட்டுள்ளது இப்படிப் பெண்களைத் தெய்வமாக நினைத்துப் பூஜிப்பது  பெரியோர்களுக்கு சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது.

****

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

கி. வா ஜகந்நாதன் உரை

காப்பு

(கட்டளைக் கலித்துறை)

தாரமர் கொன்றையும் சண்பக

மாலையும் சாத்தும்தில்லை

ஊரர் தம் பாகத் துமைமைந்த

னேஉலகேழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதிஎப்

போதும் என் சிந்தையுள்ளே

கார் அமர் மேனிக் கணபதி

யேநிற்கக் கட்டுரையே.

ASHTA BHUJA VINAYAKAR 

(உரை) மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக. 

தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸும ப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

நூல்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்

போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்

குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி

என்றன் விழுத்துணையே.

(உரை) உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும், ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும், மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்றதென்று நூல்கள் கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.

உதிக்கின்ற செங்கதிர்-பால சூரியன்; கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்; உத்யத்பானு ஸஹஸ்ராபா’ (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. “வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின். உச்சித் திலகம்: “சிந்துர வண்ணப் பெண்ணே” (6), “சிந்துர வண்ணத்தினாள்” (8), ‘சிந்துர மேனியள்” (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.

“மாதுளம் பூநிறத்தாளை” (பயன்); தாடிமீ குஸுமப்ரபா” (லலிதா ஸஹஸ்ரநாமம், 560).

எல்லா விடத்தும் எக்காலத்தும் துணையாக இருத்தலின் விழுத்துணை என்றார்..

To be continued………………………….

Tags– மாதுளம் பூநிறத்தாளை, அபிராமி அந்தாதி, சுமங்கலிப் பிரார்த்தனை, அணுவும் அசையாது, பராசக்தி வழிபாடு ,நம்பினோர் கெடுவதில்லை,அம்பிகையைச் சரண்புகுந்தால், பாரதியார் பாடல் ,பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், ஜகத் ஜனனி சுகபாணி , ஆதிசங்கரர், செளந்தர்ய லஹரி

Leave a comment

Leave a comment