விண்வெளியில் நடந்த பெண்மணிகள்! (Post No.14,779)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,779

Date uploaded in London – 20 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளி முழக்கம்!

விண்வெளியில் நடந்த பெண்மணிகள்! 

.ச. நாகராஜன்

 Anne McClain 

2025 மே மாதம், முதல் தேதி. விண்வெளியில் இரு பெண்மணிகள் நடந்து சாகஸம் செய்தனர். 

பெண்கள் மட்டுமே தனித்து விண்வெளியில் ஐந்தாவது முறையாக இப்படி நடந்து வெற்றி பெற்றுள்ளனர். 

இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்னி மக்ளெய்ன் மற்றும் நிகோல் அயர்ஸ் ஆவர் (Anne McClain and Nichole Ayers) ஐந்து மணி நேரம் 44 நிமிடங்கள் இவர்களது விண்வெளி நடைப் பயணம் நீடித்தது. 

எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி அல்லது ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி நடையில் இரு வீராங்கனைகளும் ஒரு ஆண்டெனாவை நகர்த்தி பன்னாட்டு விண்வெளிநிலையத்தை புது வரிசை சோலார் அர்ரேஸ்களை (சூரிய அணிகளை) ஏற்கும் விதமாகத் தயார்ப்படுத்தினர். 

இந்த விண்வெளி நடை ஜிஎம்டி நேரம் 18.49க்கு நடைபெற்றது. 

நெடுநேரம் கலத்தை விட்டு வெளியில் இருந்த இவர்கள் இன்னும் சில பணிகளை முடிக்க எண்ணியிருந்தனர். ஆனால் நேரம் போதாமையால் தங்கள் நடையை முடித்து நடையைக் கட்டினர்.  

புதிய சூரிய அணிகள் இன்னும் அதிக ஆற்றலுடன் செயல்பட்டு மின்சார சக்தியை உருவாக்கும் திறமையை 30 சதவிகிதம் அதிகப்படுத்தும். அதாவது 160 கிலோவாட் சக்தியை 215 கிலொவாட்டாக உயர்த்தும். 

“இந்த வருடம், மனிதர்கள் விண்வெளியில் தொடர்ந்து இருந்து வரும்  25வது வருடமாக  அமைவதால் இந்த விண்வெளி நிலையத்தை 2030 வரை நீடிக்கும்படி செய்தோம். இந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்து எங்களை கௌரவப்படுத்தியுள்ளனர்” என்று அயர்ஸ் மகிழ்ச்சியுடன் தன் பணியை முடித்தவுடன் கூறினார். 

நாங்கள் செய்த காரியத்தால் நாம் சந்திரனுக்குத் திரும்பும் முயற்சி வெற்றி பெறுவதோடு செவ்வாய் செல்லவும் வழி வகுக்கும். புவியில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் தெரியப்படுத்தும்” என்றார் பெருமிதத்துடன் அயர்ஸ். 

அன்னி மக்ளெய்ன் மூன்றாவது முறையாக விண்வெளியில் நடக்கிறார். அவர் விண்வெளியில் நடந்த மொத்த நேரம் 18 மணி 52 நிமிடங்கள். அயர்ஸுக்கு இது தான் முதல் விண்வெளி நடையாகும். 

முதன்முதலாக பெண்மணிகள் விண்ணில் 2019 அக்டோபர் மாதத்தில் நடந்தனர். கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்ஸிகா மெய்ர் இந்த சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினர். இந்த ஜோடி 2020 ஜனவரியில் இன்னும் இரு முறை விண்ணில் நடந்தது. பின்னர் 2023 நவம்பரில் ஜாஸ்மின் மொக்பெல்லும் லாரல் ஓஹராவும் நடந்து காட்டினர். 

“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக்கடல்  முழுதும் கப்பல் விடுவோம்” என்றார் பாரதியார். 

“விண்வெளியில் நடை பயிலுவோம் செவ்வாய்க்கும் ராக்கெட்டில் செல்வோம்” என்கின்றனர் நவீன யுகத்து நாரீமணிகள்.

இவர்கள் புகழ் ஓங்கட்டும்!

***

Leave a comment

Leave a comment