இராமாயணத்தில் மோடிவேஷன் உண்மைகள்! (Post No.14,782)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,782

Date uploaded in London – 21 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

10-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

MOTIVATION IN RAMAYANA

இராமாயணத்தில் மோடிவேஷன் உண்மைகள்! 

ச. நாகராஜன் 

நவீன யுகத்தில் சென்ற நூற்றாண்டில் பல்வேறு துறைகளிலும் வாய்ப்புகள் அதிகமாக உருவாகின; போட்டிகளும் அதிகமாயின.

வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் ஊட்ட சுயமுன்னேற்ற நூல்கள் ஏராளம் தோன்றின.

 டேல் கார்னீகி, நெப்போலியன் ஹில்லில் ஆரம்பித்து கோப்மேயர் வரை ஏராளமானோர் நவீன பாணியில் சூத்திரங்களை வகுத்துத் தந்தனர்.

 வெற்றி பெற விழைவோரின் கையில் இவர்கள் படைத்த சுயமுன்னேற்ற நூல்களில் ஏதாவது ஒன்று இருக்கும்.

 ஆனால் இந்திய நாகரிகத்தை எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட சுயமுன்னேற்ற யோசனைகளுக்குப் பஞ்சமே இல்லை எனலாம்.

 ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட நூல்களில் ஏராளமான கதாபாத்திரங்கள் வாயிலாகவும் இயற்றியோரின் அறிவுரையாகவும் ஊக்கமூட்டும் பொன்மொழிகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

 இதில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவெனில் இவை கதைகளுடன் கூடியவை என்பதே.

 எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில் சோகம் (என்ற மனோவேதனை), மனச்சோர்வு ஆகியவற்றை உதறி ஊக்கம், உற்சாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில பாத்திரங்களையும் இடங்களையும் பார்ப்போம்.

 சீதையை ராவணன் தூக்கிச் செல்லவே ராமர் மனமுடைந்து போகிறார். அப்போது வருத்தமுற்ற அவரைப் பார்த்து லட்சுமணர் கூறுகிறார்:

 “உற்சாகந்தான் பலமாகிறது. உற்சாகத்திற்கு மேலான பலம் ஒன்றுமில்லை. உற்சாகத்துடன் கூடியிருப்பவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாதது ஒன்றுமில்லை. உற்சாகமுள்ள மனிதன் காரியங்களில் தோல்வி அடைவதில்லை. உற்சாகம் ஒன்றைக் கொண்டு தான் சீதையை அடையப் போகிறோம்.”            —  ராமாயணம் 4-1-122-123

சுக்ரீவன் ராமருக்குத் தைரியம் சொல்லும் போது

“முயற்சியுடன் கூடியவர்களுடைய இயல்பாகிய தைரியத்தை விடக்கூடாது” என்று கூறுகிறான்.–ராமாயணம் 4-7-8

வாலியின் புதல்வனான அங்கதன் கூறுவது இது:

“மனதைக் கவலையில் வைக்கக் கூடாது. கவலை தீங்குகளுள் முதன்மையானது. கவலையானது கோபங்கொண்ட நாகம் இளம் பாலனைக் கொள்வது போல் புருஷனைக் கொல்கிறது.” ராமாயணம் 4-64-11 

சோகம் என்னும் மனவருத்தமும் அது தரும் மனச்சோர்வையும் எந்தக் காலத்திலும் நாம் நம்மிடம் அண்ட விடக் கூடாது 

‘சோகோ நாஸயதே தைர்யம்’ என்று ஆரம்பித்து லட்சுமணன் கூறுவது இது:

“மனவேதனை அறிவை அழிக்கிறது. மனவேதனை எல்லாவற்றையும் அழிக்கிறது. மனவேதனைக்கு நிகரான பகை இல்லை.”\

 உற்சாகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட உழைப்பையும் பெருமையைம் ஏராளமான இடங்களில் அநேக பாத்திரங்களின் வாயிலாக வால்மீகி முனிவர் எடுத்துக்காட்டுகிறார்; வற்புறுத்துகிறார்.

 ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நன்கு ஆலோசித்து செயல்முறைத் திட்டத்தை நன்கு வகுத்துக் கொண்டு ஈடுபடவேண்டும் என்பதற்கு அனுமனே சிறந்த உதாரணம்.

 சீதையைச் சந்தித்த பின்னர் அனுமன் தனக்குள்ளேயே யோசிக்கிறான்.

சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கினுள் ராட்சஸர்களிடத்தில் தண்டமே சரியானதாகும் என்ற முடிவுக்கு வந்த அநுமன் தனக்குள் கூறுவது இது:

 “செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தில் ஈடுபட்டபோது எவன் ஒருவன் முதல் காரியத்திற்கு ஒரு கேடும் இன்றி அநேக காரியங்களையும் சாதிக்கிறானோ அவனே காரியத்தைச் செய்து முடிக்கத் திறமை உள்ளவன் ஆகிறான்.

 “இந்த உலகத்தில் அற்பமான ஒரு காரியத்திற்கும் ஒரே ஒரு உபாயம் மட்டும் சாதகம் ஆக மாட்டாது. ஆகவே எவன் ஒருவன் கோரிய பயனை பலவகையாலும் அறிகிறானோ அவன் தான் காரியத்தைச் சாதிப்பதில் வல்லவன் ஆகிறான்.”–ராமாயணம் 5-41- 5 & 6 

இப்படி எடுத்த இடங்களில் எல்லாம் ஊக்கமூட்டும் மொழிகளை ராமாயணத்தில் காணலாம். இவற்றைத் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து உற்சாகம் கொள்பவருக்கு மன வருத்தம் என்பது ஏது? தோல்வி என்பதும் தான் ஏது?

***

Leave a comment

Leave a comment