
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,798
Date uploaded in London – —26 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
16-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
MOTIVATION IN MAHA BHARATHA
மஹாபாரதத்தில் மோடிவேஷன் உண்மைகள்!
ச. நாகராஜன்
மாபெரும் இலக்கியமான மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களை 18 பர்வங்களில் 2314 அத்தியாயங்களில் கொண்டுள்ள ஒரு பெரும் பொக்கிஷமாகும்!! தமிழில் மொழிபெயர்த்து 8895 பக்கங்களில் இதை ம.வீ இராமானுஜாசாரியார் பதிப்பித்துள்ளார்.
தொட்ட இடங்களில் எல்லாம் சிக்கலான பிரச்சினையும் அதற்கான சரியான தீர்வும் தரப்படும் இடங்கள் இந்த நூல் முழுவதும் உள்ளன.
இதில் இல்லாதது எதுவும் எங்கும் இல்லை என்பதையும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்!
ஜயம் என்ற பெயரைக் கொண்ட மஹாபாரதத்தைப் படிப்பவன் ஜயத்தையே – வெற்றியையே அடைவான் என்று ம்ஹாபாரதெமே உறுதிபடக் கூறுகிறது.
எடுத்துக்காட்டிற்காக சிலவற்றைக் காண்போம்:
விதுர நீதி
விதுரர் திருதராஷ்டிரனுக்கும் கூறும் நீதி உபதேசம் விதுர நீதி. இது மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருகிறது.
விதுரர் கூறும் நீதி ஸ்லோகங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையும் உண்டு. சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் மட்டுமே அதற்கு விளக்கம் கூற முடியும்.
ஒரு மனிதன் சுகமாக இருக்க வழி என்ன?
விதுரர் கூறுகிறார்:
ஒன்றால் இரண்டை ஜெயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜெயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.
இதுவே சுகமாக இருக்க வழி.
புரியாத கணித பாஷையாக அல்லவா இது இருக்கிறது! இதன் பொருள் என்ன?
ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்
இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத்தகாதது இந்த இரண்டையும் ஆராய்ந்து பார்.
மூன்றை – நண்பர், விரோதி, நட்பு, பகை இல்லாமல் நடு நிலையில் இருப்போர் ஆகிய மூவரையும்
நான்கினால் – சாம தான பேத தண்டம் என்ற நான்கினால் வசமாக்கு.
ஐந்தை ஜயித்து – ஐந்து புலன்களை ஜயித்து
ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம், த்வைதீ, பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜநீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து கொண்டு
ஏழை விட்டு சுகமாக இரு – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாகச் செலவழித்தல் ஆகிய ஏழு குற்றங்களையும் விட்டு விட்டு சுகமாக இரு.
இது போல ஏராளமான உபாயங்களை அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் வார்த்தைகளால் நலமுற வாழ்வதற்காக அளிக்கிறார்.
பகவத் கீதை

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறும் உபதேசம் எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது.
க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட – (மிக்க மட்டமான மனசோர்வை உதறிவிட்டு எழுந்திரு)
க்லைப்யம் மாஸ்ம கம – பேடித்தனத்தை (கோழைத்தனத்தை) அடையாதே (2ம் அத்தியாயம் ஸ்லோகம் 3)
மாம் அனுஸ்மர; யுத்த ச – என்னை நினை; போர் புரி
– சூத்திரம் போன்ற வார்த்தைகளால் மனித குலத்தை வழிநடத்திச் செல்லும் பேருண்மைகளை அவர் தருகிறார்.
பதினாறாவது அத்தியாயத்தில் ஒருவன் அடைய வேண்டிய நல்ல குணங்களை கிருஷ்ணர் பட்டியலிட்டுத் தருகிறார்.
பயமில்லாமை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக நிற்றல், தானம், புலன்களை அடக்குதல், வேள்வி, வேதமோதுதல், தவம், நேர்மை, அஹிம்ஸை, சத்தியம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், புறங்கூறாமை, பிராணிகள் மீது தயை, பேராசையின்மை, ,மென்மை, வெட்கம், சபலமில்லாமல் இருத்தல், தேஜஸ், பொறுமை, தைரியம், உடல் தூய்மை, வஞ்சகம் இல்லாமை, தற்பெருமையில்லாமை ஆகியவை தெய்வ குணங்கள்.
எவன் ஒருவன் இவற்றை நன்கு வளர்த்துக் கொள்கிறானோ அவனுக்கு எதிலும் வெற்றி தான்!
இது போன்ற நூற்றுக் கணக்கான அறிவுரைகளை கிருஷ்ணபிரான் மூலமாகப் பெற்று உத்வேகம் அடைகிறோம்.
அடுத்து சாந்தி பர்வம் மற்றும் அநுசாஸன பர்வத்தில் நூற்றுக் கணக்கான மோடிவேஷன் உரைகள் வருகின்றன.
நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். நல்லனவற்றை உடனே செயலில் செய்து முடி என்பன போன்ற சோம்பலை நீக்கும் உணர்வூக்க மொழிகளைச் சாந்தி பர்வத்தில் காண்கிறோம்.
பீஷ்ம பிதாமஹரிடம் தர்மர் தனக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டும் போது பீஷ்மர், விடாமுயற்சியே வெற்றி தரும் என்று உரைக்கிறார்.
“யுதிஷ்டிரா! எப்போதும் ஆண்மையுடன் முயற்சி உள்ளவனாக இரு. அரசர்களுக்கு அதுவன்றி தெய்வம் எந்தக் காரியத்தையும் சாதிக்க மாட்டாது. தெய்வமும் முயற்சியும் வண்டிக்கு இரு. சக்கரங்கள் போல அவையே எல்லாக் காரியங்களுக்கும் பொதுவான சாதனங்களாகும். ஆனால் இவற்றில் ஆண்மையையே மேலானதென்று நான் கருதுகிறேன்” என்பது பீஷ்மரின் வாக்கு. (சாந்தி பர்வம், 55வது அத்தியாயம்)
மொத்தத்தில் மஹாபாரதம் ஒரு மோடிவேஷன் பொக்கிஷம்.
ஊக்கமூட்டும் பொன்மொழிகளை மட்டும் தனித் தனித் தலைப்புகளில் எழுதி வைத்துக் கொண்டு அவற்றை அவ்வப்பொழுது படித்து ஊக்கம் பெறலாம்; முன்னேறலாம்!
**