கதாசரித் சாகரத்தில் உள்ள மோடிவேஷன் கருத்துக்கள்!(Post No.14,822)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,822

Date uploaded in London – 2 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

27-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

MOTIVATION

கதாசரித் சாகரத்தில் உள்ள மோடிவேஷன் கருத்துக்கள்!

ச. நாகராஜன்

உலகையே வியக்க  வைக்கும் கதைகள் ஒரு வித குறிக்கோளுடன் இந்தியாவில் சொல்லப்பட்டது போல உலகெங்கும் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை.

பைசாச மொழியில் எழுதப்பட்ட ப்ருஹத் கதா துரதிர்ஷ்டவசமாகத் தொலைந்து விட்டது. இதைப் படைத்தவர் குணாத்யர். பல லட்சம் ஸ்லோகங்களில் ஏராளமான கதைகளைக் கொண்ட இந்த நூல் தொலைந்து விட்டாலும் அதன் அடிப்படையில் ஐந்து கதாசரிதங்கள் படைக்கப்பட்டன.

சோமதேவரின் கதாசரித் சாகரம், க்ஷேமேந்திரர் படைத்த ப்ருஹத் கதா மஞ்சரி, நேபாளைச் சேர்ந்த பூதஸ்வாமியின் படைப்பான ப்ருஹத் கதா ஸ்லோக சங்க்ரஹா, ஜைனரான வாசுதேவரின் படைப்பு மற்றும் தமிழில் கொங்குவேளிர் படைத்த பெருங்கதை ஆகிய ஐந்து நூல்களே

ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை.

 இதில் சோமதேவரின் ப்ருஹத் கதாவில் ஏராளமான மோடிவேஷன் கருத்துக்கள் பளிச் பளிச்சென கதையை ஒட்டி பாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்கலாம்.

 இந்த நூல்களைப் பற்றிய அற்புதமான வரலாறுகள் ஒரு புறம் இருக்க, இங்கு சில மோடிவேஷன் உண்மைகளை மட்டும் எடுத்துக்காட்டாகக் காணலாம்.

ஒரு செயல் எப்படி இருக்க வேண்டும்?

 மிகுந்த தைரியத்துடன் செய்யப்படும் செயல்கள் உண்மையிலேயே பலனைத் தரும்; ஏனெனில் வளமான வாழ்க்கை என்பது தைரியத்தைப் பின் தொடர்ந்து வருவதேயாகும்.

 நல்லவர்களின் தொடர்பு!

நல்லவர்களுடனான தொடர்பு  நல்ல பழக்கவழக்கங்களையே ஏற்படுத்தும்.

 தீர்மானமே தேவை!

எந்த ஒரு செயலுமே தீர்மானத்தினால் அடையப்படுகிறது.

 நல்ல தீர்மானத்துடன் இருக்கும் ஒருவனின் உறுதியானது மலைகளின் வலிமையை விட அதிக வலிமை வாய்ந்தது; அது கல்பம் முடிவுக்கு வந்தாலும் கூட அசையாது.

 விவேகம் தேவை!

எதானாலும் சரி, அது விவேகத்தால் அடையப்படலாம்!

 முடியாத ஒன்றைக் கூட விவேகம் சாதித்து விடும்.

 பெரிய இடர் வந்த போதும் எவன் ஒருவனின் கூரிய ஆய்ந்து அறியும் அறிவு தோற்கவில்லையோ அவனால் எதையும் சாதிக்க முடியும்!

 உறுதியான தீர்மானத்துடன் இருக்கும் ஒருவன், தான் விரும்பியதை சாதித்து அடைந்தே தீருவான் – அவன் உயிருடன் இருக்கும் வரை!

 புத்திசாலி

கொள்கையின் அடிப்படையில் ஒரு புத்திசாலி அனைத்தையும் அறிவான். அவனைக் கலந்தாலோசிப்பது நல்ல விளைவைத் தரும்.

சூரியன் இல்லாமல் வானம் இருந்தென்ன? நீரில்லாமல் குளம் இருந்து என்ன பிரயோஜனம்? அறிவுரை இல்லாமல் ஒரு நிலப்பகுதி தான் ஏது? உண்மையில்லாமல் ஒரு பேச்சு தான் என்ன பிரயோஜனம்?

 நட்பும் பகையும்!

ரகசியமாக முணுமுணுப்பது நட்பைக் கொல்லும்.

அறிவுரையானது வாயாடித்தனத்தால் அழியும்.

நீரானது ஒரு பாலத்தையே உடைக்கும்.

கோழைகள் ஒரு சின்ன சப்தத்தினாலேயே படுதோல்வி அடைவர்.

 கோபத்தை வெல்!

எவன் ஒருவன் கோபத்தை வெல்கிறானோ அவன் இந்த உலகத்தையே வென்று விடுவான்!

 வதந்தியைக் கிளப்பாதே!

சகதியைத் தன் தலைக்கு மேலே வானத்தை நோக்கி எறிபவனின் தலை மேலேயே சகதி விழும்.

(வதந்தியைக் கிளப்புபவர்கள் அதனாலேயே பாதிக்கப்படுவர்!)

 இப்படி நூற்றுக் கணக்கில் நல்ல ஊக்கமூட்டும் செய்திகள் கடைப்பிடிப்பதற்கான முறையில் கதைகளுடன் சொல்லப்படுவது தான் கதாசரித் சாகரத்தின் சிறப்பு.

 ஒரு முறை கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் இதை முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டோம்.

உணர்வூக்கம் பெறுவோம்; உயர்வோம்!

***

Leave a comment

Leave a comment