ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்! (Post 14,876)- Part 11

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,876

Date uploaded in London – 17 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 11 

ச. நாகராஜன்

ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்! 

12

மதுரையில் எனது தந்தையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்களுள் ஒருவர் ஶ்ரீ லக்ஷ்மண ஐயர். இவர் ஒரு பெரிய வக்கீல். தந்தையின் நண்பர்; தூரத்து உறவினரும் கூட!

இவரால் எங்கள் குடும்பத்தினருக்கு இரண்டு சிறந்த அறிமுகம் ஏற்பட்டது.

 ஒன்று ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் தொடர்பு. இன்னொன்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தொடர்பு.

 ஒரு நாள் இவர் எங்கள் இல்லத்திற்கு வந்து ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இவர் மதுரையில் மிகவும் பிரசித்தமான செல்லத்தம்மன் கோவிலுக்கு எதிரில் இருந்த தெருவில் முதல் இல்லத்தில் குடியிருந்தார். 

அவர் எங்கள் வீட்டில் உள்ள கடம்ப மர பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு அதிசய சங்கத்தைப் பற்றி விளக்கினார்.

தேசபக்தி சங்கமான அதில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் கூடும் போது கூடுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் மைதானம் காலியாக இருக்கும். சரியாக குறிப்பிட்ட நிமிடத்தில், மணியில் கூடுவார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த நிமிடம் மைதானம் காலியாக இருக்கும். அவர்கள் உணவு அருந்தினால் கூட அங்கு அப்படி அருந்திய சுவடே தெரியாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும்-

 இப்படி ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட தேசபக்தர்கள் கொண்ட அதிசய சங்கத்தின் கிளை மதுரையில் இருக்கிறதா என்று கேட்டோம். அவர் பக்கத்தில் இருந்த மாபெரும் வக்கீலான தக்ஷிணாமூர்த்தி அவர்களைப் பார்க்கச் சொன்னார்.

 அண்ணாஜி என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவரைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டார். ஆர் எஸ் எஸ் சிம்மக்கல் கிளை பற்றிச் சொன்னார். எனது குடும்பமே ஆர் எஸ் எஸ் பணியில் ஈடுபட்டது. அவரும் என் தந்தையாரைச் சந்தித்தார். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பெரிய ஸ்வயம்சேவகர்களுடன் பழகும் நல் வாய்ப்பும் கிடைத்தது.

நிற்க, ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதருக்கு வருவோம். அவரது ராதா கல்யாண வைபவம் அற்புதமான ஒரு நிகழ்ச்சி.

 பல மணி நேரம் நீடிக்கும் அந்த நிகழ்ச்சியில் ராதையின் பிரேமை பற்றி நன்கு விளங்கிக்கொள்ளலாம். இதில் இடம் பெறும் அஷ்டபதி கீதங்கள் மிக மிக அருமையானவை. இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் நடனமும் உண்டு. குத்துவிளக்கைச் சுற்றிச் சுற்றி அனைவரும் நடனமாடுவது பார்க்கவே அழகாக இருக்கும்; பக்தியை வளர்க்கும். கிருஷ்ண பக்தி அதிகரிக்கும்.

 இதை எங்கள் வீட்டிலும் நடத்த ஆர்வம் கொண்டார் என் தந்தை.

ராதா கல்யாணம் நடந்தது; ஆனால் ஒரு நிகழ்ச்சியோடு இது முடியவில்லை.

இந்தியன்பேங்க் ஏஜண்டாக இருந்த சங்கர ஐயர் வீட்டில் ஒரு வாரமும் அடுத்த வாரம் எங்கள் வீட்டிலும் இப்படி மாறி மாறி பல வருடங்கள் இதை நடத்தி வந்தோம்.

 இரவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் தானப்ப முதலித் தெருவில் இருந்த சங்கர ஐயர் குடும்பத்தை வழி நடத்தி அவர்கள் வீட்டிற்குக் கொண்டு விடுவோம். அவர்கள் வீட்டில் நடக்கும் போது அவர்கள் எங்களை எங்கள் வீடு வரை வந்து கொண்டு விடுவார்கள் சில சமயம், கூட ஒரு தடவை இந்த நடைப் பயணம் தொடரும். இப்படி மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தால் பொழுது விடிந்து விடும் என்று நாங்கள் கிண்டலும் செய்வோம். சங்கர ஐயர், அவர் மனைவி பிடில் வாசிப்பதில் வல்ல சரஸ்வதி சங்கரன்,  அவர்களது  மகன் எம்.எஸ், வெங்கட்ராமன், அவர் மனைவி மாதங்கி உள்ளிட்டோர் இதில் ஆர்வத்துடன் பக்தி சிரத்தையுடனும் பங்கேற்பர்.

 மறக்க முடியாதா நாட்களாக அவை அமைந்தன.

Gopalakrishna Bhagavathar with Sankara Iyer in Madurai.

Mr V Santanam with Vibhuti on his forehead.

Mr M S VENKAT RAMAN WITH BHAGAVATHAR.

13

கூத்தனூர் ஶ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் நிகழ்த்திய உபந்யாசங்கள் 

கூத்தனூர் ஶ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு வேத விற்பன்னர். ரிக்வேதம் முழுவதையும் ஓதி காஞ்சி பெரியவாளிடம் பரிசைப் பெற்றவர். 7000 ரூபாய் பரிசு என்பது அந்தக் காலத்தில் மகத்தான பரிசாகும். அதைப் பெற்றவர். காஞ்சி பெரியவரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.

என் தந்தை மீது மாறாத அன்பும் மிக்க மரியாதையும் கொண்ட, அவர் மதுரைக்கு வர ஆரம்பித்தார். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட மாபெரும் இதிஹாஸ புராணங்களில் வல்லவரான அவர் சூட்சுமமான ரகசிய அர்த்தங்களை விளக்கிக் கூறுவார்.

பெரும்பாலும் கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெருவில் உள்ள ஹனுமார் கோவிலில் அவர் உபந்யாசங்கள் இடம் பெறுவது வழக்கம்.

தங்குவது எங்கள் இல்லத்தில் தான். ஏராளமான நல்ல பக்தர்கள் காலை நேரத்தில் இவரை எங்கள் இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அவரைப் பலரும் தங்கள் இல்லங்களுக்கு வருமாறு அழைப்பது வழக்கம்.

இவரது உபந்யாச உரைகள் மறுநாள் தினமணியில் தவறாது வெளியாகும்.திருச்சியில் பல காலம் அவர் வாழ்ந்து வந்தார். அவருடன் காலை வேளைகளில் பேசிக் கொண்டிருப்பது வழக்கமானது. காலையில் பூஜை பெரிதாக நடக்கும். பேசும் போது பல ரகசியார்த்தங்களையும் சுவையான சம்பவங்களையும் அவர் கூறுவார்.

எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

காஞ்சி பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான அவர் மடியில் காஞ்சி பெரியவர் தலையை வைத்துப் படுப்பது வழக்கம்.

ஒரு நாள் சாஸ்திரிகளிடம் அருகில் இருந்த அக்ஷதைக் கிண்ணத்திலிருந்து அரிசி மணிகளைக் “கொஞ்சம்” எடுத்துத் தருமாறு கூறினார். சாஸ்திரிகளும் சில அக்ஷதை மணிகளை எடுத்து அவரிடம் தந்தார். அதை ஜாக்கிரதையாக வாங்கிய பெரியவாள் அதில் எத்தனை இருக்கிறது என்று எண்ணச் சொன்னார்.

விநோதமான இந்த ஆணையால் சாஸ்திரிகளும் கையில் தரப்பட்ட அரிசி மணிகளை எண்ணி அந்த எண்ணிக்கையைப் பெரியவாளிடம் சொன்னார். “ஆஹா, நூறு வருகிறது” என்றாராம் பெரியவர்.

சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன அர்த்தமோ இதற்கு? என்று அவர் பெரியவாளைக் கேட்க அவர்,”இப்பொது எனக்கு ஆகும் வயதுடன் இந்த மணிகளைக் கூட்டினால் நூறு வருகிறது. நான் நூறு வயது இருப்பேன் போலும்” என்று பதில் அளித்தார்.

இதைச் சொல்லிய சாஸ்திரிகள், “எனக்கு ஒரே ஆனந்தம். பெரியவாளுக்கு ஆயுஸ் நூறு” என்றார்.

இதைக் கேட்டு நாங்கள் சாஸ்திரிகளிடம் கோபப்பட்டோம். இன்னும் கொஞ்சம் கூட அரிசி மணிகளைப் போட்டிருக்கக் கூடாதா நீங்கள்?’ என்று கோபத்துடன் நாங்கள் சொல்ல அவர் ஹோவென்று பெரிதாகச் சிரித்து, “எனக்கு எப்படித் தெரியும் அவரது சங்கல்பம்? தெரிந்திருந்தால் நான் நிறையப் போட்டிருக்க மாட்டேனா என்ன?” என்றார்.

பெரியவாள் நூறு வயது வரை வாழ்ந்தது உண்மை!

இப்படிப் பற்பல சம்பவங்களை அவர் கூறுவார்.

இந்த உபந்யாசத் தொடர்பு நெடுங்காலம் நீடித்தது. 

அடுத்து மதுரையில் இருந்த பல சத்சங்கங்களையும் அவற்றை என் தந்தையார் ஆதரித்ததையும் பார்க்கலாமா?

**

Leave a comment

Leave a comment