பிரம்மா ஹனுமானுக்கு வரம் அருளியது! (Post.14,891)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,891

Date uploaded in London – 22 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (32)

ராமாயணத்தில் வரங்கள் (32) பிரம்மா ஹனுமானுக்கு வரம் அருளியது!

ச. நாகராஜன்

கிஷ்கிந்தா காண்டத்தில்  அறுபத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது ‘‘ஸமுத்திரத்தைத் தாண்ட ஜாம்பவான் ஹனுமாரைத் தூண்டுவது’ என்ற ஸர்க்கமாகும்.

ஸமுத்திரத்தின் அருகில் வந்த வானர சேனை அதை எப்படித் தாண்டுவது என்று தங்களுக்குள் விவாதித்தனர். ஒவ்வொருவரும் தம்மால் தாண்டக் கூடிய தூரத்தைச் சொன்னார்கள். ஜாம்பவான் இதையெல்லாம் கேட்டார்.

பின்னர் தனியே உட்கார்ந்திருந்த ஹனுமானிடம் வந்தார். ஹனுமானின் வரலாற்றைத் ஹனுமானுக்குத் தெரிவிக்கிறார்.

இங்கு ஹனுமானின் பிறப்பைக் குறித்த வரலாறு நமக்குக் கிடைக்கிறது.

ஒரு சமயம் வாயு பகவான் அஞ்சனையின் அழகைக் கண்டு மயங்கி அவளைக் கட்டித் தழுவினான். அஞ்சனா தேவி இதனால் திகைத்தாள்.

ஆனால் வாயுவோ, “ இதனால் உன் கற்புக்கு எந்த பங்கமும் வரவில்லை. தர்மாதர்ம விசாரணையுடனேயே நான் வியாபித்தேன். ஆகையால் உனக்கு வீர்யவானான ஒரு புத்திரன் பிறப்பான்” என்றார்.

அஞ்சனா தேவி ஹனுமானைப் பெற்றாள். குழந்தையாக இருந்த போது, ஹனுமான் சூரியனைப் பழம் என்று நினைத்து வேகமாக ஆகாயத்தில் சென்றார். அப்போது இந்திரன் அவரது கன்னத்தில் வஜ்ராயுதத்தால் அடிக்க அவரது கன்னம் காயப்படுத்தப்பட்டது. ஆகவே அவர் மென்மையான கன்னத்தை உடையவர் என்ற பொருளில் ஹனுமான் என்று அழைக்கப்படலானார்.  


ஹனுமான் காயப்படுத்தப்பட்டதைக் கண்ட வாயு கோபம் கொண்டு காற்று வீசாமல் அசைவற்று இருந்து விட்டார்.  உடனே திக்பாலர்களும் தேவர்களும் அவரை சாந்தப் படுத்தினார்கள்.  அப்போது வாயு சாந்தமடைந்ததைக் கண்ட பிரம்மா ஹனுமானுக்கு யுத்தத்தில் எந்த ஆயுதத்தினாலும் மரணம் நேராது என்ற வரத்தை அருளினார்.

அதைக் கூறும் ஸ்லோகம் இது:

ப்ரஸாதிதே ச பவனே ப்ரஹ்மா வரம் ததௌ |

அஷசஸ்த்ரவத்யதாம் தாத சமரே சத்யவிக்ரம: ||

கிஷ்கிந்தா காண்டம், 66வது ஸர்க்கம் ஸ்லோக எண் 29

சத்யவிக்ரம – சத்தியமான பராக்ரமம் உள்ளவரே!

தாத – ஓ, அப்பனே!

பவனே – வாயு

ப்ரஸாதிதே – சாந்தமடைந்தபோது

ப்ரஹ்மா – பிரம்மா

துப்யம் – உமக்கு

சமரே – யுத்தத்தில்

அஷசஸ்த்ரவத்யதாம் ச – எந்த ஆயுதத்தாலும் மரணமில்லாமையை

வரம் – வரமாக

ததௌ – தந்தார்

இங்கு பிரம்மா ஹனுமானுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படாது என்ற வரத்தை அருளியதைக் காண்கிறோம்.

இப்படியாக ஜாம்பவான் ஹனுமானின் பலத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாக எடுத்துரைக்கிறார் இந்த ஸர்க்கத்தில்!

**

Leave a comment

Leave a comment