அழகிய அண்டார்டிகா மர்மம்! (Post.14,910)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,910

Date uploaded in London – 28 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

4-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

 அழகிய அண்டார்டிகா மர்மம்! 

ச. நாகராஜன் 

வானிலிருந்து பார்த்தால் அகண்ட பனி படர்ந்த பிரதேசம் போலத் தோன்றும். ஆனால் அண்டார்டிகாவின் கீழே புதைந்து கிடக்கும் மர்மம் அதிசயமானது! 

அண்டார்டிகாவின் கீழ் பல் உயிர்த்தொகுதியும், ஆறுகளும், ஏரிகளும், மலைகளும், பள்ளத்தாக்குகளும்,தொன்றுதொட்டு இருக்கும் பாக்டீரியாக்களும், முன்னொரு காலத்தில் இருந்த சுற்றுப்புறச் சூழலின் தாக்கத்தினால் ஏற்பட்ட அமைப்புளும் உள்ளன; அவற்றைக் கண்டு பிரமிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 அண்டார்டிகாவின் 90 சதவிகிதப் பரப்பு நல்ல கனமான ஐஸினால் (பனிக்கட்டியினால்) உருவானது. அதாவது 1.3 மைல் ஆழமான ஐஸைக் கொண்டது!

இப்படி ஆழ்ந்த ஐஸானது 340 லட்சம் வருடங்கள் இருந்து கொண்டிருக்கிறது!

இருந்தாலும் விஞ்ஞானிகள் இந்தப் பரப்பின் மேலே கொஞ்சம் தான் சுரண்டிப் பார்த்துள்ளனர்!

 ஜெர்மனியில் உள்ள ஆல்ஃப்ரட் வெகெனர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஜோஹன் க்ளாகஸ் (JOHAN KLAGES – SEDIMENTOLOGIST) என்னும் படிம இயல் நிபுணர் அண்டார்டிகாவின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றி ஆய்வு நடத்துபவராவார்.

தனது ஆய்வில் முதன்முதலாக அவர் அம்பர் படிமத்தை அண்டார்டிகா பகுதியில் கண்டுபிடித்துள்ளார். இது 900 லட்சம் வருடங்களுக்கு முன்னர் மழைக்காடுகளினால் உருவான ஒன்றாகும்.

சுமார் 400 கடலடி ஏரிகளுக்கு அண்டார்டிகா தாயகம் ஆகும் என்பது இவரது கணிப்பு. மிகப் பெரும் ஏரியான வோஸ்டாக் ஏரி ரஷியாவின் வோஸ்டாக் பகுதியில் இரண்டரை மைல் ஆழத்திற்கு அடியில் உள்ளது!

“அங்கு என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்டால், ‘ஐஸின் மிக மிக அதிகமான அழுத்தம் காரணமாக உலகில் வேறெங்கும் காண முடியாத மைக்ரோப்ஸ் இருக்கலாம்’ என்கிறார் அவர்.

“சிக்கலான அமைப்பு உடைய நதிகள் அந்த ஏரியில் நீரைக் கொண்டு வந்து கொட்டுகின்றன” என்று கனடாவில் உள்ள வாடர்லூ பல்கலைக் கழக ஐஸ் இயல் நிபுணரான கிறிஸ்டைன் டோ (CHRISTINE DOW) கூறுகிறார்.

 “இதில் அதிசயம் என்னவென்றால் அங்கு புவி ஈர்ப்பு விசையெல்லாம் கிடையாது. ஆகவே நதி நீரானது கீழிருந்து மேலே பாய்வதைக் காணலாம். இதற்கு மேலாக இரண்டரை மைல் உயரத்திற்கு ஐஸ் தான்” என்கிறார் அவர். 

“ஆனால் அங்கு பெரும்பகுதியானது வெறும் பாறைகள் தான். கிறிஸ்டலைன் அடிப்பகுதி மற்றும், கிறிஸ்டலைன் ராக் தான்” என்கிறார் ஜோஹன் க்ளாகஸ் 

இந்த ஆராய்ச்சி எதற்காக என்று கேட்டால் அதற்கும் அந்த நிபுணர்கள் பதிலைத் தருகின்றனர். இவ்வளவு பனிக்கட்டிகளும் உருகி விட்டால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க இந்த ஆய்வு உதவும் என்கின்றனர் அவர்கள்.

 “இந்தப் பகுதி முழுவதும் ஐஸ் கட்டியினால் நிரம்பிவிட்டால் இந்தப் பகுதியே தனது நிலையான தன்மையை இழக்கும்; பனிப்பாறைகள் உடைய ஆரம்பிக்கும். அப்போது கடல் மட்டம் வெகுவாக உயரும்.”

என்பது நிபுணர்களின் கணிப்பு! 

கடல் மட்டம் உயரும் போது தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கும் என்பதால் அப்பகுதியில் உள்ளவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அல்லவா? 

“அண்டார்டிகா ஒரு நிலையற்ற பகுதி. மிக அழகிய பகுதி. பெரிய பரப்புள்ள பகுதி. மிக மிக மர்மமானது – அபாயகரமானதும் கூட” – இதுவே அண்டார்டிகா ஆராய்ச்சியின் முடிவு!

***

Leave a comment

Leave a comment