
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,954
Date uploaded in London – —8 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-9-25 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஐஸ்லாண்டின் மர்மக் குள்ளர்கள் – ஹுல்டுக்கள்!
ச. நாகராஜன்
பூமியில் மனிதர்களைத் தவிர வேற்று உலகவாசிகளும் வசிக்கிறார்களா அல்லது மனித ஆற்றலையும் விஞ்சிய சூப்பர் ஆற்றலுடன் மறைந்து வாழும் இனமும் உள்ளதா?
இந்தக் கேள்விக்கு விசித்திரமான விடை கிடைத்தது ஐஸ்லாண்டில்.
ஐஸ்லாண்ட் என்பது ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் அமைந்துள்ள எரிமலைப் பகுதி நிறைந்துள்ள குட்டி நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 39817 சதுரமைல்கள் . மக்கள் ஜனத்தொகை 3,91,810. இங்குள்ள மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்.
இங்கு வாழ்கின்ற பலரும் பல மர்மமான குள்ளர்களைக் கண்டதாக அடிக்கடி கூறி வந்தனர். இதைப் பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை.

அகுரேய்ரி என்பது ஐஸ்லாண்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும்.
அங்குள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தின் மேனேஜராகப் பணி புரிந்த ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் என்பவர், “பல நேர்மையான மனிதர்கள் கூட அந்தக் குள்ள மனிதர்களைத் தாங்களே நேரில் காணும் வரை அதை நம்பவில்லை” என்று கூறினார்.
அந்த மனிதர்கள் தாங்கள் வாழும் பகுதியை மிகவும் நேசிப்பவர்கள். தங்கள் “நாட்டை” வேறு ஒருவரும் ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருப்பவர்கள். அப்படி யாரேனும் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் அதை ‘அவர்கள் வழியில்’ எதிர்ப்பார்கள்!
1962ம் வருடம் அகுரேய்ரியி,ல் ஒரு புதிய துறைமுகம் கட்டும் பணி ஆரம்பமாயிற்று.
வந்தது பல்வேறு விதமான பிரச்சினைகள்.
அங்கு துறைமுகம் அமைப்பதற்காக பாறைகளை வெடிபொருள்களை வைத்து உடைக்கப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும்படியாக பாறைகளை உடைக்கவே முடியவில்லை. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெடிபொருள் சாதனம் இயங்கவே இயங்காது. அத்தோடு அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் வெடிக்காயங்களும் பல்வேறு வியாதிகளும் வர ஆரம்பித்தன திடீர் திடீர் என்று நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் பயந்தே போனார்கள்.
இனி இங்கு தங்களால் வேலை பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் வந்த போது ஓலாஃபுர் பால்டர்ஸன் என்ற மனிதர் அவர்களிடம் வந்து இந்த பிரச்சினைக்குத் தான் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.
இதெல்லாம் மர்மக்குள்ளர்கள் தங்கள் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் செய்யும் வேலை என்ற பால்டர்ஸன் அவர்களுடன் தான் பேசுவதாகக் கூறினார்
மத்தியஸ்தம் பேசி விஷயத்தைச் சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அகுரேய்ரியின் மாஜிஸ்ட்ரேட்டின் அனுமதியைக் கோரினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் அனுமதியை வழங்கினார்.
என்ன ஆச்சரியம், அதற்குப் பின்னர் விஷயங்கள் சுமுகமாக அரங்கேறின.
மக்கள் ஒருவாறாக மர்மக் குள்ளர்கள் இருப்பதை நம்ப ஆரம்பித்தனர்.
1984ல் மீண்டும் ஒரு பிரச்சினை தோன்றியது.
இந்த முறை ஐஸ்லாண்டின் சாலை அமைக்கும் பிரிவு அகுரேய்ரி அருகே ஒரு புதிய சாலையை அமைக்க ஆரம்பித்தது. வந்தது பிரச்சினை.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தன. எக்ஸ்கவேட்டர்கள் படார் படாரென திடீரென்று உடைந்தன. அனைவரும் பயந்து போனார்கள்.
ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் கூறினார் : “விஞ்ஞானம் விளக்க முடியாத விஷயங்கள் ஏராளம் உலகில் உள்ளன”.
தோர் மக்னூஸன் என்பவர், “இப்படி சிலர் இருப்பதாகச் சொல்பவர்கள் உடனடியாகத் தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” என்று நக்கலாகக் கூறினார்.
ஆனால் ஐஸ்லாண்ட் மக்கள் இவர்களை ஹுல்டு மக்கள் (HULDUFOLK) என்று இனம் கண்டு கூறுகின்றனர் இவர்களின் மேல் உதடிற்கு மேலே ஒரு பிளவு இருக்கும். எப்போதும் சாம்பல் நிற ஆடைகளையே உடுத்தும் இவர்கள் கறுத்த முடியை உடையவர்கள். மறைந்து பிறர் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்பவர்கள். அவர்கள் நினைத்தால் தான் அவர்கள் உருவத்தைக் காண முடியும்.
ஐஸ்லாண்டில் நான்கு தேசீய விடுமுறைகள் இவர்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. புத்தாண்டு தினம், ஜனவரி 6ம் தேதி (இது 13ம் நாள் என்று அழைக்கப்படுகிறது) மிட்ஸம்மர் இரவு, கிறிஸ்துமஸ் இரவு ஆகியவையே அந்த நான்கு விடுமுறை தினங்கள். கிறிஸ்துமஸிற்கு முன்பாக அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்து சிறிது உணவை இந்த ஹுல்டுகளுக்காக ஐஸ்லாண்ட் மக்கள் வைக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று இவர்கள் புது இடங்களுக்குப் போய் விடுவார்களாம். அவர்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஏராளமான மெழுகுவர்த்திகளை ஐஸ்லாண்ட் மக்கள் ஏற்றி வைப்பது இன்றும் நடைபெறுகிறது! மிட்ஸம்மர் தினமான ஜூன் 24ம் தேதி அன்று சாலை சந்திப்புகளில் உட்காரக் கூடாது என்பது ஐஸ்லாண்ட் மக்களின் நம்பிக்கை. உட்கார்ந்தால் அவர்களை ஹுல்டுக்கள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்கின்றனர் அவர்கள்.
2013ம் ஆண்டில் அல்ஃடேனியஸிலிருந்து ரெய்க்ஜவிக் என்ற இடத்திற்கு ஒரு சாலை போடுவதாக ஐஸ்லாண்டில் ஒரு திட்டம் எழுந்த போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் அது அங்கு பாறைகளில் மறைந்து வாழும் ஹூல்டுக்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்பது தான்!
ஹுல்டுக்களைப் பற்றிய ஏராளமான நாவல்கள் வந்து விட்டன. யூ டியூபிலும் பல சுவையான விவரங்களைப் பார்க்கலாம்!
ஆக, இன்றும் விஞ்ஞானம் விளக்க முடியாத மர்ம இனம் இருப்பதை ஐஸ்லாண்ட் மக்கள் நம்புகின்றனர்.
ஏனெனில் அனுபவிப்பது அவர்கள் அல்லவா!
**