புத்த பெருமானின் கடைசி உபதேசம் என்ன தெரியுமா? (Post.14,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,962

Date uploaded in London – 10 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 9-6-25 அன்று பிரசுரமான கட்டுரை!

புத்த பெருமானின் கடைசி உபதேசம் என்ன தெரியுமா 

ச. நாகராஜன் 

புத்தரின் இறுதித் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. 

அதை அனைவரும் அறிந்து கொண்டனர். அவர்களின் வருத்தம் சொல்லி மாளாது. 

பலர் கண்ணீர் விட்டுக் கலங்கினர். பலர் புலம்பலாயினர்.

அனைவரையும் பார்த்தவாறே அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். 

புத்தர் ஒரு போதும் பெரிய கூட்டத்தையோ அல்லது சிஷ்யர்களின் ஆரவாரமான குழுவையோ விரும்பியதில்லை. 

“தன் சொல்லைப் பின்பற்ற வேண்டும்” என்பதே அவரது போதனை.

தனக்கு பெரிய சிலை அமைத்து மரியாதை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதே இல்லை. 

இப்படி அனைவரும் புலம்பித் தவிக்கும் போது தம்மாராமா என்ற ஒரு பிக்ஷு மட்டும் வருத்தப்படாமல் புலம்பாமல் இருந்தார்.

அவர் எண்ணினார்: “ இப்படிப் புலம்பித் தவிப்பதற்குப் பதிலாக புத்தபிரான் சொன்னதை அப்படியே கடைப்பிடித்து ஒரு உயர்நிலையை அவர் நிர்வாண நிலையை அடைவதற்கு முன் அடைய வேண்டும்.” 

இந்த உறுதியுடன் அவர் ஒரு தனி இடத்தில் ஒதுங்கினார். தியானத்தில் ஆழ்ந்த அவர் ஒரு உயரிய நிலையையும் சுத்தமான மனதையும் அடைந்தார். 

ஆனால் இதைப் பார்த்த மற்ற பிக்ஷுக்களுக்கும் பெரும் கோபம் வந்தது.

‘எல்லோரும் இப்படி வருந்தித் தவிக்கிறோம். தம்மாராமன் மட்டும் அழுது புலம்பாமல் ஒரு தனி இடத்தில் இருக்கிறாரே. இது நியாயமா?’ என்று எண்ணிய அவர்கள் அவரைக் கட்டி இழுத்து புத்தரிடம் கொண்டு சென்றனர்.

 புத்தர் இப்படி மற்ற பிக்ஷுக்கள் ஒருவரைக் கட்டி இழுத்து வருவதைப் பார்த்து, “யார் இவர்? எதற்காக இவரைக் கட்டி இழுத்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

 “ஐயனே! அனைவரும் வருத்தப்படும் வேளையில் இவர் ஒரு வித சோகமும் இன்றி தனி இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் தான் இவரை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.

 புத்தர் அவரைப் பார்த்து, “இவர்கள் சொல்வது உண்மையா என்று கேட்டார்.

 “ஆமாம், ஐயனே! உண்மை தான்! நான் நீங்கள் சொன்னபடி ஒரு தனி இடத்தில் இருந்து தியானித்து நீங்கள் மறைவதற்கு முன் நீங்கள் சொன்ன உயரிய நிலையை அடைய ஆசைப்பட்டேன். அதற்காக அப்படி தனி இடத்தில் இருந்து தியானிக்க ஆரம்பித்தேன். நான் இவர்களைப் போல உரக்க அழவில்லை.” என்றார் அவர்.

 அவரைப் பார்த்த புத்தர் அவர் பரிபக்குவ நிலையை அடைந்ததை உடனே உணர்ந்து கொண்டார். தன் இருகைகளையும் கூப்பி, “சாது! சாது! சாது!” என்றார்.

 அழுது கொண்டிருக்கும் மற்ற பிக்ஷுக்களைப் பார்த்துக் கூறலானார்:

“பிக்ஷுக்களே! யாரெல்லாம் அழுது புலம்புகிறார்களோ அவர்கள் எல்லம் என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தமில்லை. என் ஒரு வார்த்தையை சிரமேற்கொண்டு அதை அப்படியே கடைப்பிடித்திருக்கிறாரே தம்மாராமன் இவரே எனக்குப் பிடித்தமானவர். யார் என் சொல்படி நடக்கிறார்களோ அவர்களே என்னை நிஜமாக அறிந்தவர்கள்”

தன் இறுதி நிலையில் இருந்த புத்தர் அருளிய கடைசி உபதேசம் இதுவே!

 பின்னால் வந்த பெரும் புத்தமத ஆசாரியர்கள் இந்த சம்பவத்தைக் கூறி, “ஒரு இடத்திற்கு வழி கேட்ட ஒருவர், வழியைச் சொன்னவரை வணங்கிப் போற்றி அதே இடத்தில் நிற்பதால் என்ன பிரயோஜனம்? வழிகாட்டியவர் கூறியபடி சென்று இலக்கை அடைவதல்லவா உத்தமம்” என்று விளக்கினர்.

சங்கம் சரணம் கச்சாமி என்பதன் உண்மையான அர்த்தம் :-

“வழிகாட்டும் நெறிமுறைகளை சங்கத்திடமிருந்து நான் கற்று அதைக் கடைப்பிடித்து சங்கத்தின் வழியில் நிற்பேன்” என்பதே ஆகும்.

சங்கம் சரணம் கச்சாமி! 

***

Leave a comment

Leave a comment