
Post No. 14,968
Date uploaded in London – —11 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
10-6-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
MOTIVATION
ஸ்வாமி விவேகானந்தரின் ஊக்கமூட்டும் வீர மொழிகள்!
ச. நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தரின் ஊக்கமூட்டும் உரைகளிலிருந்து தொகுக்கப்பட்டவை.
அறிவை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை வேண்டும்!
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும் போதாது. அது அறிவில் வேரூன்றி இருக்கவும் வேண்டும். காணும் எல்லாவற்றையும் ஒருவன் நம்ப வேண்டும் என்று சொல்வது அவனைப் பைத்தியமாக்கி விடும்.

எண்ணத்தின் ஆற்றலும் அன்பின் சக்தியும் வேண்டும்!
உங்கள் எண்ணத்தின் ஆற்றலையும் அன்பின் சக்தியையும் ஊக்கப்படுத்துங்கள்.
உங்கள் தாமரையை மலர விடுங்கள். தேனீக்கள் தாமே வந்து சேரும்.
முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். பிறகு கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்
உலகம் கோழைகளுக்காக அல்ல!
இந்த உலகம் கோழைகளுக்காக அல்ல. தப்பியோட முயற்சிக்காதே.
செயல் வெறி என்னும் சுழலில் நின்று, மையத்தைச் சேர். மையத்தை அடைந்து விட்டால், உலகில் உன்னை எதுவும் அசைக்க முடியாது.
நல்ல இதயம், சிந்திக்க மூளை, வேலை செய்யக் கரங்கள்!
ஆற்றல் மிக்க சிலர் இந்த உலகத்தையே ஆட்டி வைக்க முடியும். நமக்கு வேண்டியது உணர ஓர் இதயம், சிந்திக்க ஒரு மூளை., வேலை செய்வதற்கு வலிய கைகள். வேலை செய்வதற்குத் தகுந்த ஒரு கருவியாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள்.
மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். 1) உணர்வதற்கான இதயம் 2) சிந்தனைத் திறனுள்ள மூளை 3) வேலை செய்யக் கூடிய கைகள்
சேவை செய்பவனே மனிதன்!
மற்றவனுக்காக வாழ்பவனே மனிதன். மற்ற அனைவரும் உயிருடன் இருந்தாலும் அவர்கள் நடைப்பிணங்களே!
அடுத்தவர் தவறைக் கவனிக்காதே!
பிறருடைய குற்றங்களைக் கவனிக்காதே. ஒரு மனிதனின் தவறுகளைக் கொண்டு அவனை எடை போட முடியாது. கீழே விழுந்து அழுகிப் போன ஆப்பிள்களை வைத்து நாம் ஒரு ஆப்பிள் மரத்தை நிர்ணயித்தால், அந்த முடிவு சரியானதாக இருக்காது. அது போலவே ஒரு மனிதனுடைய தவறுகள் அவனுடைய குணத்தைக் காட்டாது.
உங்களது நல்ல கருத்தில் ஊன்றி நில்லுங்கள்!
இதோ ஓர் உபதேசம்: எல்லா மலர்களிலிருந்தும் தேனை அருந்துங்கள். மரியாதையுடன் எல்லோரிடமும் பழகுங்கள். எல்லோருக்கும் ‘ஆம்,ஆம்’ என்று தலையாட்டுங்கள் ஆனால் உங்கள் சொந்த இடத்திலிருந்து விலகாதீர்கள்.
இப்படி சொந்த இடத்திலிருந்து அதாவது சொந்தக் கருத்திலிருந்து விலகாமல் இருப்பதே நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது.
இறைவனை அடைய இசை!
இறைவனைத் தொடர்ந்து ஞாபகம் வைத்துக் கொள்ளும் பயிற்சிக்கு மிகச் சிறந்த வகையில் உதவியாக இருப்பது இசை என்று சொல்லலாம்.
கடமையைச் செய்! ஞான ஒளி வரும்!!
விதியின் காரணமாகத் தனக்குக் கிடைத்துள்ள சிறிய ஒன்றிற்காக முணுமுணுப்பவன் எதற்குமே முணுமுணுக்கத் தான் செய்வான். எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டு அவனது வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கும். அவன் தொடும் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடியும். யார் தன் பங்கிற்கு வந்த கடமையைத் தயங்காமல் முனைந்து செய்கிறானோ, அவனுக்கு நிச்சயம் ஞான ஒளி உண்டாகும். சிறந்த கடமைகள் தாமாகவே அவனைத் தேடி வரும்.
***