Post No. 14,990
Date uploaded in London – —16 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-9-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை
ஶ்ரீ சுரைக்காய் சித்தர்!
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, , திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
பாரத தேசத்தில் ஆயிரக் கணக்கான சித்தர்கள் அருள் மழை பொழிந்ததை அனைவரும் அறிவர். இன்றும் ஆங்காங்கே ஏராளமான சித்தர்கள் இருந்து வருகின்றனர்; அருள் பாலிக்கின்றனர்.
இன்று நாம் சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த அதிசய சித்தரான ஶ்ரீ சுரைக்காய் சித்தரின் ஜீவிய சரித்திரத்தைப் பார்ப்போம்.
ஶ்ரீ சுரைக்காய் சித்தர் எங்கு எப்போது பிறந்தார் என்பதைப் பற்றிய விவரங்கள் நம்மிடையே இல்லை.
அவரது தோற்றம் முதியவரின் தோற்றம். சடையுள்ள தலை; அதில் தலைப்பாகை ஒன்று சுற்றி இருக்கும்.ஒளிரும் கண்கள். நீண்ட தாடி. சுரைக்குடுக்கைகள் கட்டிய காவடி தாங்கிய புயம். முதுகில் சில சுரைக்காய்கள். பழைய துணி மூட்டை. கூடவே இரு வினைச் சின்னங்களாக வரும் இரண்டு நாய்கள் எப்போதும் தொடர்ந்து வரும்.
சித்தூர் ஜில்லாவில் புத்தூர் என்று ஒரு கிராமம். அங்கு பழமையான சத்திரம் ஒன்று உண்டு. அது 1770ம் ஆண்டு கட்டப்பட்டது. அதில் கணக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட கணக்கு ஏட்டில் சுரைக்காய் ஸ்வாமிகளின் ஆசியைப் பெற மங்கள திரவியங்கள் வாங்கிய வகையில் செலவழித்தது என்று கணக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு வயது 70 என்றும் அறியப்படுகிறது.
1902ம் ஆண்டு அவர் மகா சமாதி அடைந்தார். ஆகவே அவருக்கு வயது 202 என்று அறியப்படுகிறது.
அவர் சித்தூர் ஜில்லாவில் புத்தூர் தாலுகாவில் இருந்த நாராயணவனத்தில் வசித்து வந்தார். இது சென்னை-பம்பாய் இருப்புப் பாதையில் அரக்கோணம் ரேணிகுண்டாவிற்கு இடையில் உள்ளது புத்தூர். அங்கிருந்து கிழக்கே மூன்று மைல் தூரத்தில் உள்ளது நாராயண வனம். இதைச் சுற்றி திருப்பதி. காளஹஸ்தி நாகலாபுரம் உள்ளிட்ட பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நாராயணனுக்கு ப்ரீதியான வனம் என்பதால் இது நாராயணவனம் என்ற பெயரைப் பெற்றது. இப்போது நாராயணவரம் என்று அழைக்கப்படுகிறது. நாராயணவனத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்த அவர்
ஆங்காங்கே சுற்றித் திரிந்தார்.
அவர் பலரது நோய்களை குணப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, குஷ்ட வியாதியினால் அவதிப்பட்ட பலரது குஷ்டத்தை அவர் போக்கி இருக்கிறார்.
இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு. ஒரு நாள் அவரது சீடரான செங்கல்வராய முதலியாருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, சுரைக்காய் ஸ்வாமிகள் “ஐயோ, என் அருமைப் பையன் போய் விட்டானே!” என்று அலறிக் கண்ணீர் வடித்தார். பிறகு தான் தெரிந்தது அவரது அருமை சிஷ்யரான சட்டிப் பரதேசியார் என்பவர் அதே கணத்தில் 70 மைல்களுக்கு அப்பால் இருந்த இடத்தில் சமாதி அடைந்தார் என்பது.
முக்காலத்தையும் உணர்ந்த ஞானியாக அவர் விளங்கினார்.
ஒருநாள் நடுப்பகலில் சித்தர் தான் உட்கார்ந்த இடத்தில் இருப்புக் கொள்ளாமல் எழுந்து நின்றார். அருகிலிருந்தோரை அழைத்து, “வாருங்கள், ஒரு ஏழைக்கு அன்னம் அளித்து விட்டு வரலாம்” என்றார். அனைவரும் நல்ல வெயிலில் சித்தருடன் கூடவே சென்றனர். சேரிப்பக்கம் சென்ற அவர் ஒரு நோய்வாய்ப்பட்டிருந்த நாய்க்குத் தன் அன்னத்தை அளித்தார்.
பிறகு அந்த நாயானது பூர்வ ஜென்மத்தில் அன்பு மனம்கொண்ட ஒரு பெண் என்றும், தமக்கு காய் கனி வர்க்கங்களை வழங்கி உதவியவள் அவள் என்றும் தெரிவித்தார். தீவினைப் பயனாக இப்படி நாய் பிறவியை அடைந்தாள் என்றும் அவர் கூறினார். ஆக காலத்தை ஊடுருவி அனைத்தையும் பார்க்க வல்லவர் அவர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.
1902ம் ஆண்டு மகா சமாதி அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் சென்னையிலிருந்து நாராயணவனம் கிளம்பத் தயாரானார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பம்பாய் மெயில் கிளம்பத் தயாராக இருந்தது. சித்தர் தனது கைத்தடியை பக்கத்தில் வைக்காமல் மேல் நோக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். மணி ஆறு ஆயிற்று. வண்டி புறப்பட மணி அடிக்கப்பட்டது. கார்டு பச்சைக் கொடியைக் காட்டினார். ஆனால் ரயில் கிளம்பவில்லை. எஞ்ஜின் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் ரயில் கிளம்பவில்லை. மெயில் என்பதால் தாமதம் கூடாது என்று இன்னொரு எஞ்ஜின் இணைக்கப்பட்டது. என்றாலும் வண்டி நகரவில்லை. பின்னர் சித்தர் தனது கட்க முத்திரை ரீதியில் பிடித்திருந்த தடியை கீழே இறக்கித் தன் பக்கத்தில் வழக்கம் போல வைத்தார். உடனே ரயில் கிளம்பியது.
இதைப் பார்த்த அவரது சீடர் வேணுகோபால் நாயுடு என்பவர் உள்ளிட்டவர்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல அவர்கள் தங்களால் அவரை தரிசிக்க முடியவில்லையே என்று வருந்தினர். முத்திரைகளில் பல்வேறு முத்திரைகள் உண்டு. சின் முத்திரை, சங்கு முத்திரை, சூரிய முத்திரை, யோனி முத்திரை, கோ முத்திரை, கட்க முத்திரை என பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி உண்டு. கட்க முத்திரையானது கையை வாள் போல் ஏந்தி நிற்கும் பாணி. அதன் சக்தியை அன்று ரயில் நிலையத்தில் அனைவரும் உணர்ந்தனர்.
தியாஸபிகல் சொஸைடியை நிறுவிய மேடம் H.P. ப்ளாவட்ஸ்கியும் கர்னல் H.S. ஆல்காட்டும் நகரி பகுதிக்கு வந்த போது சுரைக்காய் சித்தரை தரிசிக்க வந்தனர். பழம் முதலிய காணிக்கை பொருள்களை எடுத்து வந்து அவரிடம் தந்து ஆசி பெற்றனர். தங்களது சில சந்தேகங்களுக்கு அவரிடம் விளக்கம் பெற்றனர்.
“நான் என்ன சொல்லட்டும். சமயத் துறையில் சில கருப்புக் காக்காய்கள் வேலை செய்து கொண்டிருந்தன. இப்போது வெள்ளைக் காக்காய்கள் அவற்றுடன் ஒத்துழைக்க ஆரம்பித்து விட்டன என்றார் சுரைக்காய் சித்தர்.
அவருடன் கூடவே வரும் இரு நாய்களும் அவரை விட்டுப் பிரியும் காலமும் வந்தது. அவை நாய் ரூபம் தரித்த சஞ்சித கர்மத் தொடர்புகள்.
ஒரு ஊரில் சித்தர் தங்கி இருந்த போது அங்குள்ள அன்பர் இவரை வரவேற்று உபசிரித்தார். அவருக்கு இலை போட்டுப் பரிமாற ஆரம்பித்தனர். கூடவே வந்த நாய்கள் என்றுமில்லாத பழக்கமாய் இலையிலிருந்த அன்னத்தின் மீது வாயை வைத்தன. உடனே சித்தர் அவற்றை, “சீ, போ” என்றார். அவை உடனே ஓடி மறைந்தன. தொடர்ந்து வந்து கொண்டிருந்த நாய்களை அன்றிலிருந்து காணோம்.
இவரது சிஷ்யர்களாக அமைந்த மூத்த பரதேசி, சட்டிப் பரதேசியார், குமாரகுப்பம் ஸ்வாமிகள், பரதேசி சித்தர், உள்ளிட்ட பலரும் அபூர்வ சித்திகளைப் பெற்றனர். அதன் மூலம் மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்தனர்.
வருடா வருடம் நாராயணவனத்தில் சுரைக்காய் சித்தரின் குருபூஜை நடைபெறுகிறது. ஏராளமானோர் திரளாக வந்து இதில் கலந்து கொண்டு அவர் அருளைப் பெறுகின்றனர்.
சுரைக்காய் சித்தரைப் போற்றி வணங்குவோம் நலமுற வாழ்வோம் என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
—Subham–