Post No. 14,993
Date uploaded in London – —17 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-9-25 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!
விண்வெளிப் போர்…..!
ச. நாகராஜன்
இனி பூமியில் போர் இல்லை, விண்வெளியில் தான் போர் என்று அறிஞர்களிலிருந்து சாமானியர்கள் வரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்!
ஆனால் உண்மை என்னவெனில் விண்வெளியில் இப்போதே போர் துவங்கி விட்டது!
விண்வெளி ஆதிக்கத்தில் யார் முதலிடம் வகிப்பது என்பதில் ஆரம்பித்தது போட்டி.
அமெரிக்காவை இதில் எதிர்க்க ரஷியாவும், சீனாவும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளன.
2007ல் சீனா 850 அடி உயரத்தில் பறந்த செயலற்றுப்போன காலநிலையைக் கண்காணிக்கும் ஒரு சாடலைட்டை அழித்தது. இதையடுத்து அதிக உயரத்தில் பறக்கும் விண்கலங்களை அழிக்கும் தனது ஆற்றலை அது மேம்படுத்தியுள்ளது.
ரஷியா சும்மா இருக்குமா,என்ன? லோ எர்த் ஆர்பிட் என்னும் பூமியின் கீழ் சுற்றுப் பாதையில் பறக்கும் விண்கலங்களை குறி வைத்து அடித்து அழிக்கும் தன் திறனை நுடோல் மிசைல் சிஸ்டம் என்று வடிவமைத்து விண்வெளிப் போர்த்திறனைக் காட்டியுள்ளது.
இந்த இரண்டு தேசங்களின் ஒரே நோக்கம், அமெரிக்காவை விடத் தாங்கள் போர்த்திறனில் முன்னணியில் இருக்கிறோம் என்பதை உலகிற்குக் காட்டுவது தான்!
ASAT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆன்டி சாடலைட் வெபன் அமைப்பு விண்வெளியில் யார் அதிக ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.
அமைதியாக நடக்கும் இந்த விண்வெளி யுத்தத்தில் தேவையான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இப்போது அதிகமாக இல்லை.
அமெரிக்க அதிகாரிகள் கீழ் சுற்றுப் பாதையில் தங்களது விண்வெளி சாதன அமைப்பானது பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டு விட்டனர்.
சாடலைட்டுகளை அழிக்கும் இந்தப் போர் தாக்குதல் விண்வெளி முழுவதும் விண்வெளிக் குப்பையை உருவாக்கும். குப்பைகள் ஒன்றொடு ஒன்று மோதினால் நினைக்கவே பயப்பட வைக்கும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்.
எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் 2007 ஜனவரியில் சீனாவின் ஒரு சாடலைட் வெடிக்க 40000 விண்வெளிக் குப்பைத் துகள்கள் உருவாயின. ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இந்தத் துகள்கள் இருந்தன.
இப்படி விண்வெளியில் போர் உருவானால் அங்கு மனிதர்கள் பயணப்படுவது பாதிக்கப்படும். வணிக நோக்கில் சாடலைட்டுகள் செல்வது என்பது முடியாது.
இப்போதிருக்கும் கீழ்சுற்றுப்பாதையை விட மேலே இன்னும் அதிகமாகப் பயணப்படுவது என்பதும் கஷ்டமாகி விடும்.
1957ம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதில் விண்வெளி நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.
இப்போது இந்த ஒப்பந்தம் மீறப்படுமானால் அதற்கான நஷ்ட ஈட்டை போரில் ஈடுபடும் நாடுகள் தர வேண்டியிருக்கும்.
இப்போது பூமியில் நமக்கு தகவலுக்கு உதவும் சாதனமாக இருப்பவை சாடலைட்டுகளே.
மொபைல் போன், ஜிபிஎஸ் அமைப்பு,, தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இவை இல்லாத உலகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்…. அவ்வளவு தான்!
2017ம் ஆண்டிலிருந்து தன்னை விண்வெளித் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள அமெரிக்காவின் விமானப் படை வருடத்திற்கு ஒரு முறை விண்வெளித் தற்காப்பு ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது. ரெட் டீம் என்னும் சிவப்புப் படை ஒன்றைத் தயார் படுத்தி அது தாக்க வரும் போது எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்ற ஒத்திகைப் பயிற்சி இதில் நடத்தப்படுகிறது.
ரஷியா தான் முதன் முதலாக 1992ம் ஆண்டு விண்வெளிப் படை ஒன்றைத் தனக்காக உருவாக்கியது. ஆனால் இது பின்னர் அதன் விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.
2025ம் ஆண்டைப் பொறுத்த வரையில் சீனாவும் அமெரிக்காவும் மட்டுமே தனி விண்வெளிப்படையை அமைத்துக் கொண்டுள்ளன.
ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் விமானப்படைக்கு விண்வெளிப் படை என்ற மாற்றுப் பெயரைத் தர ஆரம்பித்துள்ளன.
ஒன்று மட்டும் நிச்சயம். இப்படிப்பட்ட ஏராளமான தகவல்களினால் நமக்குத் தெரிய வருவது விண்வெளிப் போர் ஏற்கனவே துவங்கி விட்டது என்பது தான்!
தரையிலும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்; விண்ணிலும் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான்!
***