
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,997
Date uploaded in London – —18 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
17-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
மரகதப் பச்சை காஷ்மீர் பள்ளத்தாக்கு!
ச. நாகராஜன்

உலகின் எழில் மிகுந்த இடங்களில் முன்னணியில் நிற்பது எது?
தயங்காமல் பதில் சொல்லலாம் – பாரதத்தின் எழில் மிகு மரகதப் பச்சை காஷ்மீர் தான் என்று!
இமயமலைச் சிகரங்கள் வானளாவ உயர்ந்து நிற்க பச்சைப் பசேலென ஒரு பள்ளத்தாக்கு! அது தான் காஷ்மீர்!
பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும் கவிஞரான கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட மன்னர் பரம்பரையைப் பற்றி ராஜ தரங்கிணி என்ற தனது நூலில் எட்டு அத்தியாயங்களில் அருமையாக விவரிக்கிறார்.
தரங்கம் என்றால் அலை என்று பொருள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தரங்கம்! ராஜதரங்கிணி என்றால் மன்னர்களின் நதி என்று பொருள்.
ஒரு காலத்தில் இந்த இடம் முழுவதும் நீரால் நிரம்பிய மாபெரும் ஏரியாக இருந்தது. இங்கு நீருக்கடியில் ஜலோத்பவன் என்ற ராக்ஷஸன் வசித்து வந்தான். அவனது கொடுமைகள் தாங்காமல் தேவர்கள் அலறினர். பிரம்மாவின் பேரரான கஸ்யப முனிவர் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். தனது மந்திரவாளால் ஏரியின் நடுவில் ஒரு கீறு கீறினார். அவ்வளவு தான் . ஜலம் அனைத்தும் வற்றி விட்டது.
ராக்ஷஸன் திகைத்து மரித்தான்.
இந்தப் பகுதியைப் பார்த்து வியந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அயர்லாந்து கவிஞரான தாமஸ் மூர் இதை பூவுலகின் ஈடன் என்று வர்ணித்தார்.
ஆறு கோடி வருடங்களுக்கு முன்னே இமயமலை அடுக்குகள் உருவாயின. அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கும் உருவானது.
இது 3000 அடி ஆழமானது. 87 மைல்கள் நீளமானது. 20 மைல் அகலம் கொண்டது.
மலையிலிருந்து பனி உருக, அதனால் பாய்ந்து வரும் நீர் வெள்ளமென வந்து ஒரு ஏரியை உருவாக்கியது.
காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு இப்போதைய அழகிய இயற்கைச் சூழலில் இது அமைந்துள்ளது.
ஜீலம் நதி இதன் வழியே ஓடி பல மாற்றங்களைச் செய்தது.
5000 அடி உயரத்தில் அமைந்துள்ள காஷ்மீரின் காலநிலை அற்புதமானது; அனைவரும் விரும்பக் கூடியது.
1585ம் வருடம் காஷ்மீரை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அக்பர் இதை பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தார்.இதை தனது கோடைக்காலத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார்.
அக்பரின் மகனான ஜஹாங்கீர் மரணப் படுக்கையில் இருக்கும் போது “உங்களது கடைசி ஆசை என்ன?” என்று கேட்ட போது, “காஷ்மீர் ஒன்று தான்” என்று ஜஹாங்கீர் பதில் அளித்தார்.
இங்குள்ள அழகிய நகரமான ஶ்ரீ நகரைப் பார்த்து வியக்காதவரே இல்லை.
இதன் அழகைப் பார்த்து வியந்த பிரிட்டிஷார் இங்கு ஓடோடி வந்தனர். ஆனால் காஷ்மீர் மஹாராஜா அவர்கள் நிலத்தை வாங்கி உரிமையாக்கிக் கொள்ள தடை விதித்தார். ஆகவே அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் வசிக்க முடியாமல் படகு வீடுகளில் அவர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.
இந்த மலைத்தொடரில் ஶ்ரீ நகருக்கு வடகிழக்கே 87 மைல் தொலைவில் ஹிந்துக்களின் புனிதத் தலமான அமர்நாத் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து சிவபிரானைத் தொழுது அருள் பெறும் இடம் அமர்நாத் குகை.இங்குள்ள சிவலிங்கத்தின் மஹிமையை அனைவரும் உணர்வர். குகை ஒன்றின் உள்ளே அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பனிக்கட்டியால் ஆனது. மே முதல் ஆகஸ்ட் வரை இது உருகி மீண்டும் உருப்பெருகிறது. சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக்கு இணங்க இது உருமாறுவது ஒரு பெரிய அதிசயமே.
தங்கத்திற்குச் சமமாக மதிக்கப்படும் காஷ்மீர் குங்குமப் பூ இங்கு விளைகிறது.
இங்கு வந்த யாத்ரீகரான அமிர் குஸ்ரூ, “ பூவுலகில் சொர்க்கம் என்று ஒரு இடம் இருக்குமானால் அது இது தான்! இது தான்! இதுவே தான்” என்று மகிழ்ந்து எழுதினார்.
***