Written by London Swaminathan
Post No. 15,013
Date uploaded in London – 22 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 21 -ம் தேதி 2025-ம் ஆண்டு
****
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயம்; தலைமை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என, எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும் அதிகமான கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்:
சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன.
38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல.
இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விபரங்களும் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி தொலைந்தன; அதற்கான காரணம் என்ன? 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள காப்பங்களில் வைக்கப்பட்டு இருக்கிறதா? அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால், வழக்கு எந்த நிலையில் உள்ளது? இதற்கான விளக்கங்களை தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்றால், தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


*****
திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்
‘திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை’ என, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ வைத்திருக்கிறது. மேலும், ‘கோவில் நிதியை, அரசுக்கு வரும் நிதியாக கருதக் கூடாது’ என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கோவில் நிதியில் இருந்து 80 கோடி ரூபாய் செலவில், 27 கோவில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்’ என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அரசாணை ரத்து கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவது என்பது, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை. கோவில் நிதியை மத ரீதியான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
‘கோவில் நிதி என்பது வர்த்தக நடவடிக்கைகளுக்காக அல்ல. அதில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்’ எனக் கூறி, கடந்த ஆக., 19ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருமண மண்டபங்களை கட்ட வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தவில்லை.
விசாரணை தேவை
கோவில் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக அவர்கள் காணிக்கை செலுத்தி இருக்கலாம். கோவிலில் திருமண மண்டபங்கள் கட்டி, திருமணங்கள் நடந்தால், அனைத்து விதமான மோசமான பாடல்களும் அங்கே ஒலிக்கும். இதற்காக தான் கோவில் நிலங்கள் இருக்கிறதா?திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு பதிலாக, அந்த நிதியை கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நற்காரியங்களுக்காக செலவிடலாம்.
இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு வரவில்லை. இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, மனு தாரர்களுக்கு ஆதரவாக எந்தவொரு இடைக்கால உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் நவ., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .
*****




சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ வரை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைகேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர்.
கோவில் திருமுற்றத்தில், அய்யப்பன் சன்னிதிக்கு முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது.க்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவை, 40 ஆண்டுகள் வரை பழுது இல்லாமல் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஆறே ஆண்டு களுக்குள் கவசத்தில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து, பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த, 1999ல் தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவாக இருந்த நிலையில், 2019ல் பழுது பார்ப்பதற்காக அகற்றி, சென்னைக்கு கொண்டு செல்லும் போது நான்கு கிலோ குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில்தான், தங்க கவசத்தின் எடை குறைந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
****
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதங்கம் !
மத்திய பிரதேசத்தின் கஜூராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை புனரமைப்பது குறித்த வழக்கு விசாரணையின் போது, ‘சிலையிடமே கேட்க வேண்டியது தானே’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதையடுத்து, ‘அவர் ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்கிறார்’ என, ஹிந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ கோவில் சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை.
இந்த கஜூராஹோ கோவிலின், ஒரு பகுதியான ஜாவரி கோவிலில், ஏழு அடி உயர விஷ்ணு சிலை சேதமடைந்த நிலையில், அதை புனரமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நலத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை.
விளம்பர நோக்கம் பொது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி, தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, இவ்வழக்கு குறித்து தலைமை நீதிபதி பி .ஆர்.கவாய் கூறியதாவது:
விளம்பர நோக்கத்திற்காகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலையை புனரமைப்பது குறித்து கடவுளிடமே சென்று கேளுங்கள். மகா விஷ்ணுவின் தீவிர பக்தர் என நீங்கள் கூறுவதால், அவரிடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக நீதிமன்றத்தை நாடி வந்தீர்கள். சிலையை புனரமைப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல. அது தொல்லியல் துறையின் வேலை.
சிலையை புனரமைக்கும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. இதை விட, உச்ச நீதிமன்றத்திற்கு பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன.கஜூராஹோ கோவில் வளாகத்திற்குள்ளேயே மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கிறது. சைவ சமயத்தின் மீது உங்களுக்கு வெறுப்பு இல்லை என்றால், அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
நம்பிக்கை அவரது இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறிய நிலையில், ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை தலைமை நீதிபதி கேலி செய்துவிட்டார் என, விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளதாவது:
நீதியின் கோவில் நீதிமன்றம். நீதிமன்றங்கள் மீது இந்திய சமூகம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த நம்பிக்கை வெறும் பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், வலுவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
குறிப்பாக நீதிமன்றத்திற்குள் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். அதற்கான கடமை மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கும் இருக்கிறது. ஆனால், அந்த கடமையை தலைமை நீதிபதி மறந்து விட்டாரோ என தோன்றுகிறது.
சிலை புனரமைப்பு வழக்கில் அவர் கூறிய கருத்து, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வது போல இருக்கிறது. இப்படியான கருத்துகளை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் நீதிபதி மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது
****
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் அறிக்கை
வட மதுரையில் பழமைவாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது.
ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசை வாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
****
திருவண்ணாமலையில் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு!


உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சென்ற சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆன்மிக கலாசார ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
1,008, சிவாச்சாரியார்கள், அண்ணா மலையார் மலையை நோக்கி அமர்ந்து, சிவ பூஜை செய்தனர்.
இதை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத மந்திரங்கள் முழங்கி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டு வளாகத்தில் கோ பூஜை நடந்தது. இதில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர்.
****
கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில்,’ஏற்கனவே அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். கோயிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோயில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோயிலைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.
****

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து
எழுபத்தைந்து வயதான பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுதுமுள்ள இந்து மதத் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்; செப்டம்பர் பதினேழாம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
!பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தருமபுரம் ஆதின மடாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
பாரத மாதாவுக்கு நீங்கள் செய்யும் அயராத சேவையும், சனாதனத் தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான உங்கள் பக்தியும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் 1000வது ஆண்டு புனிதப் பிரதிஷ்டை போன்ற உங்கள் வரலாற்று முயற்சிகளை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
ஞானம், தைரியம் மற்றும் இரக்கத்துடன் தேசத்திற்குத் தொடர்ந்து சேவைச் செய்ய பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 28–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 21 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi, Latha