பூமியைக் காக்கும் புதிய பாக்டீரியா – சாங்கஸ் (CHONKUS)  – கண்டுபிடிப்பு! (Post 15,011)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,011

Date uploaded in London – 22 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

21-9-25 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!

பூமியைக் காக்கும் புதிய பாக்டீரியா – சாங்கஸ் (CHONKUS)  – கண்டுபிடிப்பு!

நாகராஜன்

இன்று பூமியை பயமுறுத்தும் முதல் அச்சுறுத்தல் தட்பவெப்ப நிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் தான்!

இதனால் பல உயிரினங்கள் அழிந்துபடும், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை ஓரமுள்ள எண்ணற்ற நகரங்கள் அழியும்; லட்சக்கணக்கில் மக்கள் வேற்றிடம் தேடி ஓட வேண்டும். அல்லது அழிய வேண்டும்.

இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதற்கான காரணம் க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, மெதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை மிக அதிக அளவில் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலப்பதால் தான். இதனால் புவியின் வெப்பம் மிக மிக அதிகமாகிறது. லட்சக்கணக்கான வாகனங்கள் உலகெங்கும் இயக்கப்படுவதால் அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையே இதற்குக் காரணம்.

இதை எப்படித் தடுப்பது என்று விஞ்ஞானிகள் திகைத்து வாகனப் பயன்பாட்டைக் குறையுங்கள்; படிம எரிபொருளான டீஸல்,

பெட்ரோலை மிக மிக குறைவாக பயன்படுத்துங்கள் என்று ஓங்கிய குரலில் உலகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் சில விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக இத்தாலியில் உள்ள எரிமலைத் தீவிற்குச் சென்றனர். அங்கு எரிமலை வெடிப்பானது நீருக்கு அடியில் ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடை கரைத்திருக்கும் என்பதாலும் இந்த நிலை சயானோபாக்டீரியா (Cyanobacteria –நீலப்பசும் நுண்ணுயிரி) என்ற பாக்டீரியாவை வளர்க்க உதவும் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.

அங்கு அவர்கள் இரண்டு புதிய பாக்டீரியாக்களைக் கண்டனர்.

ஒன்று UTEX 3154  இன்னொன்று UTEX3222. இதில் UTEX3222 மிகப் பெரியதாக இருந்தது. கொழுத்து இருந்த இதற்கு செல்லப்பெயராக ‘சாங்கஸ்’ (CHONKUS – கொழுத்தது) என்ற பெயரை அவர்கள் இட்டனர். இதனால் தட்பவெப்ப மாறுதலைத் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இது ஒருவகை பாசி ஆகும் (ஆல்கா).

இது கார்பன் டை ஆக்ஸைடை தாவரங்களை விட மிக அதிக அளவில் உறிஞ்சி விடும்.

தாவரங்களை விட இது இரு மடங்கு அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு ஒரே சந்தோஷம். பெரிய அளவில் இதை உருவாக்கி க்ரீன் கேஸ் வாயுக்கள் எனப்படும் பசுமை வாயுக்களின் நச்சுத் தன்மையை ஒழிக்கலாம் என்று அவர்கள் திட்டமிடுகின்றனர்/

சாங்கஸ் ஒரு சயானோபாக்டீரியா என்பதால் இது வெகு வேகமாக வளரும். அதிக அடர்த்தி கொண்டதாகவும் இது இருக்கிறது. சயானோ பாக்டீரியா வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றும் வல்லமை படைத்தது. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது.

ஆகவே, “சாங்கஸ் நமக்கு நம்பிக்கை தரும் ஒரு நல்ல பாக்டீரியாவாக இருக்கும்; இதை வைத்து புவி வெப்பமயமாதலைத் தடுத்து விடலாம்” என்கிறார் ஆய்வின் தலைவரான மாக்ஸ் ஷூபெர்ட் (Max Schubert)  என்ற விஞ்ஞானி. 

எது எப்படி இருந்தாலும், உலகில் வாழும் அனைத்து மக்களும் புவி வெப்பமயமாதலைத் தங்கள் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தொழிலகம் வெளிவிடும் நச்சுப்புகையைத் தடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் ‘சாங்கஸ்’ பாக்டீரியாவும் கூடவே சேர்ந்து புவி வெப்பமயமாதலைத் தடுக்க உதவும். 

உலக மக்களுக்கு ஒரு ஆறுதலாகவும் நிம்மதிப் பெருமூச்சு விடவும் உதவும் சாங்கஸுக்கு ஒரு சபாஷ் போட்டு வரவேற்போம்!

****

Leave a comment

Leave a comment