
Post No. 15,042
Date uploaded in London – – 1 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கதைகள்
MOTIVATION STORIES
குரங்கு பிடிக்கும் விதம்!
ச. நாகராஜன்
குரங்கு பிடிக்கும் விதம்!
விடாப்பிடியான சிறுவன் ஒருவனை அவனது தந்தை அருகில் அழைத்தார். எதிலாவது ஒன்றில் மூக்கை நுழைத்து அவன் படும் அவஸ்தையைப் போக்க விரும்பினார் அவர்.
சிறுவனைப் பார்த்து அவர் “உனக்கு குரங்குகளை வேட்டையாடுவோர் எப்படி அவற்றைப் பிடிக்கிறார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டார்.
பின்னர் அதை விவரிக்க ஆரம்பித்தார்: “முதலில் ஒரு பெரிய கண்னாடி ஜாடியில் கீழே குரங்குக்கு மிகவும் பிடித்தமான உணவை அவர்கள் வைப்பார்கள். ஜாடியின் கழுத்து மிகவும் குறுகலாக இருக்கும்.
உணவைப் பார்த்த குரங்கு ஜாடிக்குள்ளே கழுத்தை விடும்.உணவைக் கவ்வும். உள்ளே போன கழுத்து வெளியே வராது. குரங்கு உணவை விட்டுவிட மனமில்லாமல் இருக்கும். அதே சமயம் ஜாடியில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் கத்தும். அந்தச் சமயத்தில் மறைந்து இருக்கும் வேட்டைக்காரர்கள் அங்கு வந்து அதைப் பிடிப்பார்கள்”.
இப்படி அவர் விவரித்தவுடன் பையனுக்கு விஷயம் புரிந்தது.
எப்போது ஒரு விஷயத்தைத் தொடக்கூடாது, அதில் புகுந்து தன்னையே இழக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலவற்றை அப்படியே விட்டு விட்டு நம் எதிர்காலத்தை வேறு பாதையில் அமைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். – இதை அந்த புத்திசாலி சிறுவன் உடனேயே உணர்ந்து கொண்டான்.
தன் வெற்றுப் பிடிவாதத்தையும் தேவையற்றதில் மூக்கை நுழைத்துத் திண்டாடுவதையும் அவன் அன்றிலிருந்து நிறுத்தினான்.
ஒரு மீனவனும் ஒரு பிரபல தொழிலதிபரும்!
ஒரு பிரபல தொழிலதிபர் ஒருநாள் கடற்கரையோரமாக நடந்து கொண்டிருந்தார். அங்கு ஒரு மீனவன் ஏராளமான மீன்களைப் பிடித்துத் தன் கூடையில் நிரப்பித் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
ஏராளமான மீன்களைப் பார்த்த தொழிலதிபர் ஆச்சரியப்பட்டு மீனவனிடம் எவ்வளவு நேரம் மீன் பிடித்தாய்? என்று கேட்டார்.
அதற்கு அவன், “நிறைய நேரம் இல்லை. கொஞ்ச நேரம் தான். காலையில் வந்தேன். இதோ இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்புகிறேன்” என்றான்.
தொழிலதிபர், “அட இவ்வளவு மீன்களைப் பிடித்திருக்கிறாய். இனிமேல் என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“வீட்டுக்குப் போவேன். ஜாலியாக குடும்பத்துடன் நேரத்தைக் கழிப்பேன். மாலை ஆனவுடன் நகர மன்றத்திற்குச் சென்று நண்பர்களுடன் பொழுதைப் போக்குவேன்” என்றான் அவன்
உடனே தொழிலதிபர், “இன்னும் கொஞ்ச நேரம் மீன் பிடித்தால் நிறைய மீன்கள் கிடைக்குமே” என்றார்.
“அதை வைத்து என்ன செய்வது. இப்போது பிடித்தவற்றில் கூட அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் தருகிறேனே” என்றான் மீனவன்.
“நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா? இன்னும் அதிகமாக மீன்களைப் பிடி. அவற்றை விற்று நிறையப் பணம் சம்பாதிக்கலாம். அந்தப் பணத்தை வைத்து உனது சிறிய படகை விட்டு விட்டு. பெரிய படகு வாங்கலாம். அதனால் வரும் பணத்தை வைத்து ஒரு விட்டைக் கட்டலாம்” – தனது வணிக மூளையைப் பயன்படுத்தி மீனவனுக்கு அறிவுரை வழங்கினார் தொழிலதிபர்.
“அப்புறம்?” என்று கேட்டான் மீனவன்.
“பின்னர் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் சுகமாக நேரத்தைக் கழிக்கலாம். மாலை வேளைகளில் நண்பரகளுடன் கூடி அளவளாவி மகிழலாம்” என்றார் தொழிலதிபதிர்.
“அதைத்தானே நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.
நீதி என்ன?
உனக்கு மகிழ்ச்சி தரும் வாழ்க்கை அமைந்து விட்டால் அதை அப்படியே தொடர வேண்டும். மன அழுத்தமும் அதிக வேலைப் பளுவும் சந்தோஷத்தையும் அமைதியையும் பறிக்கும்.
திருப்தியான வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை!
***