

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,045
Date uploaded in London – – 2 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 2 காந்திஜி ஜெயந்தி
நீங்கள் தலைவனாக வேண்டுமா?
ச. நாகராஜன்
ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஒருவனே தலைவனாக ஆகிறான்.
ஏன்?
ஏனெனில் தலைவனுக்கே உரிய சில அரிய குணங்கள் ஒருவனிடம் அமைந்திருப்பதால் தான் அவன் தலைவனாகிறான். அந்த அரிய குணங்களை இனம் கண்டே மற்றவர்கள் அவனைத் தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
தலைவனுக்கே உரிய சில முக்கியமான குணங்களை நீங்கள் கொண்டு விட்டால் நீங்களும் தலைவன் தான்!
தலைவனாக ஆக முக்கிய குணங்கள் எவை எவை, என்று பார்க்கலாமா?
ஒருமுனைப்பட்ட கவனம்
எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுனைப்பட்ட கவனம் இருந்தால் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் சரியான முடிவை எடுக்க முடியும். தேவையற்ற விஷயங்களை முதலில் ஒதுக்கி விட வேண்டும்.
தன்னம்பிக்கை
தெளிவான பார்வையுடன் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் சென்றால் தான் மற்றவர்கள் நம்மைப் பின் தொடர்வார்கள். முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில் இல்லை என்றான் மாவீரனான நெப்போலியன்!
ஒளிவுமறைவற்ற தன்மை
எதையும் உள்ளது உள்ளபடி விளக்குபவரே ஒரு தலைவராக ஆக முடியும். ஒரு முகமூடியை அணிந்து கொண்டு மக்களிடையே சென்று யாராலும் நல்ல பெயர் வாங்கமுடியாது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது பொருந்தும். தன்னமலற்ற அணுகுமுறையை எந்த ஒரு சாமானியனும் கூட எளிதாகப் புரிந்து கொண்டு விடுவான்.
ஊக்கமூட்டும் தன்மை
பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் நடத்தையினாலும் எவர் ஒருவர் மற்றவருக்கு ஊக்கம் ஊட்டுகிறாரோ அவரே தலைவராக ஆக முடியும்.
ஆழந்த நுண்ணறிவும், மொழியில் எழுதுகின்ற திறமையும், பேச்சால் மற்றவரைக் கவரும் திறமையும் வேண்டும். இடைவிடாத படிப்பும் பெரிய வட்டத்தில் அனைவருடனும் பழகி முக்கியமான விஷ்யங்களை கிரகிக்கும் தன்மையும் வேண்டும்.
குறிக்கோளில் பற்று.
குறிக்கோளின்றிக் கெட்டேனே என்றார் திருநாவுக்கரசர். ஒரு குறிக்கோள் இல்லாதவர் எதைத் தான் அடைய முடியும்?
அந்த லட்சியத்திற்காகவே வாழ்ந்து அதை அடைய வேண்டும். மகாத்மா காந்தியடிகள் சுதந்திரமே லட்சியமாகக் கொண்டார். அதற்கென தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
புது வழிகள் கண்டுபிடிப்பு
லட்சியத்தை அடைய புதிய புதிய நுட்பமான வழிகளை இனம் காணுதல் வேண்டும். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இயக்கங்களைக் கண்டார். அதை ,மக்களிடம் கொண்டு சென்றார். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். வெற்றியைக் கண்டார்.
பொறுமை
பொறுமையும் நிதானமும் வெற்றிக்கான படிகள். எந்த ஒரு விஷயத்திலும் உடனடி வெற்றி என்பது கிடையாது. இதிஹாஸ புராணங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கொண்டாலும் சரி பெரியோரின் வாழ்க்கையை வளப்படுதியது பொறுமையும் நிதானமும் தான் என்பதை அறியலாம்.
பாண்டவர்களும் வனவாசத்தை அனுபவித்து மாபெரும் யுத்தத்தை மேற்கொண்டெ வெற்றி பெற்றார்கள். இராமனும் கூட பத்துத் தலைகளுடன் மூன்று கோடி வாழ்நாள் கொண்ட, பெரும் அஸ்திரங்களைக் கொண்ட ராவணனை நிதானத்துடன் அணுகி அவனுக்கு இன்று போய் நாளை வா என்ற ஒரு கடைசி வாய்ப்பையும் கொடுத்த பின்னரே வெற்றியைக் கண்டார்.
திறந்த மனம்
திறந்த மனதுடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுக வேண்டும்;
அனைவர் சொல்வதையும் கவனித்துக் கேட்க வேண்டும். நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நல்ல முடிவை மற்றவர் ஏற்றுக் கொள்ளும்படி தருதல் வேண்டும்.
திறமை
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திறன் மிக்கவராகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இடையறாத முயற்சி தேவை. சுறுசுறுப்பும் புதியனவற்றைக் கற்றுத் தேர்ந்து நிபுணனாக ஆகிவிடும் வல்லமையும் வேண்டும்.
ஜென் காட்டும் துறவியின் கதை!
ஜென் பிரிவு காட்டும் சின்ன கதை ஒன்று உண்டு.
ஒரு வில் வீரன் தனது திறமையின் மீது அபார கர்வம் கொண்டவன்.
அவன் மற்றவர்கள் மதிக்கும் ஒரு துறவியிடம் சென்றான்.
“உம்முடன் தத்துவங்களையும் பெரிய நூல்களையும் பற்றி விவாதிக்க நான் வரவில்லை. ஒரே ஒரு சின்ன போட்டி தான். வில்வித்தையில் என்னுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா?” என்றான் அவன்.
துறவி சற்று நிதானமாக அவனிடம், ‘வா போகலாம்” என்றார்.
அவன் இரு மலைகளுக்கு இடையில் இருந்த பள்ளத்தாக்கில் கீழே இருந்த ஒரு மரத்தைக் காட்டி அதில் உள்ள கனியைக் குறி பார்த்து அடித்து வீழ்த்தப் போகிறேன் என்றான். அப்படியே செய்தான்.
“எப்படி என் திறமை! இப்போது உங்கள் முறை” என்றான் அவன்.
துறவி புன்முறுவல் பூத்தார்.
ஒரு பெரிய கயிறைக் கொண்டு வரச் சொன்னார். அதை மேலும் கீழுமாகச் சுழற்றி எதிர்த்த மலையை நோக்கி வீசினார். அது கச்சிதமாக தொலைவில் இருந்த ஒரு மரக்கிளையில் சுற்றி வலுவாக நின்றது.
கையில் வில்லுடன் அந்த ஒற்றைக் கயிறின் மீது நடந்து இரு மலைகளுக்கும் இடையே நின்றார் துறவி.
தொலைதூரத்தில் இருந்த ஒரு சிறிய மரத்தில் இருந்த ஒரு கனியைக் குறிபார்த்து அடித்தார். அது குறி தவறாமல் கனியைப் பறித்தது.
மீண்டும் தன் இடத்திற்கு வந்த துறவி அந்த வில்வீரனைப் பார்த்து, “இப்போது உன் முறை” என்றார்.
அவன் தன் கர்வம் ஒழிந்து அவர் காலில் விழுந்து துறவியின் சீடனாக ஆனான்.
மக்கள் பிரமித்தனர்.
இதுவரை தாங்கள் காணாத ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டிய அந்த துறவியைக் கொண்டாடினர். போற்றினர். வணங்கினர்.
தலைவனுக்கு வேண்டிய குணாதிசயங்கள் பல; அவை வெளிப்படும் தருணங்களும் பல
முயன்றால் தலைவனாக ஆகலாம்!
88