
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,058
Date uploaded in London – 6 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-25 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை!
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுதி ஏத்தி வணங்குமே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள திரு அன்பிலாலந்துறை என்னும் திருத்தலம் ஆகும்.
இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில், ஆலந்துறை போன்ற புராணப்பெயர்களை உடையது. தேவாரத் தலங்களில். காவிரியின் வடகரையில் உள்ள தலங்களில் 57வது தலமாக இது அமைகிறது.
இறைவன் திருநாமம் : பிரம்மபுரீஸ்வரர்,
சத்தியவாகீஸ்வரர், ஆலந்துறையார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இறைவி : சௌந்தர நாயகி
தல விருக்ஷம் : ஆலமரம்.
தீர்த்தம் : காயத்ரி தீர்த்தம் சந்திர தீர்த்தம்
இறைவன் இங்கு ஸ்வயம்புவாகவே உருவானவர். கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பிரம்மா தன் சாபம் நீங்குவதற்காகச் சிவனை வழிபட்டதால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் இங்கு பூஜித்த காரணத்தால் இறைவன் சத்தியவாகீஸ்வரார் என்ற பெயரைப் பெற்றார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆகவே அவரால் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அப்போது அவர் தூரத்திலிருந்தே பாடலைப் பாட,, விநாயகர் அவருக்குச் செவி சாய்த்துக் கேட்டார். ஆகவே விநாயகர், செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அவர் அமர்ந்து ரசிக்கும் ஒரு காட்சியை சிற்பி ஒரு சிற்பமாக வடித்தார். அந்தச் சிற்பத்தை இங்கு காணலாம்.
காதில் குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் குறை தீரும் என்பது ஐதீகம்.
முன் மண்டபத் தூணில் ஒரு பாம்பின் வால் ஒரு புறமும் அதன் தலை மறுபுறமுமாகக் கல்லினுள் நுழைந்து வந்திருப்பது போல ஒரு அழகிய சிற்பம் உள்ளது. இன்னொரு தூணில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்க, அவற்றின் மத்தியில் சிவலிங்கம் இருக்கும் சிற்பம் உள்ளது. முருகபிரான் சிவலிங்கத்தை வழிபடும் இன்னொரு சிற்பமும் இங்கு அழகுற அமைந்துள்ளது/
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இக்கோவில்.
கோவிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. காசிக்குச் சமமான தலமாக இரு கருதப்படுகிறது. மாடக்கோயிலாக இருந்த இக்கோவிலை பராந்தக சோழன் விரிவுபடுத்திக் கட்டினான்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப்பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்
– திருமழிசை ஆழ்வார் திருவடி போற்றி
திரு அன்பில் 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும்.
மூலவர் : வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர் : சுந்தர ராஜன்
தாயார் : அழகியவல்லி நாச்சியார்
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம் – கொள்ளிடம்
விமானம் : தாரக விமானம்
காட்சி கண்டவர்கள் : சிவன், பிரம்மா, ஊர்வசி
மூன்றடுக்கு ராஜகோபுரத்தை இக்கோவில் கொண்டுள்ளது. ஆதிசேஷன் மீது சாய்ந்தவாக்கில் சுந்தராஜப் பெருமாள் காட்சி அளிக்கிறார். ஏழே ஏழு தலங்களில் தான் இப்படி சாய்ந்தவாக்கில் தரிசனம் தரும் காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
மஹரிஷி சுதாபர் என்பவர் நீரினுள் அமிழ்ந்து தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் துர்வாச முனிவர் இவரைக் காண வந்தார். நெடுநேரம் காத்திருந்தும் நீரிலிருந்து ரிஷி வெளியில் வரவில்லை. தன்னை அவர் அலட்சியப்படுத்தி விட்டார் என்று கோபம் கொண்ட துர்வாசர் அவரை ஒரு மண்டூகமாக ஆகுமாறு சாபம் கொடுத்தார். மண்டூகம் என்றாள் தவளை என்று பொருள். அந்த ரிஷியும் ஒரு தவளையாக மாறி மண்டூக மஹரிஷி என்ற பெயரைப் பெற்றார். அங்கேயே மஹாவிஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்து வந்தார்.
அவரது தவத்தை மெச்சிய விஷ்ணு அவருக்குக் காட்சி தந்து அவரது சாபத்தை நீக்கினார். ஆகவே இந்தத் தலத்திற்கு மண்டூகபுரி என்ற ஒரு பெயரும் உண்டு.
சோழ சரித்திர வரலாற்றின் படி சுந்தர சோழன் எதிரிகளை வெல்ல போருக்குப் புறப்படும் முன்னர் இங்கு வந்து தன் உடைவாளை பெருமாளுக்கு முன் வைத்து வணங்கிச் சென்றான் என்றும் போரில் வெற்றி பெற்றான் என்றும் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. ஆகவே தனது நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான நிலங்களை இறையிலி நிலமாக இக்கோவிலுக்கு அவன் அளித்தான் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரரும் சௌந்தரநாயகி அம்மனும், வடிவழகிய நம்பியும், அழகியவல்லி நாச்சியாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.