
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,082
Date uploaded in London – 13 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-10-25 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.
வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்தென்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளூம் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே
திருமங்கை ஆழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் குத்தாலம் வட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இரண்டாவது ரயில் நிலையமாக அமையும் திருவழுந்தூர் திருத்தலம் ஆகும். இத்தலம் தேரழுந்தூர் என்று அறியப்படுகிறது.
108 வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றாக அமையும் இது பல புராணச் சிறப்புகளைக் கொண்டதாகும்.
மூலவர் : தேவாதிராஜன்.
கோசகன் என்று வடமொழியில் இப்பெருமாளைக் குறிப்பது வழக்கம். இச்சொல்லின் தமிழாக்கம் ஆமருவியப்பன் என்பதாகும். 13 அடி உயரமுள்ள சாளக்கிராமத்தில் மூலவர் விக்ரஹம் அமைந்துள்ளது. பெருமாளுடன் இங்கு பிரகலாதனும் கருடனும் உள்ளனர்.
தாயார் : செங்கமலவல்லி
உற்சவர் : ஆமருவியப்பன்
விமானம் : கருட விமானம்
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி
இத்தலத்திற்கு வந்து காட்சி கண்டவர்கள் பலர். தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர் உள்ளிட்ட பலருமாவர்.
மூலவர், உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கின்றனர்.
மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.
இந்தத் தலத்திற்கு பெயர் வந்தது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
உபரிசரவசு என்னும் ஒரு அரசன் மிகுந்த தவ வலிமை உடையவன். அவன் தனது விமானத்தில் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்தவன். ஒரு சமயம் தேவர்களுக்கும் முனிவர்களும் ஒரு விவாதம் ஏற்பட்டது. அதில் ஒருதலைப்பட்சமாக உபரிசரவசு திர்ப்பளிக்க கோபம் கொண்ட ரிஷிகள் அவனை சபித்தனர். ஆகவே விமானத்துடன் அவன் கீழே விழுந்தான். இந்தத் தலத்தில் உள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது.
கிருஷ்ணாரண்யம் என்று புராணம் இந்தத் தலத்தைக் குறிப்பிடுகிறது.
தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அங்கு சென்று அவரவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அதன் படி மைசூரில் உள்ள செல்லப்பிள்ளை பெருமாளுக்கு வைர முடியினையும் இங்குள்ள தேவாதிராஜனுக்கு விமானத்தையும் கருடன் அளித்தார். இதனால் மகிழ்ந்த பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.
இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணம் சிறப்பான ஒரு வரலாற்றைக் கூறுகிறது.
கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் பசுக்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றான். அப்போது அங்கு வந்த பிரம்மா பசுமந்தையை தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டார். இதனை அறிந்த கண்ணன் உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலேயே உடனே படைத்து விட்டான். தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணனிடம் மன்னிப்பு வேண்ட கண்ணனும் அருளினான். பிரம்ம தேரழுந்தூரில் கோவில் கொள்ள வேண்டுமென்று வேண்ட, அதை ஏற்ற கண்ணன் இங்கு வந்து அருள்பாலிக்க ஆரம்பித்தான்.
இதைத் தெரிவிக்கும் வண்ணம் உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளது.
இன்னொரு வரலாறும் உண்டு. சிவனும் பெருமாளும் ஒரு முறை சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். பார்வதி தேவி நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் வர பார்வதி தேவி பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பை அளித்தார். இதனால் வெகுண்ட சிவபிரான் பார்வதி தேவியை பசுவாக மாறும்படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாற துணைக்கு சரஸ்வதியும் லட்சுமியும் பசுவாக மாறி கூடவே வந்தனர். இவர்களை மேய்ப்பவராக “ஆ”-மருவியப்பன் என்ற பெயருடன் பெருமாள் வந்தார். இத்தலத்தில் கோயில் கொண்டார்.
தமிழர் தம் வரலாற்றில் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடலகள் 65, 325,395 ஆகிய பாடல்கள் முதல் கரிகாலன் இந்த ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டதையும், நீடாமங்கத்திற்கு அருகில் உள்ள வெண்ணிப் பறந்தலையில் பதினோரு குறு நிலமன்னர்களையும், சேர, பாண்டியரையும் போரிட்டு வென்றதையும் குறிப்பிடுகின்றன.
மொத்தம் 11 சந்நிதிகள் இங்கு உள்ளன. கோயிலின் எதிரே திருக்குளம் உள்ளது.
இந்தத் தலத்தில் திருமங்கையாழ்வார் 45 பாசுரங்கள் அருளி மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாளமுனிகளும் தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருவழுந்தூருக்கு இன்னொரு மகத்தான சிறப்பும் உண்டு. இங்கு தான் ராமாயணத்தைப் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்தான்.
கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இங்கு கோவிலில் சிலைகள் உள்ளன.
கம்பன் பிறந்த ஊர், காவிரி தங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர் செம்பதுமத்
தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா
ஓதகத்தார் வாழும் அழுந்தூர் என்ற புலவர் புராணப் பாடல் இப்படி இந்த ஊரின் சிறப்பைத் தெரிவிக்கிறது.
இங்கு காணப்படும் கம்பர் மேடு என்ற பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
இப்போது இந்த இடத்தில் ஒரு அழகான மண்டபம் கட்டி கம்பன் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
‘திருமணத் தடையை நீக்கும் தலமாகவும் இது திகழ்கிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தேவாதி ராஜப் பெருமாளும் செங்கமலவல்லித் தாயாரும்
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**